பனையூர் கேட்டை தள்ளிகிட்டு, உள்ளே போன விஜயபாஸ்கர்ஸ் அன்ட் கோ! ஆர்.பி.உதயகுமார் அட்டாக்

  • சென்னை: அரசியல் அகதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து, அமைச்சர் பதவி கொடுத்து அழகு பார்ப்பது அதிமுகவை அபகரிக்க ரகசிய திட்டமே தவிர வேறொன்றும் இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், முதல்வர் விஜய் மீது கடும் குற்றச்சாட்டியுள்ளார்.

    Advertisement

    இதுகுறித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருப்பதாவது: தமிழக அரசியலில் பெரும் எதிர் பார்ப்புகளோடு, ஆச்சரியங்களோடு உதயமான தமிழக வெற்றி கழகத்தில் இப்போத அரசியல் அனாதைகளாலும் ஆதரவுற்றவர்களாலும் நிரம்பி வழிவதை பார்க்கும்போது
    நமக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.

    Advertisement

    பொதுவாக விஜய் மன்றத்தினுடைய அந்த உறுப்பினர்கள் பேசிக் கொள்வார்கள், " நம்ம விஜய்யை நம்பி கெட்டுப் போனதாக சரித்திரம் இல்லை" என தாரக மந்திரமாக கொண்டு விஜய் மன்றத்தில் 30 ஆண்டு காலம் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் மக்களுக்காக சேவையாற்றி வருகிறார்கள்.

    அப்படி விஜய் தான் உலகம் என்று 30 ஆண்டு காலம் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உழைத்துக் கொண்டே இருக்கிற ஆரம்பகால மன்ற நிர்வாகிகளுக்கு எத்தனையோ பேர் தகுதியோடு இருக்கிற போது, எத்தனையோ பேர்கள் எதிர்பார்ப்புகளோடு இருக்கிற போது, எத்தனையோ பேர்கள் ஆர்வத்தோடு இருக்கிற போது அவர்களை எல்லாம் தள்ளி வைத்துவிட்டு, அரசியல் அடைக்கலம் தேடி வந்த ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன், நிர்மல் குமார் ஆகியோர்களுக்கு அமைச்சர் பதவிகளை வாரி வாரி வழங்கி வள்ளலாக காட்சியளிக்கிற விஜய்யின் ரகசிய திட்டம் என்ன தெரியுமா?

    Advertisement

    அரசியல் அகதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பது மட்டும் அவருடைய எண்ணம் அல்ல, எம்ஜிஆர் தொடங்கிய கட்சியை அபகரிக்க வேண்டும் என்ற திட்டத்தில் அடுத்தடுத்து அரசியல் அதிகாரம் என்கிற அதிரடி ஆஃபர்களை அறிவித்திருக்கிறார் விஜய்.

    அதிமுகவின் 54 ஆண்டு கால மாபெரும் மக்கள் சக்தி கொண்டிருக்கிற இந்த இயக்கத்தில் இப்போது ஆடுபுலி ஆட்டத்தை அரங்கேற்றி வைத்து ராஜினாமா நாடகத்தை ஒவ்வொரு நாளும் நடத்திக் கொண்டிருக்கிற அந்த விபரீத விளையாட்டுகளை சந்தோஷமாக மனதுக்குள்ளே பார்த்து ரசித்து கொண்டிருக்கிறார் விஜய்.

    விஜய் அதிரடி உத்தரவின் பேரில் பனையூரில் சனிக்கிழமை இணைப்பு விழாவில் விஜய்யின் தலைமை ஏற்க பால்காவடி, பன்னீர் காவடி ,பறவை காவடி தூக்கிச் சென்றாலும் அங்கே வாசலிலே இவர்களை வரவேற்க ஒரு நாதி கூட இல்லை, "சரி வந்தது வந்து விட்டோம், ஆத்திர அவசரத்திற்கு நாம் கௌரவம் எல்லாம் பார்க்க கூடாது" என்று பூட்டிய கதவை தள்ளிக் கொண்டு உள்ளே சென்றால் அங்கே த.வெ.க கட்சியின் தலைவர் முதல்வர் விஜய்யின் தரிசனமும் இதுவரை யாருக்கும் கிடைக்கவில்லை.

    Advertisement

    அம்மா போட்ட பிச்சையால் அரசியல் வாழ்வு பெற்றோர்கள் தொடர்ந்து பத்தாண்டு காலம் பத்தரைமாத்து தங்கங்களாக எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஏற்று காலை பிடித்து, கையை பிடித்து அவரிடத்திலே காரியம் சாதித்து வாழ்வை வசந்தமாக மாற்றிக் கொண்டார்கள்.

    அதுமட்டுமல்ல இங்கே நாங்கள் தான் சூராதிசூரர்கள் என்று வீரத்தோடு மார்தட்டி நின்றவர்கள் எல்லாம் இப்போது அடைத்து கிடைக்கிற கேட்டை அடித்து பிடித்து உள்ளே தள்ளி பதவி பிச்சை கேட்டு பனையூருக்கு பயணம் செய்கின்ற பாவிகளே உங்களை பார்க்கிற போது உண்மையான கோடிக்கணக்கான விசுவாச தொண்டர்களுக்கு நெஞ்சை இரண்டாக பிளக்கின்ற வலியும் வேதனையும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

    Advertisement

    இந்த கொடுமைகளை எல்லாம் பார்த்து பார்த்து உண்மை விசுவாசத் தொண்டர்களின் கண்களிலே கண்ணீரும் வற்றிப் போய்விட்டது. விசுவாசத்தை காட்டி இப்படித்தான் வாழ வேண்டும் என்று மன உறுதியோடு விசுவாசத்தோடும் பல பேர் வாழ்ந்து காட்டி வரலாறு படைத்து வருகிறார்கள் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோடிக்கணக்கான தொண்டர்கள்.

    கட்சியை காட்டிக் கொடுத்துவிட்டு அடுத்த கட்சியை காப்பாற்ற போகிறேன் என்று புதிய அவதாரம் எடுக்கின்ற அந்த கயவர்களை நாம் பேசாமல் இருக்க முடியவில்லை.பதவி தேடி சொல்லுகிற பதவி ஆசையிலே அதிகார ஆசையிலே அகதிகளாக த.வெ.க விற்கு செல்லுகிற அண்ணா திமுகவை அழிக்க நினைக்கிற சில பேருக்கு வழி காட்டுகிற விஜய், உங்களுக்கும் தான் இந்த தமிழ்நாட்டு மக்கள் எச்சரிக்கையாக சொல்லுகிறார் தூய சக்தி தூய சக்தி என்று இப்போது எல்லோரும் தூற்றுகிற சக்தியாக மாறி இருக்கிறீர்கள்

    Advertisement

    போற்றுகிற சக்தியாக அவதாரம் எடுப்பீர்கள் என்று நம்பி வாக்களித்த மக்களுக்கு, நீங்கள் ஆடுகிற அரசியல் ஆடு புலி ஆட்டம் தூற்றுகிற கட்சியாக நீங்கள் மெல்ல மெல்ல மாறிக் கண்டிருக்கிறீர்கள். இவ்வாறு அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

    English Summary

    AIADMK Ex minister R.B. Udhayakumar accuses that Tamil Nadu CM Vijay of secretly attempting to weaken and take over the AIADMK party.