அமைச்சராக முடியாத வயிற்றெரிச்சலில்”.. SP வேலுமணி, நத்தம் விஸ்வநாதனுக்கு அக்ரி கிருஷ்ணமூர்த்தி பதில்

  • சென்னை: தவெக அரசில் அமைச்சராக முடியவில்லையே என்ற வயிற்றெரிச்சலில், எடப்பாடி பழனிசாமி மீது எஸ்பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் போன்றோர் பொய் குற்றச்சாட்டுகளை சுமத்துவதாக அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

    Advertisement

    அதிமுக முனாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் நேற்று கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அதில், "2026 சட்டமன்றத் தேர்தலில் தவெக உடனான கூட்டணி அமைக்கும் வாய்ப்புகளை எடப்பாடி பழனிசாமி பயன்படுத்திக் கொள்ளவில்லை. எடப்பாடி பழனிசாமியின் தவறான முடிவுகளால் அதிமுக தொடர் தோல்விகளைச் சந்தித்து வருகிறது" எனக் குற்றம் சாட்டி இருந்தனர்.

    Advertisement

    மேலும், 2021, 2026 சட்டமன்ற பொது தேர்தல், 2024 நாடாளுமன்ற தேர்தல் ஆகிய 3 தேர்தல்களிலும் கழகம் வெற்றி பெற பிரகாசமான வாய்ப்புகள் இருந்தும், எடப்பாடி பழனிசாமி எடுத்த தவறான தன்னிச்சையான முடிவுகளால், தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது அதிமுக எனவும் குற்றம்சாட்டி இருந்தனர்.

    இந்நிலையில் திருவண்ணாமலையில் அதிமுக சட்டமன்ற கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி செய்தியாளர்களிடம் பேசுகையில், "சட்டசபை தேர்தல் தோல்விக்கு எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்க வேண்டும் என்று எஸ்பி வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் சொல்கின்றனர். 1996-ல் அதிமுக தோல்வி அடைந்த போது ஜெயலலிதா, தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்றார். ஏனெனில் அப்போது வேட்பாளர்கள் அனைவரையும் தேர்வு செய்தது ஜெயலலிதா.

    Advertisement

    ஆனால் தற்போதைய தேர்தலில், கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களை உள்ளடக்கிய 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கு எஸ்.பி. வேலுமணிதான், வேட்பாளர்களைப் பரிந்துரை செய்தார். நத்தம் விஸ்வநாதன், சி.வி. சண்முகம், கே.பி. அன்பழகன் உள்ளிட்ட அனைத்து மாவட்டக் கழகச் செயலாளர்களும் தங்களது மாவட்டங்களுக்குரிய வேட்பாளர்களைப் பரிந்துரை செய்தனர்.

    மாவட்டச் செயலாளர்களாகவும், முன்னாள் அமைச்சர்களாகவும் இருந்தவர்கள் அந்தந்த மாவட்டங்களில் குறுநில மன்னர்களைப் போலச் செயல்பட்டனர். அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் பரிந்துரைத்த நபர்களைத்தான் வேட்பாளர்களாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். உதாரணமாக, திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்தில் கலசப்பாக்கம் தொகுதியில் மாவட்டச் செயலாளர் என்ற முறையில் என்னை வேட்பாளராக அறிவித்தார்.

    Advertisement

    திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்தின் செங்கம் தொகுதியில் டி.எஸ். வேலை நான் பரிந்துரைத்ததன் அடிப்படையில் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதுதான் தமிழகம் முழுவதும் நடந்தது. அந்தந்த மாவட்டங்களில் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யத் தேவையான வியூகங்களை வகுத்துச் செயல்பட வேண்டியது மாவட்டச் செயலாளர்களின் பொறுப்பு.

    எடப்பாடி பழனிசாமியைப் பொறுத்தவரையில் 234 தொகுதிகளில் 196 தொகுதிகளுக்கு நேரடியாகவே போய் பிரசாரம் செய்தார். அவருடைய கடுமையான உழைப்பால் தேசிய ஜனநாயக கூட்டணி சுமார் 1 கோடியே 35 லட்சம் வாக்குகளைப் பெற்றோம். அதிமுக தனித்து 47 இடங்களில் வென்றது.

    Advertisement

    ஆகையால் தேர்தல் தோல்விக்கு அந்தந்த மாவட்டச் செயலாளர்கள்தான் அதாவது எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், சி.வி. சண்முகம், கே.பி. அன்பழகன் போன்றோர்தான் பொறுப்பேற்க வேண்டும். அவர்கள் பரிந்துரைத்த வேட்பாளர்கள் தோல்வியடைந்ததற்கு அவர்கள் மீதுதான் தார்மீகப் பொறுப்பு உண்டு. தங்கள் குறைகளை மறைக்க எடப்பாடியார் மீது குற்றச்சாட்டுகளைச் சுமத்துகிறார்கள்.

    தேர்தல் தோல்விக்கு எஸ்பி வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும். இவர்கள் அனைவருமே தவெகவுடன் தொடர்பு வைத்துள்ளவர்கள். அதிமுகவில் குழப்பம் ஏற்படுத்த அறிக்கை வெளியிட்டு வருகின்றனர். இவர்கள் பேசுவது அனைத்தும் அப்பட்டமான பொய்.

    Advertisement

    அதிமுகவில் பதவி மட்டும் வேண்டும்.. ஆனால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை மட்டும் இவர்கள் சந்திக்க மாட்டார்களா? அதிமுக என்ற லேபிளை ஒட்டிக் கொண்டு இத்தகைய விமர்சனங்களை பேசிக் கொண்டிருந்தால் எஸ்பி வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோரை அதிமுகவில் இருந்து நீக்க எடப்பாடி பழனிசாமியிடம் வலியுறுத்துவோம்." எனத் தெரிவித்துள்ளார்.

    English Summary

    AIADMK Whip Agri Krishnamurthy has stated that SP Velumani and Natham Viswanathan are leveling false allegations against Edappadi Palaniswami out of resentment over failing to secure ministerial berths in the TVK government.