அண்ணாமலை மேடையில் நடிகர் விவேக் மனைவி.. ‘வி தி லீடர்ஸ்' இயக்கத்துடன் சேர்ந்து செயல்படுவதாக அறிவிப்பு

  • சென்னை: சென்னையில் அண்ணாமலையின் 'வி தி லீடர்ஸ்' இயக்கம் சார்பில் இன்று நடந்த பேரணியில் மறைந்த நடிகர் விவேக்கின் மனைவி அருள் செல்வி பங்கேற்றார். அதோடு அண்ணாமலையின் 'வி தி லீடர்ஸ்' இயக்கத்துடன் சேர்ந்து செயல்பட உள்ளதாக அறிவித்துள்ள நிலையில் வரும் காலத்தில் அவரது கட்சியில் இணைவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    Advertisement

    பாஜகவில் இருந்து விலகிய அண்ணாமலை 'வி தி லீடர்ஸ்' என்ற இயக்கத்தை தொடங்கி உள்ளார். விரைவில் இந்த இயக்கம் அரசியல் கட்சியாக மாற உள்ளது. இதற்கான பணிகளை அண்ணாமலை தொடங்கி உள்ளார். இந்நிலையில் தன் சென்னையில் இன்று சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி நடந்தது.

    Advertisement

    இந்த பேரணியில் மறைந்த நடிகர் விவேக்கின் மனைவி அருள் செல்வி பங்கேற்றார். அண்ணாமலையுடன் அவர் மேடையை பகிர்ந்து கொண்டார். அருள் செல்வி இதுவரை அரசியல் இயக்கத்தின் தலைவர்களுடன் பெரும்பாலும் மேடையை பகிர்ந்து கொள்வது இல்லை என்பதால் இன்றைய இந்த நிகழ்வு கவனம் பெற்றுள்ளது.

    இதுபற்றி நடிகர் விவேக்கின் மனைவி அருள்செல்வி கூறுகையில்,'' 'வி தி லீடர்ஸ்' இந்த மாதத்தில் 20 லட்சம் மரக்கன்றுகளை நடவு செய்யும் பணியை முடிக்கப்போவதாக கூறியுள்ளனர். இந்த திட்டத்துக்கு எனது கணவரின் பெயரை வைத்துள்ளனர். இதற்காக தான் நான் இன்று இங்கே வந்தேன்'' என்றார்.

    Advertisement

    அப்போது பத்திரிகையாளர் ஒருவர், ''நீங்கள் இதுவரை எந்த அரசியல் கட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கவில்லை. அண்ணாமலை நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளதால் அவருக்கு ஆதரவு அளிப்பதாக எடுத்து கொள்ளலாமா?'' என்று வினா எழுப்பினார். அதற்கு அருள் செல்வி, ''நான் இங்கு வந்தது அவரது புனிதமான இந்த பயணத்திற்கு (மரக்கன்று நடவு) வாழ்த்து தெரிவிக்க தான் இங்கு வந்தேன். என் கணவரை நினைவு கூர்ந்து சகோதரர் அண்ணாமலை மரக்கன்று நடுவதும், அதற்கு அவரது பெயரை வைத்திருப்பதும் எனக்கு ரொம்ப சந்தோஷம். 'கிரீன் கலாம்' அமைப்பு வந்து வி தி லீடர்ஸ் உடன் சேர்ந்து மரக்கன்று நடுவதற்கு ரொம்ப ஆர்வமாக இருக்கிறோம். '' என்றார்.

    Advertisement

    'கிரீன் கலாம்' (Green Kalam) என்பது முன்னாள் ஜனாதிபதி ஏபிஜே அப்துல் கலாம் ஆலோசனையின்படி, மறைந்த நடிகர் விவேக்கால் தொடங்கப்பட்ட மரம் நடும் இயக்கமாகும். விவேக் மறைவுக்கு பிறகு அதனை அவரது மனைவி அருள் செல்வி வழிநடத்தி வருகிறார். இந்நிலையில் தனா் 'கிரீன் கலாம்' மரக்கன்று நடும் விஷயத்தில் அண்ணாமலையின் 'வி தி லீடர்ஸ்' இயக்கத்துடன் சேர்ந்து செயல்பட உள்ளதாக அறிவித்துள்ளார்.

