லதா ரஜினிகாந்த் 'மக்கள் மேடை' இயக்கத்தை நேற்றுதான் தொடங்கினாரா? தீயாகப் பரவிய தகவல்.. உண்மை என்ன?

  • சென்னை: அண்ணாமலை தனது புதிய அரசியல் இயக்கத்தை அறிவித்த சில மணி நேரங்களிலேயே, நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த், 'மக்கள் மேடை' என்ற பெயரில் புதிய இயக்கம் ஒன்றை தொடங்கியதாக தகவல்கள் பரவின. ஆனால், இந்த இயக்கம் கடந்த மார்ச் மாதமே தொடங்கப்பட்ட நிலையில் நேற்று திடீரென புதிதாக தொடங்கியதுபோல தவறாக செய்தி பரவியுள்ளது.

    Advertisement

    முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பாஜகவிலிருந்து விலகி, தான் நடத்தி வரும் 'We The Leaders' என்ற அமைப்பை அரசியல் இயக்கமாக மாற்றுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த், 'மக்கள் மேடை' என்ற பெயரில் இதேபோன்ற ஒரு அமைப்பைத் தொடங்கியுள்ளதாக சமூக வலைதளங்களில் பரவலாகப் பேசப்பட்டது.

    Advertisement

    ஆனால், லதா ரஜினிகாந்த்தின் மக்கள் மேடை பல மாதங்கள் முன்பே தொடங்கப்பட்டது என்பது தெரியவந்துள்ளது. அண்ணாமலை தனது அறிவிப்பை வெளியிடுவதற்கு வெகுகாலத்திற்கு முன்பே, அதாவது மார்ச் 7 அன்று சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டத்தில் மக்கள் மேடை தொடங்கப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    ரஜினிகாந்தின் பி.ஆர்.ஓ இதனை உறுதிப்படுத்தியுள்ளார். "மக்கள் மேடை இப்போது தொடங்கப்பட்ட ஒரு புதிய அமைப்பு அல்ல. இது மார்ச் மாதத்தில் நிறுவப்பட்டது. அப்போதே இதுகுறித்த செய்திகள் உள்ளன. லதா ரஜினிகாந்த்தின் இன்ஸ்டாகிராம் கணக்கில்கூட இதுகுறித்த ஒரு பதிவு இருக்கிறது." எனத் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    கல்வியாளரான லதா ரஜினிகாந்த், தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் மக்களின் நலனுக்காக "மக்கள் மேடை" இயக்கத்தை அறிமுகம் செய்துள்ளார். தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காகப் பல்வேறு துறைகளில் நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்தவும், தனிநபர் முயற்சிகளை ஒன்றிணைத்து மக்கள் சக்தியாக மாற்றவும் இந்த இயக்கம் தொடங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து முன்பு லதா ரஜினிகாந்த் வெளியிட்ட வீடியோவில், தமிழக மக்களின் வளர்ச்சிக்காகவும், சமூக முன்னேற்றத்திற்காகவும் உழைக்க விரும்பும் அனைவரும் இந்த மேடையில் இணைய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

    திறமை, அனுபவம், உழைப்பு மற்றும் சமூக அக்கறை கொண்ட எந்தவொரு தனிநபராக இருந்தாலும் இந்த மக்கள் மேடை இயக்கத்தில் தாராளமாக இணையலாம் என லதா ரஜினிகாந்த் கூறியுள்ளார். குறிப்பாக மூத்த குடிமக்கள், ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள், ஆசிரியர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள், தபால்துறை பணியாளர்கள் மற்றும் ராணுவ வீரர்கள் இதில் பங்களிக்கலாம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

    Advertisement

    புதிய மாற்றங்களை உருவாக்கத் துடிக்கும் இளம் தொழில்முனைவோர் மற்றும் மாணவர்களின் ஆற்றலும் அனுபவமும் தமிழகத்தின் வளர்ச்சிக்குப் பயனுள்ளதாக அமையும். சமூக அக்கறை கொண்ட குடிமக்கள் தங்களின் அனுபவங்களை மாநில முன்னேற்றத்திற்காகப் பயன்படுத்த விரும்பினால் இந்த ஆக்கப்பூர்வமான இயக்கத்தின் மூலம் தங்களின் பங்களிப்பை வழங்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

    பாஜகவிலிருந்து விலகி அண்ணாமலை புதிய இயக்கம் தொடங்குவதாக அறிவித்த நிலையில், லதா ரஜினிகாந்தின் மக்கள் மேடையும் வைரலாகி வருகிறது. ஆனால், லதா ரஜினிகாந்த் இந்த அமைப்பை மார்ச் 7 ஆம் தேதியே தொடங்கிவிட்ட தகவல் இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் தெரியவந்துள்ளது. இந்நிலையில் நேற்று திட்டமிட்டு இந்தச் செய்தி பரப்பப்பட்டதா என்ற கேள்வி சமூக வலைதளங்களில் எழுப்பப்பட்டு வருகிறது.

    English Summary

    Just hours after Annamalai announced his new political movement, reports circulated that actor Rajinikanth's wife, Latha Rajinikanth, had launched a new movement named ‘Makkal Medai’. However, while this movement had actually been launched March, news suddenly spread yesterday as if it were a new initiative.