சென்னை: அரசியலில் நுழைவது குறித்த சமிகைகளை வெளிப்படுத்தி வரும் நடிகர் தனுஷ், 'ஓம்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசும் போது, சென்னை மற்றும் கன்னியாகுமரியில் மாணவர்களுக்கான பயிற்சி மையங்களைத் தொடங்கப்போவதாக அறிவித்துள்ளார். நடப்பு கல்வி ஆண்டிற்காக அடுத்த 15 நாட்களுக்குள் இவை செயல்பாட்டுக்கு வரும் என்றும், அடுத்த கல்வி ஆண்டிற்குள் தமிழகம் முழுவதும் இவற்றை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்யின் அரசியல் வருகை வெற்றி பெற்றது. நடிகராக இருந்த விஜய், இன்று முதல்வராகி உள்ளார். இது பல இளம் நடிகர்களுக்கு புதிய உற்சாகத்தை தந்துள்ளது. அந்த வகையில் நடிகர் தனுஷ் விரைவில் அரசியலுக்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதனை உறுதிப்படுத்தும் வகையில் தான் தனுஷின் ஒவ்வொரு நடவடிக்கையும் அண்மை காலத்தில் இருந்து வருகிறது. நடிகர் தனுஷ் தனது மன்றத்தை விரிவுப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கி உள்ளார். ரசிகர்கள் சந்திப்பு , நிர்வாகிகள் சந்திப்பு என பிஸியாக இருக்கிறார்.
சில நாட்களுக்கு முன்பு நடிகர் தனுஷ், தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் ஏசி டியூசன் சென்டர் ஆரம்பிக்க போவதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இதற்கான இடங்களை தனுஷ் ரசிகர் மன்றம் பார்த்து வருவதாகவும், விரைவில் சில பகுகிளில் ஆரம்பிக்கப்படும் என்றும், அதற்கான செலவுகளை ரசிகர் மன்றம் ஏற்கும் என்றும் தகவல்கள் வெளியாகியது. இந்த தகவல்கள் தற்போது உறுதியாகி உள்ளது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள புதிய திரைப்படம் 'ஓம்'. இதில் சாய் பல்லவி, ஸ்ரீலீலா கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மம்முட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் நடந்தது.இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக ஆயிரக்கணக்கான ரசிகர்களுக்கு அனுமதி சீட்டு வழங்கப்பட்டிருந்தது. இந்த விழாவில் நடிகர் தனுஷ் கலந்து கொண்டார். ரசிகர்கள் மத்தியில் தனுஷ் பேசும்போது, "நாம் என்ன பேசினாலும் சிலர் ஏதாவது ஒன்றை பேசிக்கொண்டுதான் இருக்கப்போகிறார்கள். எனவே நாம் நமது மனதில் பட்டதை தைரியமாகவே பேசலாம். ஏனெனில் மற்றவர்கள் ஏதாவது பேசுவார்கள் என்பதற்காக நாம் மனதில் பட்டதை பேசாமல் இருக்க முடியாது. புதிதாக ஒன்று உருவாகும்போது அதிர்வு இருக்கத்தான் செய்யும். அந்த அதிர்வு நல்லதுக்காக மட்டுமே பயன்பட வேண்டும். மழைக்காலங்களில் தேவைப்படுபவருக்கு தேவையான உதவிகளை ரசிகர்கள் செய்யுங்கள்" என்று கூறினார். அப்போது அவரிடம் 234 தொகுதிகளிலும் ஏசி டியூசன் சென்டர் ஆரம்பிக்க உள்ளதாக செய்திகள் வந்துள்ளதே என்று நெறியாளர் கேட்டார். அது உண்மை தான்று தனுஷ் கூறினார். ஆனால் 234 தொகுதி என்று இல்லை.. தமிழ்நாடு முழுவதும் ஆரம்பிக்க விரும்புகிறேன். முதற்கட்டமாக சென்னை மற்றும் கன்னியாகுமரியில் மாணவர்களுக்கான பயிற்சி மையங்களைத் தொடங்க உள்ளோம். நடப்பு கல்வி ஆண்டிற்காக அடுத்த 15 நாட்களுக்குள் இவை செயல்பாட்டுக்கு வரும் , அடுத்த கல்வி ஆண்டிற்குள் தமிழகம் முழுவதும் இவற்றை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளோம்.. நிச்சயம் பயன்பாட்டிற்கு வரும் என்று தெரிவித்துள்ளார். முன்னதாக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அதிகளவில் ரசிகர்கள் திரண்டதால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் டிக்கெட் வைத்திருந்த ரசிகர்களையும் உள்ளே அனுமதிக்க மறுத்தனர். இதனால் ரசிகர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் அரங்கின் வெளியே இருந்த இரும்பு கதவுகள் மூடப்பட்டதால் ரசிகர்கள் விரக்தியுடன் வெளியேறினர். இதற்கு வருத்தம் தெரிவித்து நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில் கூறுகையில், "ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கைகளில் நுழைவுச்சீட்டு வைத்திருந்தும் உள்ளே வரமுடியாமல் திரும்பச் சென்றது என் மனதிற்கு மிகவும் வேதனை அளிக்கிறது. இது யாருடைய தவறு? என்று நான் ஆராய விரும்பவில்லை... நானே இதற்குப் பொறுப்பேற்று என் வருத்தங்களை தெரிவித்துக் கொள்கிறேன். இனி இப்படி நடக்காமல் பார்த்துக் கொள்வது என் பொறுப்பு" என்று கூறினார்.வருத்தம் தெரிவித்த நடிகர் தனுஷ்.. இது யாருடைய தவறு? 'ஓம்' இசை வெளியீட்டு விழாவில் நடந்த சோகம்