வேளாண் பட்ஜெட்டில் விதைப்புக்கால நிதிஉதவி ரூ.15,000 அறிவிக்கப்படுமா? விவசாயிகள் பெரும் எதிர்பார்ப்பு

  • சென்னை: தவெக அரசின் வேளாண் பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படுகிறது. விவசாயப் பயிர்க்டன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பு வெளியாகுமா?, விதைப்புக் கால நிதி உதவி ரூ.15,000 அறிவிக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.

    Advertisement

    தமிழ்நாடு அரசின் பொது பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, நாளை வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்கிறார். வேளாண் பட்ஜெட் வரைவுடன் அமைச்சர் வினோத் திருப்பதியில் சாமி தரிசனம் மேற்கொண்டது சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது.

    Advertisement

    வேளாண் பட்ஜெட் எதிர்பார்ப்புகள்

    இந்நிலையில், வேளாண் பட்ஜெட்டில் தங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா என ஆவலுடன் காத்திருக்கின்றனர் விவசாயிகள். குறிப்பாக, தவெக தேர்தலுக்கு முன்பாக அளித்த வாக்குறுதிகள் பற்றிய அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இடம்பெறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    5 ஏக்கருக்குக் குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க்கடன்கள் முற்றிலுமாகத் தள்ளுபடி செய்யப்படும் எனவும், 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க்கடன்களில் 50 சதவிகிதம் தள்ளுபடி செய்யப்படும் என்றும் தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தது தவெக.

    Advertisement

    பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி?

    ஆனால், ஆட்சிக்கு வந்தபிறகு , 75,000 ரூபாய் வரை பயிர்க்கடன் பெற்ற குறு, சிறு மற்றும் இதர பெரு விவசாயிகளுக்கு 100% கடன் தொகை தள்ளுபடி என அறிவிக்கப்பட்டது. மேலும், 75,000 ரூபாய்க்கும் அதிகமாகக் கடன் பெற்ற விவசாயிகளுக்கு அதிகபட்சமாக 35,000 ரூபாய் வரை தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது விவசாயிகளுக்கு ஏமாற்றமாக அமைந்தது. இந்நிலையில் விவசாயிகள் மனதைக் குளிர்விக்கும் வகையில் பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி என்ற அறிவிப்பு இந்த பட்ஜெட்டில் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    ரூ.15,000 நிதி உதவி

    மேலும், சொந்தமாக விவசாய நிலம் வைத்துள்ள ஒவ்வொரு விவசாயிகளின் குடும்பத்திற்கும் விதைப்புக் கால நிதியுதவியாக ஆண்டுக்கு 15 ஆயிரம் ரூபாய் இரண்டு தவணைகளில் (ஜூலை - ஆகஸ்ட் பருவம், ஜனவரி - பிப்ரவரி பருவம்) வழங்கப்படும் எனவும் தேர்தல் அறிக்கையில் தவெக அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பும் நாளைய வேளாண் பட்ஜெட்டில் இடம்பெறுமா என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள் உழவர்கள்.

    Advertisement

    விவசாயிகளின் பிள்ளைகளுக்கு

    மேலும், 2 ஏக்கர் வரை நிலமுள்ள விவசாயிகள் மற்றும் நிலமற்றவர்கள் குடும்பத்தில் யாரும் மாநில, மத்திய அரசு ஊழியராக இல்லாமல் இருக்கும்பட்சத்தில் அவர்களுடைய குழந்தைகளின் மருத்துவம் மற்றும் பொறியியல் தொழில்நுட்ப கல்வி முதல் அனைத்து வகை படிப்புகளுக்குமான முழு செலவையும் அரசே ஏற்கும் என்றும் தவெக தேர்தல் வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    விவசாயப் பெருங்குடி மக்களின் பிள்ளைகளின் கல்விக் கனவுகளை நனவாக்கும் இந்த திட்டம் நாளைய பட்ஜெட்டில் இடம்பெறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தவெக அரசின் முதல் வேளாண் பட்ஜெட் பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.

    English Summary

    TVK government's agriculture budget is set to be presented tomorrow. Farmers are eagerly anticipating announcements regarding a complete waiver of agricultural loans and financial assistance of ₹15,000 for the sowing season.