சென்னை: இந்திய ரயில்களில் பயணம் செய்யும் ஏசி வகுப்பு பயணிகளுக்கு, கட்டணத்திலேயே படுக்கை விரிப்புகள், போர்வைகள், தலையணைகள், முக துண்டுகள் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படுகின்றன. இதற்காக வருடந்தோறும் கோடிக்கணக்கில் செலவு செய்யும் ரயில்வே நிர்வாகத்திற்கு, இப்போது ஒரு பெரிய ஷாக் தகவல் கிடைத்துள்ளது.. அதாவது பயணிகளின் வசதிக்காக வைக்கப்படும் இந்த பொருட்கள், திருடப்பட்டு விடுகிறதாம். அதை யார் திருடினார்கள்? என்ற விவரமும் ஆர்.டி.ஐ (RTI) மூலம் இப்போது அம்பலமாகியுள்ளது.
இந்திய ரெயில்வேயின் ஏ.சி.கோச்களில் பயணிகளுக்கு 1 போர்வை, 1 தலையணை, 2 படுக்கை விரிப்புகள், முகம் துடைக்க ஒரு துண்டு போன்றவை இலவசமாக வழங்கப்படுகின்றன.. ஆனால் இவைகளை எல்லாம் பயணிகள் சிலர், ரெயில் நிலையத்தை விட்டு இறங்கும்போது, தங்கள் உடைமைகளுடன் சேர்த்து கையோடு எடுத்து சென்றுவிடுகிறார்களாம்.
எனவே, ரெயில்களில் வழங்கப்படும் போர்வை, படுக்கை விரிப்புகள், துண்டு போன்ற அனைத்து பொருட்களும், அதே எண்ணிக்கையில் உள்ளதா? என்று ரெயில்வே ஊழியர்களுக்கு வாய்மொழியாக உத்தரவிடப்பட்டது.. அதன்படியே ரெயில்வே ஊழியர்களும் இந்த எண்ணிக்கையை கணக்கிட்டு வருகிறார்கள். அந்தவகையில், கடந்த 4 வருடங்களில், அதாவது 2022 ஜனவரி முதல் 2026 மே வரை, இந்திய ரயில்களில் சுமார் 1.27 கோடி பொருட்கள் காணாமல் போயுள்ளன. இதன் மொத்த மதிப்பு 104.51 கோடி ரூபாயாகும்.. தினந்தோறும் ஒவ்வொரு இரவும் சுமார் 8 லட்சம் பேர் ஏசி பெட்டிகளில் பயணம் செய்கிறார்கள். இதில் ஒவ்வொரு 1,000 பயணிகளில் ஒருத்தர் வீதம், தங்களுக்கு வழங்கப்பட்ட போர்வை, துண்டு அல்லது படுக்கை விரிப்பை தங்கள் பையிலேயே வைத்துக்கொண்டு வீட்டிற்கு எடுத்து சென்றுவிடுகிறார்களாம்.. திருடப்பட்ட பொருட்களின் கணக்கெடுப்பை பார்த்தால், முக துண்டுகளைத்தான் நிறைய பேர் திருடி சென்றுள்ளது தெரியவந்துள்ளது.. சுமார் 46.54 லட்சம் துண்டுகள் மாயமாகியுள்ளதாம். அடுத்ததாக, 41.13 லட்சம் படுக்கை விரிப்புகள், 23.59 லட்சம் தலையணை உறைகள், 12.95 லட்சம் போர்வைகள் மற்றும் 2.76 லட்சம் தலையணைகள் திருடப்பட்டுள்ளன. 4 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட, இப்போது இந்த திருட்டு சம்பவங்கள் 56 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த திருட்டில், வடமாநிலங்களில் உள்ள 10 ரயில்வே மண்டலங்கள் முன்னணியில் லிஸ்ட்டில் உள்ளன.. இதில் டாப்பில் ராஜஸ்தானின் பிகானேர் கோட்டம் 25.76 லட்சம் பொருட்களுடன் முதலிடத்தில் உள்ளது. அடுத்தடுத்த இடங்களில் ராஞ்சி, டெல்லி, மும்பை, ஜோத்பூர் மற்றும் அகமதாபாத் ஆகிய கோட்டங்கள் வருகின்றன. குறிப்பாக, ரயில்வே ஸ்டேஷனை விட்டு இறங்கும்போதே பயணிகள் இந்த பொருட்களைத் தங்கள் உடைமைகளுடன் சேர்த்து எடுத்துச் செல்வதை அங்கிருக்கும் ரயில்வே ஊழியர்களும் கவனித்துள்ளனர். இந்த திருட்டுதான், ரயில்வே அதிகாரிகளுக்குப் பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இந்த இழப்புகளைத் தடுக்கவும் ரயில்வே நிர்வாகம் இறங்கியுள்ளது. ரயில்களில் வழங்கப்பட்ட அதே எண்ணிக்கையில் பொருட்கள் திரும்பக் கிடைக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அதனால் ரயிலில் இருந்து பயணிகள் இறங்கும்போதே ஊழியர்கள் இப்போது சோதனைகளில் ஈடுபட்டு வருகிறார்களாம். கோடிக்கணக்கான பொது மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் இந்த சேவையில், பொறுப்பற்ற சில பயணிகளின் செயலால் ஒட்டுமொத்த ரயில்வே நிர்வாகமும் நஷ்டத்தை சந்தித்து வருகிறது... இதுபோன்ற செயல்கள் தொடர்ந்தால், எதிர்காலத்தில் ஏசி பெட்டிகளில் வழங்கப்படும் வசதிகள் குறைக்கப்படலாம் அல்லது கட்டணங்கள் உயர்த்தப்படலாம் என்றும் தகவல்கள் கூறுகின்றனஇந்தியன் ரயில்வே
படுக்கை விரிப்புகள் மாயம்
திருடப்பட்ட அரசு சொத்துகள்
ரயில்வே ஊழியர்கள் சோதனை