யார் கண்ணு பட்டுச்சோ! அக்கா அம்பிகா மீது தங்கை ராதா புகார்! எம்ஜிஆர் திறந்து வைத்த ஸ்டுடியோ சர்ச்சை?

  • சென்னை: பிரபல நடிகை ராதா, தனது சகோதரியும் நடிகையுமான அம்பிகா மீதும், சகோதரர் மீதும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருக்கிறார். அதில் அம்பிகாவும், தனது சகோதரரும் 46 கோடி ரூபாய் அளவில் செக் மோசடி செய்ததாக புகார் அளித்துள்ளார். இந்த நிலையில் எம்ஜிஆர் திறந்து வைத்த ஸ்டுடியோ தொடர்பான விவகாரத்தில் இருவருக்கும் மோதல் ஏற்பட்ட நிலையில் தற்போது புகார் வரை வந்திருப்பதாக சொல்கின்றனர் திரைத்துறை வட்டாரத்தினர்.

    Advertisement

    தமிழ் திரையுலகில் சகோதர சகோதரிகள் நுழைவது அரிது. அதில் வெற்றி பெறுவது அரிதிலும் அரிது. அப்படி திரைத்துறையில் புகுந்து வெற்றி பெற்றவர்கள் தான் அம்பிகா - ராதா சகோதரிகள். 1979 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமானார் அம்பிகா.

    Advertisement

    தொடர்ந்து அவரது தங்கையான ராதா பாரதிராஜாவின் அலைகள் ஓய்வதில்லை படத்தில் நடித்தார். அம்பிகாவின் சக்களத்தி திரைப்படமும், ராதாவின் அலைகள் ஓய்வதில்லை திரைப்படமும் மெகா ஹிட் அடித்தன.

    தொடர்ந்து கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் இந்த சகோதரிகளின் ஆதிக்கம் தான் இருந்தது. சிவாஜி, ரஜினிகாந்த், கமல் என இருவரும் தமிழின் முன்னணி நடிகர்களுடன் இருவரும் ஜோடி போட்டனர். அது மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் பிஸியாயினர்.

    இதற்கிடையே சென்னைக்கு அருகே ஏஆர்எஸ் என்ற கார்டன் என்ற பெயருடன் ஸ்டுடியோ ஒன்றை திறந்தனர் அம்பிகா ராதா சகோதரிகள். அம்பிகா - ராதா அவர்களின் தாய் சரஸ்வம்மா ஆகியோரது பெயர் சுருக்கம் தான் ஏஆர்எஸ் கார்டன். இந்த ஸ்டுடியோவை அப்போது முதல்வராக இருந்த எம்ஜிஆர் திறந்து வைத்தார்.

    Advertisement

    அப்போது அந்த நிலத்தை எம்ஜிஆர் இலவசமாக வழங்கியதாக இருந்த புரளி தற்போது வரை பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தான் தனது சகோதரி அம்பிகா மற்றும் சகோதரர் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருக்கிறார் நடிகை ராதா.

    சுமார் 46 கோடி ரூபாய் அளவுக்கு தனது சகோதரி அம்பிகாவும் சகோதரரும் மோசடி செய்து விட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு மேலாக இணைபிரியா சகோதரிகளாக வலம் வந்த அம்பிகா ராதா தற்போது காவல் நிலையம் புகார் என சென்றிருப்பது சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

    Advertisement

    இதற்கிடையே ஏஆர்எஸ் கார்டன் விவகாரத்தில் சகோதரிகள் இருவருக்கிடையே பிரச்சனை இருப்பதாக சொல்லப்படுகிறது. தற்போது ஸ்டுடியோவாக இருக்கும் அந்த கார்டனில் ஏராளமான சினிமா படப்பிடிப்புகளும் சீரியல் படப் பிடிப்புகளும் நடத்தப்பட்டு வருகிறது. சகோதரிகளுக்கும் அவரது தாய்க்கும் அந்த கார்டன் பங்கு இருக்கும் நிலையில், தாயின் பங்கு யாருக்கு என்பது தொடர்பாக இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதாகவும், ஒரு தரப்பு அதனை விற்க முயன்றதாக சொல்லப்படுகிறது.

    இதையடுத்து அந்த நிலம் விற்பனைக்கு அல்ல என இருதரப்பும் மாறி மாறி விளம்பர பலகைகள் வைத்துள்ளது. இதனால் தான் சகோதரிகள் சில நாட்களாக பேசாமல் இருந்த நிலையில் தற்போது கமிஷனர் ஆபீஸ் வரை வந்திருப்பதாக சொல்கின்றனர்.

    English Summary

    Actress Radha reportedly files a ₹46 crore cheque fraud complaint against sister Ambika and brother amid an ARS Garden property dispute.