சென்னை: சென்னையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் முதல்வர் விஜய் தேசியக் கொடியேற்றுவதை நடிகை த்ரிஷா முதல் வரிசையில் அமர்ந்து ரசித்தது குறித்து நடிகை கஸ்தூரி கடுமையாக விமர்சித்துள்ளார். இன்று சுதந்திர விழாவில் அரங்கேறியது சுதந்திரமில்லை, வெட்கம்கெட்டத்தனம் என்று சாடியுள்ள கஸ்தூர், ஊரறிய செய்தாலும் ஊர் பேச பயந்தாலும் தவறு தவறுதான் என்றும் கூறியுள்ளார்.
சென்னை கோட்டை கொத்தளத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் முதல்வர் விஜய் முதல்முறையாக தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினார். முதல்வரான பின் முதல்முறையாக விஜய் தேசியக் கொடியேற்றுவதை பார்க்க நடிகை த்ரிஷா முன்கூட்டியே வந்து முதல் வரிசையில் அமர்ந்திருந்தார். இந்த விழாவில் த்ரிஷா பங்கேற்றது தேசிய அளவில் பேசுபொருளாகியது.
தொடர்ந்து சுதந்திர தின நிகழ்ச்சிகள் நிறைவடைந்து முதல்வர் விஜய் புறப்பட்ட போது நடிகை த்ரிஷாவுக்கு சல்யூட் வைத்து டாட்டா காட்டி சென்றார். இந்த வீடியோக்கள் சோசியல் மீடியாவிலும் டிரெண்டாகியது. ஏற்கனவே முதல்வராக விஜய் பதவியேற்ற போதும் நடிகை த்ரிஷா தனது தோழியான அர்ச்சனா கல்பாத்தியுடன் பங்கேற்றிருந்தார். அதன்பின் நடிகர் அஜித்குமார் தாயார் மறைவின் போது விஜய் ஆறுதல் சொல்ல சென்ற போதும், நடிகை த்ரிஷா உடனிருந்தார். அதுமட்டுமல்லாமல் விஜய்யின் பிறந்தநாள் முடிவடைந்த அடுத்த நாளன்று இரவில் நடிகை த்ரிஷா கேக் வெட்டும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். மறுபக்கம் விஜய் மீது அவரின் மனைவி சங்கீதா தரப்பில் ஒரு நடிகையுடன் தொடர்பில் இருப்பதாக குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டிருந்தது. தற்போது மனைவி சங்கீதா விவாகரத்து கோரிய மனு திரும்பப் பெறப்பட்டது. இதனால் தவெகவினர் உற்சாகம் அடைந்தனர். சுதந்திர தின விழாவில் விஜய் குடும்பத்துடன் பங்கேற்பார் என்றெல்லாம் நேற்று சோசியல் மீடியாவில் பேசி வந்தனர். இப்படியான சூழலில் நடிகை த்ரிஷாவுக்கு சுதந்திர தின விழாவிலும் முதல் வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து நடிகை கஸ்தூர் தனது எக்ஸ் பக்கத்தில், இன்று சுதந்திர விழாவில் அரங்கேறியது சுதந்திரமில்லை, வெட்கம்கெட்டத்தனம். ஊரறிய செய்தாலும் ஊர் பேச பயந்தாலும் தவறு தவறுதான். நெற்றிக்கண்ணை திறந்தாலும் குற்றம் குற்றமே என்று பதிவிட்டுள்ளார். இது தவெகவினர் மத்தியில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.