சென்னை விமான நிலையத்தின் ‘ஏரோஹப் மால்’.. வெறிச்சோடிக் கிடக்கும் கடைகள்.. புதிய அறிவிப்பு

  • சென்னை: சென்னை விமான நிலையத்தின் 'ஏரோஹப் மால்' எப்போதுமே வெறிச்சோடி காணப்பபடுகிறது. இந்த சூழலில் இன்னும் ஆறு மாதங்களுக்குப் பிறகே கூடுதல் கடைகள் திறக்கப்பட வாய்ப்பு உள்ளதாக இந்திய விமான நிலையங்கள் ஆணையம் அதிகாரிகள் தெரிவித்தனர். மாலுக்கு அதிக மக்களை ஈர்ப்பது, புதிய கடைகளைக் கொண்டு வருவது மற்றும் பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்துவது குறித்து ஆலோசனைகளை வழங்க ஒரு புதிய ஆலோசகரை நியமிக்க போவதகாவும், அதற்கு விரைவில் அறிவிப்பு வெளியிடுவோம் என்றும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Advertisement

    சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் விமான பயணிகள் ஷாப்பிங் செய்வதற்காக வரும் மால் என்றால் 'ஏரோஹப் மால்' தான். அங்கு பிவிஆர் தியேட்டர் மற்றும் சில கடைகள் மட்மே உள்ளன. பெரும்பாலான கடைகள் மூடியே கிடக்கின்றன. இந்த சூழலில் சென்னை விமான நிலையத்தில் உள்ள ஏரோஹப் மாலுக்கு ஷாப்பிங் செய்யச் செல்லும் பயணிகளும் , உள்ளூர் மக்களும், பல மாதங்களாக அங்குள்ள பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருப்பதைக் கண்டு ஏமாற்றமடைந்து வருகிறார்கள். இன்னும் கூடுதலாக தற்போது கவலையளிக்கும் விஷயம் என்னவென்றால், இந்த மாலுக்குள் புதிய சில்லறை விற்பனைக் கடைகள் திறக்கப்படுவதற்கு குறைந்தது இன்னும் ஆறு மாதங்களாவது ஆகும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது தான்.

    Advertisement

    இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் அதிகாரிகள் இதுபற்றி கூறும் போது, மாலுக்கு அதிக மக்களை ஈர்ப்பது, புதிய கடைகளைக் கொண்டு வருவது மற்றும் பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்துவது குறித்து ஆலோசனைகளை வழங்க ஒரு புதிய ஆலோசகரை நியமிப்பதற்கான டெண்டர் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. சில நாட்களில் இந்த டெண்டர் திறக்கப்பட்டு, இன்னும் சில வாரங்களில் இதற்கான ஒப்பந்தம் வழங்கப்படும்.

    ஆலோசகர் நியமிக்கப்பட்டதும், 45 நாட்கள் முதல் இரண்டு மாதங்களுக்குள் இதற்கான முன்மொழிவை வழங்குவார். டெல்லியில் உள்ள விமான போக்குவரத்த தலைமையகம் அதற்கு ஒப்புதல் அளித்த பிறகு, புதிய கடைகளுக்கான டெண்டர்கள் வெளியிடப்படும். இந்தச் செயல்முறைகள் அனைத்தும் முடிக்கப்பட்டு, இன்னும் ஆறு மாதங்களில் புதிய கடைகள் திறக்கப்படலாம் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்

    Advertisement

    சென்னை விமான நிலையத்தில் உள்ள ஏரோஹப் மால் என்பது சுமார் 17,230 சதுர மீட்டர் பரப்பளவில், ரூ. 250 கோடி செலவில் கட்டப்பட்டது. இது கிழக்கு மற்றும் மேற்கு என இரு பிரிவுகளுடன் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திறக்கப்பட்டது. ஆனால் கடந்த சில மாதங்களாக, பல கடைகள் இயங்கி வந்த மாலின் 'கிழக்குப் பகுதி' ஆள்நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்படுகிறது. தற்போது சில கடைகள், உணவகம் மற்றும் மல்டிபிளெக்ஸ் திரையரங்கம் மட்டுமே இயங்கி வருகின்றன.

    ஏனெனில் முந்தைய ஒப்பந்ததாரருடன் இருந்த ஒப்பந்தத்தை இந்திய விமான நிலைய ஆணையம் ரத்து செய்ததன் காரணமாகவே இங்குள்ள பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுள்ளன.

    Advertisement

    மும்பையிலிருந்து வந்த பயணி ஒருவர் இதுபற்றி கூறும் போது, "சென்னை விமான நிலையத்தை விட்டு வெளியேறும் முன் ஏதேனும் சாப்பிடலாம் என்று மாலுக்குள் சென்றேன். இவ்வளவு பெரிய வசதியான மால் அமைக்கப்பட்டிருக்கும் அனைத்துக் கடைகளும் திறந்திருக்கும் என்று எதிர்பார்ப்பது இயல்புதான். ஆனால் பல கடைகள் மூடப்பட்டிருப்பதைப் பார்த்தேன். எப்படியும் இங்கு வந்துவிட்டதால், சில கடைகளைப் பார்த்துப் பொருட்கள் வாங்கியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்" என்று தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

    English Summary

    The 'Aerohub Mall' of Chennai Airport is always deserted. Airports Authority of India officials said that additional stores are likely to be opened after another six months in this context.