சென்னை மக்களின் தீராத ஏக்கம்.. ரயில்வே அமைச்சருக்கு தயாநிதி மாறன் எழுதிய பரபரப்பு கடிதம்

  • சென்னை: தமிழ்நாட்டில் தொடர் விடுமுறை நாட்களில் போதுமான ரயில் சேவைகள் விடப்படுவது இல்லை.. மதுரை, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தேனி போன்ற தென் மாவட்டங்களுக்கோ அல்லது கோவை, ஈரோடு உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களுக்கோ போதிய ரயில்கள் விடப்படுவது இல்லை.. இந்த விவகாரம் ஒவ்வொரு விடுமுறையின் போதும் பெரிய தலைவலியாக உள்ளது. இந்த சூழலில் தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் சென்னையில் இருந்து முக்கிய நகரங்களுக்கு கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும் என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு, தயாநிதிமாறன் எம்.பி. கடிதம் எழுதியிருக்கிறார்.

    Advertisement

    சென்னையில் இருந்து தீபாவளி, பொங்கல், தமிழ் புத்தாண்டு, கிறிஸ்துமஸ், ரம்ஜான், காலாண்டு, அரையாண்டு விடுமுறை, விநாயகர் சதுர்த்தி, குடியரசு தினம், சுதந்திர தினம் போன்ற பண்டிகை மற்றும் விடுமுறை காலங்களிலும், தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை விடப்படும் காலங்களில் பல லட்சம் பேர் ஒரே நேரத்தில் சென்னையில் இருந்து வெளியேறி சொந்த ஊர் சென்று வருகிறார்கள். அப்படியான காலக்கட்டங்களில் சிறப்பு பேருந்துகள் மாநில அரசு சார்பில் விடப்படுகிறது. அதேபோல் மத்திய அரசு சார்பில் கூடுதல் ரயில்களும் இயக்கப்படுகிறது.

    Advertisement

    ஆனால் இரண்டுமே போதவில்லை என்பதே எதார்த்தமான உண்மை. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், ரயில்கள் தேவைக்கும், இயக்கப்படுவதற்கும் வித்தியாசம் என்பது மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசமாக உள்ளது. மக்கள் போதிய அளவில் ரயில்கள் விடப்படாததால் அதிக கட்டணம் குறித்து ஆம்னி பேருந்துகளில் பயணிக்கும் நிலை ஏற்படுகிறது. பல வயதானவர்கள், குழந்தைகள் ரயில் பயணத்தை தான் விரும்புகிறார்கள். ஆனால் போதிய சிறப்பு ரயில்கள் இயக்கப்படாத காரணத்தால் மக்கள், ஒவ்வொரு பண்டிகையின் போதும் அவதிப்படுகிறார்கள்.

    இதை சுட்டிக்காட்டி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்க்கு, தி.மு.க. நாடாளுமன்ற குழு துணை தலைவர் தயாநிதிமாறன் எம்.பி. கடிதம் அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறுகையில், "வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை விடுமுறை நாட்களில் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்வதற்கான ரயில் டிக்கெட் முன்பதிவு சில நிமிடங்களிலேயே முடிந்து விடுகின்றன.விடுமுறை காலங்களில் ஆம்னி பஸ்களில் வழக்கமான கட்டணத்தைவிட பல மடங்கு கட்டணம் வசூலிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    Advertisement

    இதன் விளைவாக ஆயிரக்கணக்கான பயணிகள் தங்கள் கடைசி நேர மற்றும் குறைந்த பயண கட்டண தேர்வாக ரயில் சேவையை நாடுகின்றனர். எனினும், குறைவான சேவைகளாலும் போதுமான ரயில் பெட்டி வசதிகள் இல்லாததாலும் கடும் சிரமங்கள் ஏற்படுகிறது. முன்பதிவில்லாத பொதுப்பெட்டிகளில் பயணிகள் கூட்டம் அதிகமாவதால் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் உள்ளிட்ட பயணிகள் பல மணிநேரம் நின்று பயணிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகின்றனர்.

    இந்த நெரிசல் காரணமாக முன்பதிவு செய்யாத பயணிகள் முன்பதிவு செய்யப்பட்ட ரயில் பெட்டிகளுக்குள் நுழைகின்றனர். இதனால் முறையான முன்பதிவு செய்திருக்கும் பயணிகளுடன் தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படுகின்றன.

    Advertisement

    எனவே தொடர் விடுமுறைகள், பண்டிகை காலங்கள் மற்றும் பயணிகள் வருகை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என்று கணிக்கக்கூடிய மற்ற நாட்களிலும் சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, கோவை, நெல்லை ஆகிய முக்கிய வழித்தடங்கள் மற்றும் அதிக தேவை உள்ள வழித்தடங்களில் கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    English Summary

    Central Chennai Dayanidhi Maran MP has written a letter to Union Railway Minister Ashwini Vaishnaw requesting the operation of additional trains from Chennai to major cities during long holidays and festive seasons.