634 கோடி ஊழல் புகார்.. திமுக மாஜி அமைச்சருடன் தொடர்பா? எனக்கு எந்த சம்பந்தமில்லை! நடிகை ஜனனி வேதனை!

  • சென்னை: திமுக முன்னாள் அமைச்சர் ஒருவர் மீதான ரூ.634 கோடி ஊழல் புகாரில், தன்னைத் தொடர்புப்படுத்தி பரவிய செய்திக்கு சீரியல் நடிகை ஜனனி அசோக்குமார் மறுப்பு தெரிவித்துள்ளார்.
    எந்த அரசியல்வாதியுடனும் நட்பில் இல்லாத தன் மீது, முகாந்திரமே இல்லாமல் வதந்திகள் வருவது எப்படி? என வேதனை தெரிவித்துள்ளார்.

    Advertisement

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," கடந்த இரண்டு நாட்களாக என்னைப் பற்றி பல்வேறு குற்றச்சாட்டுகளும் தகவல்களும் பரவி வருகின்றன. குறிப்பாக, எக்ஸ் (X), இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில், ரூ.634 கோடி மோசடி தொடர்பான விவகாரத்தில் எனக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறி எனது பெயரும் இணைக்கப்பட்டு பதிவுகள் வெளியாகி வருகின்றன.

    Advertisement

    இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டியது அவசியம் என்று கருதுகிறேன். முதலில் ஒன்றைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இந்த விவகாரத்தில் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை. நான் எப்போதும் அரசியலுக்கு அப்பாற்பட்டே இருந்து வருகிறேன்.

    எந்தவொரு அரசியல் கட்சியுடனும் எனக்குத் தொடர்பு இருந்ததில்லை. அரசியல்வாதிகளுடன் தனிப்பட்ட நட்பும் எனக்குக் கிடையாது. என்னைப் பற்றி தற்போது பரப்பப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை. அவை நான் வாழ்ந்து வரும் வாழ்க்கையையும், எனது தனிப்பட்ட குணத்தையும் பிரதிபலிப்பவை அல்ல.

    ஒருவரைப் பற்றி இவ்வளவு தீவிரமான குற்றச்சாட்டுகளை முன்வைக்கும்போது, முதலில் உண்மைகளைச் சரிபார்க்க வேண்டாமா? சம்பந்தப்பட்ட நபரிடம் விளக்கம் கேட்க வேண்டாமா? குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தும் ஆதாரங்களை வெளியிட வேண்டாமா? இவை எதுவும் இல்லாமல் ஒருவரின் பெயரையும் படத்தையும் பயன்படுத்தி செய்திகளை வெளியிடுவதில் என்ன நியாயம் இருக்கிறது?

    Advertisement

    துல்லியமான தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது ஊடகங்களின் பொறுப்பு. ஒருவரின் பெயரையோ புகைப்படத்தையோ ஒரு குற்றச்சாட்டுடன் இணைத்துப் பரப்புவது அவரது வாழ்க்கையில் உண்மையான பாதிப்புகளை ஏற்படுத்தும். ஒரு விவகாரம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை எழுப்பப்படுவது மட்டுமே ஒருவர் குற்றம் செய்துவிட்டார் என்பதற்கான ஆதாரமாகிவிடாது.

    இந்தத் துறையில் பல ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறேன். எனது வாழ்க்கையையும் நற்பெயரையும் கண்ணியத்துடன் உருவாக்குவதற்கு கடுமையாக உழைத்திருக்கிறேன். யாருடைய ஆதரவையும் சார்ந்திருக்காமல், எனது முயற்சியால் வாழ்க்கையையும் தொழிலையும் படிப்படியாகக் கட்டியெழுப்பியுள்ளேன்.

    இப்படியிருக்கும்போது, ஒரு பெண் சுயமாக முன்னேறி, தனது உழைப்பால் ஒரு வாழ்க்கையை உருவாக்கி, கண்ணியத்துடன் வாழ்வதற்கு என்ன அர்த்தம் இருக்கிறது என்ற கேள்வி இப்போது எழுகிறது. சமூக வலைதளங்களில் உண்மையற்ற ஒரு தகவல் மீண்டும் மீண்டும் பகிரப்படும்போது, பல ஆண்டுகளாக நான் உருவாக்கிய நற்பெயர் அதனால் மறைக்கப்பட்டுவிடுகிறது.

    Advertisement

    ஒருவரைப் பற்றிய முழுமையான உண்மையை அறியாமலேயே, சமூக வலைதளங்களில் பரவும் தகவல்களைப் பார்த்து பலரும் எளிதாக நம்பிவிடுகிறார்கள். என்னை உண்மையாக அறிந்தவர்களுக்கு இந்தக் குற்றச்சாட்டுகள் தவறானவை என்பது தெரியும். ஆனால், ஒவ்வொரு முறையும் என்னைப் பற்றிய தவறான தகவல்களுக்கு விளக்கம் அளித்துக்கொண்டே இருக்க வேண்டியிருப்பது மிகுந்த மனவேதனையையும் சோர்வையும் ஏற்படுத்துகிறது.

    தற்போது எனது வாழ்க்கையை யாரிடமும் நியாயப்படுத்திக் கொண்டிருக்க விரும்பவில்லை. உண்மைகளைப் புரிந்துகொள்ள முயற்சி செய்வதற்கு முன்பே, ஒரு பெண்ணின் மீது குற்றம் சுமத்துவதும் அவருக்கு முத்திரை குத்துவதும் எவ்வளவு எளிதாகிவிட்டது என்பதுதான் அதிக வேதனையைத் தருகிறது.

    Advertisement

    எனவே, ஊடக நிறுவனங்களும் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துபவர்களும் எந்தவொரு தகவலையும் வெளியிடுவதற்கு அல்லது பகிர்வதற்கு முன்பு அதன் உண்மைத்தன்மையைச் சரிபார்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். எனக்கு இந்த விவகாரத்தில் தொடர்பு இருப்பதாகத் தவறாகச் சித்தரிக்கும் பதிவுகளைத் திருத்தவோ அல்லது நீக்கவோ வேண்டும். ஒரு குற்றச்சாட்டை நிரூபிக்கப்பட்ட உண்மையாகக் கருத வேண்டாம்.

    இந்தக் கடினமான சூழலில் நிதானத்துடனும், நியாயத்துடனும், மனிதாபிமானத்துடனும் நடந்துகொண்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி. நீங்கள் அளிக்கும் அன்பும் ஆதரவும் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு எனக்கு முக்கியமானவை. உண்மை முக்கியம். ஆதாரங்கள் முக்கியம். அதேபோல், ஒவ்வொரு மனிதரின் கண்ணியமும் முக்கியம்." எனக் கூறியுள்ளார்.

    English Summary

    Serial actress Janani Ashok Kumar denies involvement in the alleged ₹634 crore corruption case and urges media to verify claims before publication.