    மேலும் நடிகர் விவேக்கின் மனைவி அருள்செல்வி பங்கேற்றது பற்றியும் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது:''இன்று மாலை, நமது 'வி தி லீடர்ஸ் பவுண்டேஷன்' சார்பில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே நடைபெற்ற சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணியில், பெரும் திரளெனக் கூடியிருந்த சகோதர சகோதரிகளுடன் பங்கேற்றதில் பெரும் மகிழ்ச்சி. இந்தப் பேரணியில் பங்கேற்றுச் சிறப்பித்த சின்னக் கலைவாணர், அண்ணன் அமரர் விவேக் மனைவி அருள்செல்விக்கு, எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    Advertisement

    இயற்கையைப் பாதுகாப்பது என்பது வெறும் மரங்களை நடுவது மட்டும் அல்ல. நமது நீர்வளம், கிராமப்புற வளர்ச்சி, கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் எதிர்காலத் தலைமுறையின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதும் தான். காவிரி நதி நீர் பிரச்சினை, மேகதாது அணைத் திட்டம் போன்ற விவகாரங்களில் தமிழ்நாட்டின் நீர்வள உரிமைகளைப் பாதுகாப்பது அவசியம். அதேபோல், நமது கிராமங்களில் உள்ள ஏரிகள், குளங்கள், ஊரணிகள், கால்வாய்கள் உள்ளிட்ட நீர்நிலைகளைப் பாதுகாத்து, மழைநீரை சேமிக்கும் வகையில் அவற்றை மேம்படுத்த வேண்டியதும் நமது கடமை.

    கடந்த 16 நாட்களில் நமது 'வி தி லீடர்ஸ்' சார்பில், 6,25,760 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. ஆகஸ்ட் மாதத்திற்கான நமது இலக்கு 20 லட்சம் மரங்கள். இன்னும் 15 நாட்களில் 14 லட்சம் மரங்களை நட்டு இந்த இலக்கை எட்ட வேண்டும். அண்ணன், சின்னக் கலைவாணர் அமரர் விவேக் பசுமைப் பணியை நாம் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும். அவர் ஏற்கனவே 37 லட்சம் மரக்கன்றுகளை நட்டு உருவாக்கிய பசுமைப் பாதையை, வரும் மாதங்களில் மீதமுள்ள மரங்களை நட்டு, அவரது 1 கோடி மரங்கள் என்ற கனவை நிறைவேற்றும் பணியில் நாமும் பங்கெடுப்போம்.

    Advertisement

    தமிழக முதலமைச்சர் விஜய்யிடம் ஒரு வேண்டுகோள். ஊழலற்ற, நேர்மையான ஆட்சியை வழங்க வேண்டும் என்ற உங்கள் நிலைப்பாட்டை வரவேற்கிறோம். ஆனால், உங்கள் அமைச்சரவையில் சிலர் லஞ்சம் பெறுவதாக வரும் குற்றச்சாட்டுகளை விசாரித்து, தவறு நடந்திருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். உங்கள் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்றுவது உங்கள் பொறுப்பு.

    இன்றைய இளைஞர்களின் குரலை நாம் கேட்க வேண்டும். அவர்களிடம் இருந்து கற்றுக்கொண்டு, அவர்களின் எதிர்காலத்திற்கு ஏற்ற வகையில் நம்மை நாமே புதுப்பித்துக் கொள்ள வேண்டும். பிறர் குடும்பத்தைப் பற்றி தரக்குறைவாகப் பேசுவது, தனிப்பட்ட தாக்குதல்கள் செய்வது போன்ற, அநாகரிக அரசியலை, இன்றைய இளைஞர்கள் விரும்புவதில்லை. கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் மற்றும் நல்லாட்சி குறித்து பேசும் புதிய அரசியலை நாம் முன்னெடுத்துச் செல்வோம். நீர்நிலைகளை காப்போம்; மரங்களை வளர்ப்போம்; அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவோம். கிராமங்களை முன்னேற்றுவோம். நம் குழந்தைகளின் எதிர்காலத்தை சிறப்பாக்குவோம். மாறுவோம், மாற்றுவோம்!'' என கூறியுள்ளார்.

    English Summary

    Arul Selvi, the wife of the late actor Vivek, participated in a rally held in Chennai today under the banner of Annamalai's ‘We the Leaders' movement. Given her announcement that she intends to work with this movement, the question has now arisen as to whether she will join his party in the future.