ஆவின் பால் கொள்முதல் விலை 5-7 ரூபாய் வரை உயருகிறது? முதல்வர் விஜய் சட்டசபையில் அறிவிக்க வாய்ப்பு

  • சென்னை: வழக்கத்தைவிடவு ஆவின் பால் கொள்முதல் கடுமையாக சரிந்து வருகிறது. இந்த நிதியாண்டின் மே-ஜூலை மாதங்களில், கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்துடன் ஒப்பிடுகையில் ஆவின் நிறுவனத்தின் தினசரி பால் கொள்முதல் 4.35 லட்சம் லிட்டர் அளவுக்கு குறைந்துள்ளது. இதையடுத்து ஆவின் நிறுவனத்தை காப்பாற்றும் நடவடிக்கையில் அரசு இறங்கி உள்ளது. பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்திற்கு அதிக அளவில் பாலை வழங்க ஊக்குவிக்கும் வகையில், பசு பாலுக்கான கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ. 5-ம், எருமை பாலுக்கான விலையை லிட்டருக்கு ரூ. 7-ம் உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டிருக்கிறது. இதனால் ஆவின் பால் விலையும் உயர வாய்ப்பு உள்ளது.

    Advertisement

    குஜராத் அரசின் அமுல். கர்நாடகா அரசின் நந்தினி போன்ற அரசு பால் நிறுவனங்கள் மிக லாபகரமாகவும், வெற்றிகரமாகவும் இயங்கும் நிலையில், தமிழக அரசின் பால் நிறுவனமான ஆவின் மட்டும் நஷ்டத்தில் இயங்குகிறது.தனியார் பால் நிறுவனங்களை போல், விலையை உயர்த்தாதது முக்கிய காரணம் என்றால், இன்னொரு காரணம், பாலை தனியார் நிறுவனங்களுக்கு வழங்கவே பால் உற்பத்தியாளர்கள் ஆர்வம் காட்டுவதும் தான். ஏனெனில் ஆவினுக்கு கொடுப்பதை தனியாருக்கு தந்தால், பாலுக்கு அதிக பணம் கிடைப்பது காரணமாக உள்ளது. ஆவின் பால் கொள்முதல் விலை குறைவாக உள்ளதால்,பால் அளவு வெகுவாக குறைந்துள்ளது.

    Advertisement

    கடந்த 2025-26 நிதியாண்டின் மே-ஜூலை மாதங்களில், ஆவின் நிறுவனம் நாளொன்றுக்கு சுமார் 34.3 லட்சம் லிட்டர் பாலைக் கொள்முதல் செய்தது. ஆனால், இந்த ஆண்டு மே-ஜூலை மாதங்களில் இது நாளொன்றுக்கு 30.2 லட்சம் லிட்டராகக் குறைந்துள்ளது.

    இதனால் அரசு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்திற்கு அதிக அளவில் பாலை வழங்க ஊக்குவிக்கும் வகையில், பசு பாலுக்கான கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ. 5-ம், எருமை பாலுக்கான விலையை லிட்டருக்கு ரூ. 7-ம் உயர்த்த திட்டமிட்டிருக்கிறது. இப்படி கொள்முதல் விலையை அதிகரிப்பதன் மூலம், பல மாவட்டங்களில் பால் கலப்படம் (குறிப்பாக தண்ணீர் கலத்தல்) தொடர்பான சிக்கலைத் தீர்க்க உதவும் என்று அதிகாரிகள் நம்புகிறாரக்ள். ஏப்ரல் மாதம் முதல், கன்னியாகுமரி மற்றும் விருதுநகர் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்களால் கொள்முதல் செய்யப்பட்ட பாலில் சுமார் 90 சதவீதம், 4% கொழுப்பு மற்றும் 8% கொழுப்பு அல்லாத திடப்பொருட்கள் என்ற குறைந்தபட்ச தரநிலைகள் கூட எட்டப்படவில்லை.

    Advertisement

    அதேநேரம் தனியார் பால் நிறுவனங்களை பொறுத்தவரை பண்ணையாளர்களிடமிருந்து பால் வாங்கும்போதே 'லாக்டோமீட்டர்' மற்றும் சோதனைக் கருவிகள் மூலம் கொழுப்பின் அளவைக் கணக்கிட்டே லிட்டருக்கான தொகையைத் தீர்மானிப்பார்கள். கொழுப்புச் சத்து குறைந்தால் (தண்ணீர் கலக்கப்பட்டிருந்தால்) அதற்கேற்பப் பணத்தை கண்டிப்பாக குறைத்துவிடுவார்கள். ஆனால் ஆவின் அப்படி செய்வது கிடையாது. அதேநேரம் தர நிலைகளை எட்டும் பால்களுக்கு ஊக்கத்தொகை வழங்குகிறது.

