'முதல்வர் படைப்பகம்’ திட்டப் பெயரில் உள்ள முதல்வர் என்ற பெயர் நீக்கம்? மீண்டும் எழுந்த சர்ச்சை!

  • சென்னை: 'நான் முதல்வன்' திட்டத்தின் பெயர் மாற்றத்தைத் தொடர்ந்து, 'முதல்வர் படைப்பகம்' திட்டப் பெயரில் உள்ள முதல்வர் என்ற பெயர் நீக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாநகராட்சியின் கீழ் உள்ள முதல்வர் படைப்பகத்தின் இயக்கம், பராமரிப்பு பணிகளை தனியார் மூலம் மேற்கொள்வதற்கான டெண்டரில் வெறும் 'படைப்பகம்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    Advertisement

    சென்னையில் 16 இடங்களில் செயல்படும் முதல்வர் படைப்பகம் மாணவர்கள், போட்டித் தேர்வுகளுக்கு தயாராகுவோர், ஸ்டார்ப் அப் நடத்துவோர் உள்பட பலருக்கும் பெரிதும் பயன்பட்டு வருகிறது.

    Advertisement

    கடந்த திமுக ஆட்சியில், போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் குறைந்த கட்டணத்தில் படிக்கும் சூழலை ஏற்படுத்தவும், ஸ்டார்ட் அப் தொடங்குவோர் குறைந்த கட்டணத்தில் தங்கள் அலுவலகமாக பயன்படுத்திக் கொள்ளவும், 'முதல்வர் படைப்பகம்' என்ற பகிர்ந்த பணியிட மையம் (Co-working Space) அமைக்கப்பட்டது.

    முதலில் சென்னை கொளத்தூரில் தொடங்கி வைக்கப்பட்ட முதல்வர் படைப்பகத்துக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து பல்வேறு இடங்களிலும் முதல்வர் படைப்பகங்கள் ஏற்படுத்தப்பட்டன. போட்டித் தேர்வுக்கு தயாராவோருக்கு பயன்படும் கல்வி மையம், உணவருந்தும் கூடம், ஸ்டார்ட் அப் அலுவலகங்கள் செயல்படும் தளம் உள்ளிட்டவை இங்கு இருக்கும். அமைதியான சூழல், இலவச வைஃபை வசதி, கணினி வசதி, ஏசி வசதி, இருக்கை வசதி என அனைத்தும் கிடைக்கும்.

    Advertisement

    இந்நிலையில், முதல்வர் படைப்பகத்தின் பெயர் மாற்றப்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. முதல்வர் படைப்பகம் என்பதற்கு பதிலாக 'படைப்பகம்' என சென்னை மாநகராட்சி டெண்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் கீழ் உள்ள முதல்வர் படைப்பகத்தின் இயக்கம், பராமரிப்பு பணிகளை தனியார் மூலம் மேற்கொள்வதற்கான டெண்டரில் வெறும் 'படைப்பகம்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    ஏற்கனவே, கடந்த ஆட்சியில் திமுக அரசால் தொடங்கப்பட்ட, மாணவர்களுக்கு பெரும் பலன் அளித்த நான் முதல்வன் திட்டத்தின் பெயர் தற்போது 'திறன் தமிழ்நாடு' (TN Skill) என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நான் முதல்வன் திட்டம் தொடர்பாக பதிவிட்ட பழைய பதிவுகள் மற்றும் வீடியோக்களும் நீக்கம் செய்யப்பட்டுள்ளன. இதற்கு திமுக தரப்பில் கடும் கண்டனங்கள் எழுந்திருந்தன.

    English Summary

    Following the renaming of the ‘Naan Mudhalvan’ scheme, the removal of the word ‘Mudhalvar’ from the name of the ‘Mudhalvar Padaippagam’ scheme has sparked controversy. In the tender issued by the Chennai Corporation to outsource the operation and maintenance of the ‘Mudhalvar Padaippagam’, the facility is referred to simply as ‘Padaippagam’.