என் குருநாதர்.. என்னால வர முடியாம போச்சு.. பாரதிராஜா மறைவு.. கண் கலங்கிய நெப்போலியன்.. அஞ்சலி!

  • சென்னை: இயக்குநர் பாரதிராஜா மறைவுக்குப் பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இதற்கிடையே பாரதிராஜா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து நடிகர் நெப்போலியன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். பாரதிராஜாவை தனது ஒரே குருநாதர் எனக் குறிப்பிட்டுள்ள நெப்போலியன், நேரடியாக வர முடியாத சூழலில் தான் இருப்பதாக வேதனை தெரிவித்துள்ளார்.

    Advertisement

    இயக்குநர் இமயம் பாரதிராஜா இன்று தனது 84 வயதில் வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். அவரது உடல் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்படும் நிலையில், நாளை வியாழக்கிழமை அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெறுகிறது. இதற்கிடையே பாரதிராஜா மறைவு தொடர்பாக நடிகர் நெப்போலியன் உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    Advertisement

    நெப்போலியன்

    இது தொடர்பாக அவர், "அமெரிக்காவில் இருந்து உங்கள் நெப்போலியன் பேசுறேன். இன்று காலை எனக்கு ஒரு அதிர்ச்சி செய்தி வந்தது. என்னுடைய குருநாதர் பாரதிராஜா இயற்கை எய்திவிட்டார்னு செய்தி கிடைத்தது. கடந்த சில மாதங்களாகவே அவர் உடம்பு சரியில்லாமல் இருந்தார். நான் அடிக்கடி அவரது மகள் ஜனனியிடம் போன்ல பேசி, "அப்பா நல்லா இருக்காரா?" என்று கேட்டுக்கிட்டே இருப்பேன்.

    இந்தச் செய்தியைக் கேட்ட உடனே, இது பொய்யா இருக்குமோ, வெறும் வதந்தியாக இருக்குமோன்னு தான் நினைத்தேன். ஏன்னா, ஒரு மாசத்துக்கு முன்னாடி கூட இதே மாதிரி ஒரு செய்தி வந்தபோது, ஜனனிக்கு போன் பண்ணிக் கேட்டேன். "அதெல்லாம் ஒன்னும் இல்ல அங்கிள், அப்பா நல்லா இருக்காங்க, யாரோ வதந்தி கிளப்பிட்டாங்க" என்றார். அதே மாதிரி இதுவும் ஒரு வதந்தியா இருக்கும்னு நினைச்சுட்டு தான் ஜனனிக்கு மறுபடியும் போன் பண்ணுனேன்.

    Advertisement

    அதிர்ச்சி

    ஆனால் அவங்க, "அங்கிள் நான் மலேசியால இருந்து இந்தியாவுக்கு பிளைட்ல வந்துட்டு இருக்கேன்... அப்பா தவறிட்டாங்க" அப்படின்னு சொன்ன அப்புறம் தான் இந்தச் செய்தியை என்னால உறுதி பண்ண முடிஞ்சது. இந்தச் செய்தியைக் கேட்டதுல இருந்து என் வீட்ல யாராலயுமே இதை நம்ப முடியல. நேத்து நைட்டு முழுக்க டிவில இதைப் பற்றிய செய்திகளையே பார்த்துக்கிட்டே இருந்தேன், எனக்கு தூக்கமே இல்லை.

    இப்போது காலையில் எந்திரிச்ச உடனே எப்படியாவது இதைப் பேசிடணும்னு தான் பேசுறேன். அவர் உடல் இறுதிச்சடங்கிற்காக தேனிக்குக் கொண்டு போறதா கேள்விப்பட்டேன். ஆனால், கடந்த இரண்டு வருஷமா அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு வர முடியாத சூழ்நிலையில் நான் இருக்கிறேன். இல்லையென்றால், என் குருநாதரோட இறுதி யாத்திரையில் முதல் ஆளா நான் வந்து நின்றிருப்பேன்.

    Advertisement

    குருநாதர்

    எனக்கு வாழ்க்கையில் எல்லாமே என்னுடைய குருநாதர் தான். இன்றைக்குத் திரைப்படத்துறையில் நான் இந்த அளவுக்குப் பேரும் புகழோடும் இருக்கிறேன்னா, அதுக்கு முழு முதற்காரணம் அவர்தான். 1990ல் முதன்முதலாக அவரைச் சந்தித்த அந்த நாளில் இருந்து, அவர் என்னை 'புது நெல்லு புது நாத்து' படத்துல அறிமுகப்படுத்தியதில் இருந்து, இரண்டு ஆண்டுகளுக்கு முன்னாடி என்னுடைய மகன் திருமணத்திற்குப் போய் அழைப்பிதழ் கொடுத்தது வரைக்குமே, எங்களுக்குள் இருந்த அந்த நட்பு, அந்த உறவு ரொம்ப பலமாக இருந்துச்சு.

    கருணாநிதி- பாரதிராஜா

    எனக்கு அரசியல்ல கருணாநிதி எப்படி குருவோ, அதே மாதிரி சினிமாவில என்னுடைய ஒரே குருநாதர் பாரதிராஜா சார் தான். 1993-ல் கருணாநிதி தலைமையில், என்னுடைய குருநாதர் முன்னிலையில் தான் எனக்கு திருமணமே நடந்தது. அந்த அளவுக்கு என் வாழ்க்கையில் ரொம்ப முக்கியமானவர், எங்க குடும்பத்தில் ஒருத்தர் அவர்.

    Advertisement

    அவர் 'இயக்குநர் இமயம்'னு பேரெடுத்தவர்; 'இயக்குநர் சிகரத்திற்கு' நிகராகத் தமிழ் திரை உலகத்தை ஆண்டவர். அவருடைய படைப்புகள் எல்லாம் ரொம்ப அரிதானவை, யாராலும் அதைத் திரும்பக் கொடுக்க முடியாது. அவர் மாதிரி ஒரு நல்ல மனிதனை இனி பார்க்கவே முடியாது. என்னை மாதிரி எத்தனையோ கலைஞர்களை அறிமுகப்படுத்தி, சினிமானா என்னன்னே தெரியாத, நடிப்புனா என்னன்னே தெரியாத எனக்கு முதல் முதலில் நடிப்பைச் சொல்லிக் கொடுத்து, வளர்த்து ஆளாக்கியவர் அவர்.

    பார்க்க முடியாம போச்சு

    ஒரு மூன்று மாசத்துக்கு முன்னாடி கூட என்கிட்ட போன்ல நல்லா பேசிட்டு இருந்தார். நான் கூட அடுத்த மாசமோ அல்லது இன்னும் ஒரு மாசத்துலயோ எப்படியாவது இந்தியா வந்து அவரை நேர்ல பார்த்திடணும்னு ஒரு முடிவு எடுத்திருந்தேன், ஆனா அதுக்குள்ள இப்படி ஒரு அதிர்ச்சி செய்தி வந்துடுச்சு. எங்க குடும்பத்தின் சார்பாக அவருக்கு நாங்க கண்ணீர் அஞ்சலியைச் செலுத்திக்கிறோம்" என்றார்.

    English Summary

    Actor Napoleon shared a deeply emotional video from the US expressing his grief over the death of his mentor(பாரதிராஜா மறைவு கூட நெப்போலியன்): Napoleon on Bharathiraja Demise latest news in tamil.