அட்வான்ஸ் வரி கட்டிட்டீங்களா? ரூ.10000 மேல் வரி வருதா? யாரெல்லாம் கட்டணும்? கட்டாவிட்டால் என்னாகும்?

  • சென்னை: வருமான வரி கட்டுறீங்களா? இன்று செப்டம்பர் 15ம் தேதி அட்வான்ஸ் வரியின் இரண்டாவது தவணையை கட்ட வேண்டிய கடைசி நாளாகும்.. யாரெல்லாம் இந்த வரியை கட்ட வேண்டும், எவ்வளவு கட்ட வேண்டும், தவறினால் என்ன ஆகும் தெரியுமா? இவைகளை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்..!!

    Advertisement

    அட்வான்ஸ் வரி என்றால் என்ன? ஒரு வருடம் முழுவதும் சம்பளம், தொழில், வாடகை, வட்டி, பங்குகள் போன்ற பல வழிகளில் வருமானம் வருகிறது என்று வைத்துக்கொள்வோம். அந்த வருமானத்துக்கு அடுத்த ஆண்டு ஒரே நேரத்தில் மொத்த வரியையும் கட்டுவதற்குப் பதிலாக, வருமானம் கிடைக்கும் ஆண்டிலேயே கொஞ்சம் கொஞ்சமாக வரியை செலுத்துவதுதான் அட்வான்ஸ் வரி.

    Advertisement

    அதன்படி, 2026-27 வரி ஆண்டுக்கான முன்கூட்டிய வரியும் குறிப்பிட்ட தவணைகளாக செலுத்தப்படுகிறது. இதில் இரண்டாவது தவணையை செலுத்துவதற்கான கடைசி நாள் இன்று செப்டம்பர் 15.

    யாரெல்லாம் இந்த வரியை கட்டணும்

    பொதுவாக, ஒரு வருடத்துக்கு செலுத்த வேண்டிய மொத்த வரி, ஏற்கனவே பிடித்தம் செய்யப்பட்ட வரியை கழித்த பிறகும் 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் இருந்தால், அவர்கள் அட்வான்ஸ் வரியை செலுத்த வேண்டியிருக்கும்.

    சம்பளம் மட்டுமே வாங்குகிறோம் என்பதால் இதை அலட்சியப்படுத்திவிட முடியாது. சம்பளம் தவிர வட்டி, வாடகை, பங்குகள் அல்லது வேறு வழிகளில் கூடுதல் வருமானம் வந்திருந்தாலும், அதற்கேற்ப வரிப் பொறுப்பு ஏற்படலாம்.

    Advertisement

    தவணை வசதிகள்

    இதை ஒரு உதாரணத்துடன் பார்த்தால் இன்னும் ஈஸியாகவே புரியும்.. ஒருவருக்கு இந்த ஆண்டு மொத்தமாக 1 லட்சம் ரூபாய் வரி கட்ட வேண்டியிருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அந்த 1 லட்சத்தையும் அடுத்த ஆண்டு வரை வைத்திருந்து ஒரே தடவையாக கட்டுவதற்கு பதிலாக, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தவணை தவணையாக செலுத்த வேண்டும்.

    முதல் தவணையாக ஜூன் 15-க்குள், ஆண்டுக்கான முன்கூட்டிய வரியில் குறைந்தது 15 சதவீதம் செலுத்தியிருக்க வேண்டும். அடுத்து, செப்டம்பர் 15-க்குள் மொத்தமாக 45 சதவீதத்தை எட்டியிருக்க வேண்டும்.

    அதாவது, ஜூன் மாதத்தில் ஏற்கனவே 15 சதவீதம் செலுத்தியிருந்தால், இன்று வரை மேலும் 30 சதவீதத்தை செலுத்தியிருக்க வேண்டும்.

    Advertisement

    அதன்பிறகு டிசம்பர் 15-க்குள் மொத்த வரியில் 75 சதவீதமும், மார்ச் 15-க்குள் 100 சதவீதமும் செலுத்த வேண்டும். இப்படி தவணை தவணையாக கட்டுவதால், ஆண்டின் முடிவில் மொத்த தொகையையும் ஒரே நேரத்தில் செலுத்த வேண்டிய சுமை குறையும்.

    ஆனால், தொழில் அல்லது தொழில்முறை வருமானம் இல்லாத மூத்த குடிமக்களுக்கு பொதுவாக முன்கூட்டிய வரி செலுத்த வேண்டிய கட்டாயம் இல்லை.

    இன்று கட்டாவிட்டால் என்னாகும்?

    தவணையாக செலுத்த வேண்டிய தொகையை குறைவாக செலுத்தினாலோ அல்லது தாமதமாக செலுத்தினாலோ, விதிகளின்படி குறைவாக செலுத்தப்பட்ட தொகைக்கு வட்டி சுமை ஏற்படலாம். முக்கியமாக, 1 சதவீதம் மாத வட்டி போன்ற தாக்கம் ஏற்படுவதால், "அப்புறம் பார்த்துக்கொள்ளலாம்" என்று அசால்ட்டாக விட்டுவிடுவது கூடுதல் செலவை உருவாக்கக்கூடும்.

    Advertisement

    அதனால், இந்த ஆண்டு வருமானத்தில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறதா, கூடுதல் வருமானம் வந்திருக்கிறதா, ஏற்கனவே எவ்வளவு வரி செலுத்தியிருக்கிறோம், இன்னும் எவ்வளவு செலுத்த வேண்டும் என்பதை ஒருமுறை சரிபார்த்துக் கொள்வது நல்லது.

    செப்டம்பர் 15-ம் தேதியை கடந்த பிறகு தேவையில்லாமல் வட்டி சுமை வந்துவிடாமல் இருக்க, அட்வான்ஸ் வரி செலுத்த வேண்டியவர்கள் தங்களுக்கான தொகையை சரியாக கணக்கிட்டு செலுத்துவது முக்கியம்.

    அட்வான்ஸ் வரி எப்படி கட்ட வேண்டும்

    அட்வான்ஸ் வரியை ஆன்லைனிலேயே எளிதாக செலுத்தலாம். வருமான வரித்துறையின் வெப்சைட்டிற்கு சென்று e-Pay Tax என்பதை தேர்வு செய்து, உங்கள் பான் நம்பரையும், செல்போன் நம்பரையும் கொடுத்து ஓடிபி மூலம் சரிபார்க்க வேண்டும்.

    Advertisement

    பிறகு அட்வான்ஸ் வரி செலுத்தும் ஆப்ஷனை தேர்வு செய்து, செலுத்த வேண்டிய ஆண்டையும் தொகையையும் குறிப்பிட்டு, இணைய வங்கி, வங்கி அட்டை, யுபிஐ உள்ளிட்ட வசதிகள் மூலம் பணத்தை செலுத்தலாம். பணம் செலுத்திய பிறகு கிடைக்கும் ரசீதை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்...!!

    English Summary

    Advance Tax Due Today?.. Tax Above ₹10,000? Who Needs to Pay and What Happens If You Miss It?