திருவண்ணாமலை: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக வெற்றி பெற்றுள்ளது. இரண்டு தொகுதிகளையும் வைத்திருந்த அதிமுக மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. திமுக இண்டாம் இடத்தை பிடித்தது. அதிமுகவின் தோல்வி பேசு பொருளாகியுள்ளது. குழந்தைகளை பிடிப்பதை போல தவெகவினர் குதிரை பேரம் நடத்தி அதிமுக எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவதாக முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி குற்றம் சாட்டியுள்ளார்.
திருவண்ணாமலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம். நடைபெற்று முடிந்த சட்டமன்ற இடைத்தேர்தல் ஏன் வந்தது, எதற்காக வந்தது, எப்படி திணிக்கப்பட்டது என்று அனைவருக்கும் நன்றாக தெரியும். குழந்தை பிடிப்பவர்களை போல, அதிமுக எம்எல்ஏக்களை பிடித்தனர்.
குதிரை பேரத்தில் எங்கள் சட்டமன்ற உறுப்பினர்களை பல கோடி ரூபாய் விலை கொடுத்து வாங்கினார்கள். வெற்றி பெற்ற ஒரு வாரத்தில் அவர்களை ராஜினாமா செய்ய வைத்தனர். பிறகு அவர்களை தவெகவில் இணைய வைத்து இடைத்தேர்தலை வரவைத்தனர். இந்த இடைத்தேர்தல் தமிழக மக்கள் மீது திணிக்கப்பட்டது என்பது நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும். நடைபெற்று முடிந்த இடைத்தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, தமிழகத்தின் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார் ஆகியோர் வரம்பு மீறி பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதிமுக அழிந்துவிட்டது, அதிமுக தவெகவுடன் இணைந்துவிட்டது என்று பேட்டி கொடுக்கிறார்கள். பதவி வரும்போது பணிவு வரவேண்டுமென புரட்சி தலைவர் எம்ஜிஆர் கூறினார். இந்த அமைச்சர்கள் அகங்காரத்தோடு, மமதையோடு அதிமுகவை பற்றி தவறான தகவல்களை சொல்லி கொண்டிருக்கிறார்கள். அதிமுக என்பது நேற்று பெய்த மழையில் இன்றைக்கு முளைத்த காளான் அல்ல. அதிமுகவுக்கு என்று ஒரு வரலாறு உள்ளது. இந்த தலைவர்களுக்கு என்று ஒரு சரித்திரம் இருக்கிறது. புரட்சி தலைவர், புரட்சி தலைவி அம்மா உருவாக்கியது அதிமுக. தொண்டர்கள் தான் இந்த இயக்கத்தின் சொத்து. இந்த தொண்டர்கள் இருக்கின்ற வரை இந்த இயக்கத்தை யாராலும் அசைத்து பார்க்க முடியாது" என்றார். அவரின் பேட்டி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு தவெகவினரும் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.வரம்பு மீறி பேசும் அமைச்சர்கள்
தொண்டர்கள் இருக்கும் வரை