சென்னை: தவெக ஆட்சிக்கு வந்ததில் இருந்து திமுக முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மீது கைது நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். ஊழல் புகாரில் முன்னாள் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரம் திமுகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதனுடன் நிற்காமல் திமுக கவுன்சிலர் முதல் எம்எல்ஏக்கள் வரை வழக்குகள் பாய்ந்து வருகிறது. அன்பில் மகேஷ் கைதின்போது, காவல்துறையினரை ஒருமையில் பேசி மிரட்டியதற்காக திமுக முன்னாள் அமைச்சர் சேகர்பாபு, எம்.பி.கலாநிதி வீராசாமி மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
லஞ்சம், ஊழலற்ற நேர்மையான ஆட்சியை வழங்குவோம் என கூறியுள்ளனர். லஞ்சம் வாங்கியவர்களை விட மாட்டோம் என்றும் முதலமைச்சர் விஜய் கூறினார். திமுக ஆட்சியில் பள்ளிகளில் மிரட்டி வசூல் செய்த புகாரில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். இது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தவெக ஆட்சிக்கு வந்ததில் இருந்து திமுக முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மீது வழக்கு பதிந்து கைது செய்யும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அன்பில் மகேஷ்க்கு வருகிற நவம்பர் 6 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. அன்பில் மகேஷ் கைதுக்கு திமுக தலைவர் மு க ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். உதயநிதி தொடங்கி பல முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குப்பதிந்து கைது செய்யப்படுவதால், தவெக மீது திமுவினர் கடுமையான கொந்தளிப்பில் இருக்கிறார்கள். கரூரிலேயே போட்டிருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் இது நடந்திருக்குமா என்று திமுக கவுன்சிலர் டீட்டா சரவணன் கூறினார். அவர் மீது வழக்குப்பதிந்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். சரவணன் தலைமறைவாகியுள்ளார். முதலமைச்சர் விஜய் தன்னுடைய டேபிளில், திமுகவின் 3 பைல் இருப்பதாக கூறினார். அதில் முதல் பைல் இதுதான். ஒரே நாளில் ரூ.400 கோடிக்கு வசூல் செய்தனர். 2,500க்கும் மேற்பட்ட பள்ளிகளை மிரட்டி பணம் வசூலிக்கப்பட்டது என அமைச்சர் நிர்மல்குமார் கூறினார். அன்பில் மகேஷ் கைதின் மீது திமுகவினர் காவல்துறையினரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வேப்பேரி காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில், திமுக முன்னாள் அமைச்சரும், துறைமுகம் தொகுதி எம்எல்ஏவுமான சேகர்பாபு, கலாநிதி வீராசாமி மீது வேப்பேரி காவல்துறையினர் இரண்டு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அன்பிலை காவல் ஆணையர் அலுவலகத்தில் விசாரிக்கும்போது, சேகர்பாபு காவல் ஆய்வாளரை ஒருமையில் மிரட்டியதாக கூறப்படுகிறது. "நீயெல்லாம் ஆய்வாளரா" என்று மிரட்டும் தொனியில் சேகர்பாபு பேசியதாக புகார் கூறப்பட்டது. அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல், அநாகரீகமான வார்த்தை பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சேகர்பாபுவையும் கைது செய்ய வேண்டும் என்று தவெகவினர் கருத்து கூறி வருகிறார்கள்.அன்பில் மகேஷ் கைது
சேகர்பாபு, கலாநிதி மீதும் வழக்கு