    ஆவின் நிறுவனம் கடைசியாக 2022 நவம்பர் 3 அன்று கொள்முதல் விலையை உயர்த்தியது . அப்போது பசும்பால் விலை லிட்டருக்கு ரூ. 32-லிருந்து ரூ. 35-ஆகவும், எருமைப்பால் விலை ரூ. 41-லிருந்து ரூ. 44-ஆகவும் உயர்த்தப்பட்டது. டிசம்பர் 2023 முதல், 4% கொழுப்பு மற்றும் 8% SNF ஆகிய தரநிலைகளைப் பூர்த்தி செய்யும் பாலுக்கு மாநில அரசு கூடுதலாக ரூ. 3 ஊக்கத்தொகையை வழங்கியது. இதனால் பசும்பாலின் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ. 38-ஆகவும், எருமைப்பாலின் விலை ரூ. 47-ஆகவும் உயர்ந்தது.

    Advertisement

    இந்நிலையில் தமிழக சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் முதல்வர் விஜய், ஆவின் கொள்முதல் விலை மாற்றத்தை அறிவிப்பார் என்று அரசு தரப்பு வட்டாரங்கள் கூறுகின்றன. தற்போது, ​​ரூ. 3 ஊக்கத்தொகை உட்பட பசு பாலுக்கு லிட்டருக்கு ரூ. 38-ம், எருமை பாலுக்கு ரூ. 47-ம் ஆவின் நிறுவனம் வழங்கி வருகிறது. இந்த விலை உயர்வு அமலுக்கு வரும்போது, ​​பசு பாலுக்கான கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ. 43-ஆகவும், எருமை பாலுக்கான விலை ரூ. 54-ஆகவும் உயரும் என்று கூறப்படுகிறது.

    ஆனால் கொள்முதல் விலையை உயர்த்துவது போல் பால் விற்பனை விலையையும் அரசு உயர்த்த வேண்டியது அவசியமாகிவிடும். ஆனால் விலை அதே அளவிற்கு உயர்த்தப்படுமா என்பது தெரியவில்லை. தமிழ்நாட்டில் ஆவின் பாலை பொறுத்தவரை கடைசியாக ஆகஸ்ட் 2019-ல் 'ஸ்டாண்டர்டைஸ்டு' (standardised) மற்றும் 'டோன்ட்' (toned) பால் வகைகளின் சில்லறை விற்பனை விலையை ஆவின் நிறுவனம் லிட்டருக்கு ரூ. 6 உயர்த்தியது. ஆனால் 2001ம் ஆண்டு மே மாதம் ஆட்சிக்கு = வந்த திமுக அரசு பால் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்தது. அப்போதிருந்து, தரப்படுத்தப்பட்ட பால் லிட்டருக்கு ரூ. 44-க்கும், டோன்ட் பால் லிட்டருக்கு ரூ. 40-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தனியார் பால் நிறுவனங்களின் விலையை விட ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ. 20 முதல் ரூ. 22 வரை குறைவாக இருக்கிறது. கடந்த ஏழு ஆண்டுகளாக ஆவின் பால் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. விலை மாற்றம் குறித்த இதுவரை தமிழக அரசு எந்த முடிவும் எடுக்கவே இல்லை.. ஒருவேளை ஆவின் பால் விலை உயர்த்தப்படும் வாய்ப்பு உள்ளது.

    Advertisement

    ஆவினின் தினசரி பால் கொள்முதலை தற்போதைய அளவான சுமார் 30 லட்சம் லிட்டரிலிருந்து 39 லட்சம் லிட்டராக உயர்த்துவகொள்முதல் விலையை உயர்த்த விரும்புகிறது அரசு. தனியார் பால் நிறுவனங்கள் பசு பாலுக்கு லிட்டருக்கு சுமார் ரூ. 42 முதல் ரூ. 45 வரையிலும், எருமை பாலுக்கு ரூ. 50 முதல் ரூ. 55 வரையிலும் விலை வழங்குகின்றன. அரசு ஆவின் கொள்முதல் விலையை உயர்த்தினால், தனியார் பால் நிறுவனங்களையும் தங்கள் கொள்முதல் விலையை உயர்த்த காரணமாகும் என்கிறார்கள் அதிகாரிகள்.

    தமிழ்நாட்டில் மொத்தம் 9500 பால் உற்பத்தியாளர்கள் சங்கம் உள்ளது. ஒவ்வொரு கிராம பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்திலிருந்தும் கொள்முதல் அளவை 100 லிட்டர் அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாம். இதன்மூலம், சில வாரங்களுக்குள் ஆவின் நிறுவனம் தனது தினசரி கொள்முதலை சுமார் ஒன்பது லட்சம் லிட்டர் வரை அதிகரிக்கும் என்கிறார்கள். இந்த திட்டத்தின் மூலம் ஆவின் நிறுவனத்திற்கு பால் வழங்கும் சுமார் 3.6 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொள்முதல் விலை உயர்வால் ஆவின் நிறுவனத்தின் ஆண்டுச் செலவு சுமார் ரூ. 580 முதல் ரூ. 590 கோடி வரை அதிகரிக்கும்.. எனவே ஆவின் பால் விலை உயரவே அதிக வாய்ப்பு உள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது.

    English Summary

    Aavin milk procurement price set to rise by ₹5–₹7? Chief Minister Vijay likely to announce this in the Assembly.