DJ Warning: பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகமா? ஒரு செங்கல்லை கூட வைக்க முடியாது! ஜெயக்குமார்

  • சென்னை: பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க விடமாட்டோம்; ஒரு செங்கல் கூட எடுத்து வைக்க முடியாது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    Advertisement

    தந்தை பெரியாரின் 148-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை அண்ணா மேம்பாலம் அருகே அமைந்துள்ள தந்தை பெரியார் திருவுருவச் சிலைக்கு கீழ் அலங்கரித்து வைத்துள்ள படத்திற்கு அதிமுக சார்பில் அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    Advertisement

    இதில் முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், பா.வளர்மதி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆதிராஜாராம் மற்றும் பொன்னையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது: பெண்களுக்கு சம உரிமை மற்றும் சமூகநீதி குறித்து பெரியார் ஆற்றிய பங்கு முக்கியமானது. பெண்களுக்கான உரிமையை மீட்டுக் கொடுப்பதற்கும், சமூகநீதியை நிலைநாட்டுவதற்கும் பெரியார் முக்கிய பங்காற்றினார்.

    பெரியார் வழியில் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆட்சி காலங்களிலும் சமூகநீதி மற்றும் பெண்களுக்கான உரிமைகள் பாதுகாக்கப்பட்டதாக ஜெயக்குமார் தெரிவித்தார்.

    எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில் பெரியார் பெயரில் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டதாகவும், அதேபோல் பெண்களுக்கான உள்ளாட்சி இடஒதுக்கீட்டை கொண்டு வந்தவர் ஜெயலலிதா என்றும் அவர் கூறினார்.

    Advertisement

    புதிய தலைமைச் செயலகம் குறித்து பேசியவர், பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் தமிழக அரசின் திட்டம் குறித்தும் கருத்து தெரிவித்தார்.

    தமிழக மக்களும், சென்னை மக்களும், குறிப்பாக மீனவ மக்களும் புதிய தலைமைச் செயலகம் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையை திரும்பப் பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    எனவே, புதிய தலைமைச் செயலகம் தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும் என்றும், அரசு அதனை திரும்பப் பெறும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்தார்.

    தமிழக அரசு நிதி நெருக்கடியில் இருக்கும் நிலையில், சுமார் ரூ.1,200 கோடி செலவில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பது தேவையா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

    Advertisement

    புதிய தலைமைச் செயலகத்திற்காக ரூ.1,200 கோடி செலவு செய்யும் நிலையில், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத நிலை இருப்பதாகவும் விமர்சித்தார்.

    பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கு பதிலாக, சில கோடி ரூபாய் செலவில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகத்தை மீண்டும் தலைமைச் செயலகமாக மாற்றலாம் என பிரேமலதா விஜயகாந்த் கூறியிருப்பது குறித்தும் ஜெயக்குமார் கருத்து தெரிவித்தார்.

    ஓமந்தூரார் அரசு மருத்துவமனை தற்போது பொதுமக்களுக்கும் நோயாளிகளுக்கும் பயன்பட்டு வரும் நிலையில், அதனை மீண்டும் தலைமைச் செயலகமாக மாற்றுவது ஏற்புடையதல்ல என்றார்.

    பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்ட விடமாட்டோம். அங்கு ஒரு செங்கல் கூட எடுத்து வைக்க முடியாது.. புதிய தலைமைச் செயலகத் திட்டம் தொடர்பாக அதிமுக சார்பில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், ரூ.1,200 கோடி செலவில் புதிய வளாகம் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

    Advertisement

    இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பாமக இதுவரை ஆதரவு தெரிவிக்கவில்லை என்ற கேள்விக்கு, பதிலளித்த ஜெயக்குமார்,
    இப்போதுதான் தேர்தல் நாமினேஷன் முடிந்திருக்கிறது. இன்னும் நேரம் இருக்கிறது. Let's wait and watch" என்று தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் கூறுகையில், பணம் பலத்தால் விஜய் மிகவும் ஆட்டம் போடுகிறார், அவர் வெறும் காகிதம் என்பதை மக்கள் உணர்ந்து விட்டார்கள். இனிமேல் அவர் ஆட்டம் மக்களிடம் எடுபடாது, அவர் ஒரு செல்லாக்காசு என்றார்.

    English Summary

    ADMK Ex Minister Jayakumar says that even one brick couldn't be placed for constructing New secretariat at Foreshore Estate.