சென்னை: அதிமுக பொதுக் குழு கூட்டம் விரைவில் கூட்டப்படும் என பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் காவிரி விவகாரம் குறித்து அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
விடுதலை போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 221 ஆவது நினைவுதினத்தையொட்டி சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதையடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் அதிமுக பொதுக்குழு விரைவில் கூட்டப்படும். ஏற்கெனவே அமைப்பு ரீதியான மாவட்ட நிர்வாகிகளை அழைத்து பேசி அவர்களின் கருத்துகளை கேட்டு இருக்கிறோம். சட்டசபை கூட்டத்தொடர் முடிந்த பிறகு, முதலில் செயற்குழு கூட்டப்படும். பிறகு பொதுக்குழு கூட்டப்படும் என தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்ததிலிருந்து அதிமுக ஒரு தேர்தலில் கூட வெற்றி பெறவில்லை. எடப்பாடியின் செயல்பாட்டால் கட்சியில் இருந்து பிரிந்தவர்கள், நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்க்க மூத்த நிர்வாகிகள் வலியுறுத்தியதை எடப்பாடி பழனிசாமி மறுத்துவிட்டார் என சொல்லப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சட்டசபைத் தேர்தலில் எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட அதிமுக பறி கொடுத்துவிட்டது. இது அதிமுகவினர் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. எனவே பொதுக் குழு கூட்டத்தை கூட்டி தேர்தல் தோல்விக்கு காரணத்தை ஆராய வேண்டும் என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், எஸ்.பி. வேலுமணி. தங்கமணி உள்ளிட்டோர் வலியுறுத்தினர். இவ்வாறு வலியுறுத்தியும் எடப்பாடி பழனிசாமி தனது தோல்வியை ஒப்புக் கொள்ளாததால் இனியும் அதிமுகவில் இருந்தால் நமக்கு எதிர்காலம் கிடையாது என கருதிய மூத்த நிர்வாகிகள் மரகதம் குமரவேல், சத்தியபாமா, ஜெயக்குமார், இசக்கி சுப்பையா, சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகிய 6 பேர் தங்களது எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துவிட்டனர். இப்படியே போனால் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியும் அவரது மகன் மிதுனும் மட்டுமே இருக்க முடியும் என விமர்சனங்கள் எழுந்தன. முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், தவெகவில் இணைவார் என சொல்லப்பட்ட நிலையில் தற்போது வரை அவர் அதிமுக நிகழ்வுகளில் இருந்து ஒதுங்கியே உள்ளார். தேர்தல் முடிவுகளுக்கு பிறகு திமுகவுடன் கூட்டணி வைத்து ஆட்சியை பிடிக்க எடப்பாடி பழனிசாமி முயற்சித்ததாக குற்றம்சாட்டி 23 எம்எல்ஏக்கள் வேலுமணி தலைமையில் தனி அணியாக செயல்பட்டனர். வேலுமணி, சண்முகம், வீரமணி உள்ளிட்டோர் தவெக அரசு கொண்டு வந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதையடுத்து அவ்வாறு வாக்களித்தவர்களின் கட்சி பதவிகளை எடப்பாடி பழனிசாமி பறித்தார். பிறகு அவர்களுக்கு பதிலாக புதிய நிர்வாகிகளை நியமித்தார். அவர்கள் தங்கள் பகுதியில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு சென்ற போது ஏற்கெனவே இருந்த மாவட்டச் செயலாளர்களின் ஆதரவாளர்கள் தடுத்து நிறுத்தியதால் அவர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. குறிப்பாக விழுப்புரம் அதிமுக அலுவலகத்தில் சி.வி.சண்முகம் ஆதரவாளர்களுக்கும் புதிய மாவட்டச் செயலாளரின் ஆதரவாளர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பிறகு சி.வி.சண்முகம் வந்து தனது ஆதரவாளர்களை அமைதிப்படுத்தினார். இதைத் தொடர்ந்து எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த அந்த 6 எம்எல்ஏக்களை தவிர மற்றவர்கள் எடப்பாடி பழனிசாமி அணிக்கே சென்றுவிட்டனர். அவர்களில் சி.வி.சண்முகம் தனியாகவே செயல்பட்டு வருகிறார். அது போல் பதவி பறிக்கப்பட்ட வேலுமணி உள்ளிட்டோருக்கு அண்மையில் புதிய பதவிகளை எடப்பாடி பழனிசாமி வழங்கினார். ஆனால் அந்த பதவிகளை ஏற்க வேலுமணி விரும்பவில்லை என சொல்லப்பட்டது. அண்மையில் கூட சி.வி.சண்முகம், தான் அதிமுகவில் இருக்கிறேனா இல்லையா என்பதை எடப்பாடி பழனிசாமிதான் சொல்ல வேண்டும் என கூறியிருந்தார். ஒவ்வொரு முறையும் செய்தியாளர்களின் சந்திப்பின் போது பொதுக் குழு கூட்டத்தை கூட்ட வேண்டும் என்றே அவர் வலியுறுத்தி வந்தார். தற்போது சி.வி.சண்முகம் எதிர்பார்த்தது போல் எடப்பாடி பழனிசாமி விரைவில் பொதுக் குழுவை கூட்ட போவதாக அறிவித்திருக்கிறார். அந்த பொதுக் கூட்டத்தில் என்னென்ன நடக்குமோ? எடப்பாடி பழனிசாமியை பதவி விலக கோருவார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.