47ல் இருந்து 42ஆக வீழ்ச்சி! எடப்பாடிக்கு அடுத்தடுத்த அதிர்ச்சி கொடுக்கும் அதிமுக எம்எல்ஏ-க்கள்!

  • சென்னை: தவெக அரசுக்கு ஆதரவாகச் செயல்பட்டதாகக் கூறி, தனது மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டதோடு ஆதரவாளர்களும் நீக்கப்பட்டதால் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அதிருப்தியில் இருந்தார். இதனால் தனது எம்எல்ஏ பதவியை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரை நேரில் சந்தித்து அவர் தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார்.

    Advertisement

    2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அடுத்தடுத்து அரங்கேறி வரும் இந்த எம்.எல்.ஏ-க்களின் ராஜினாமா படலத்தால், தமிழக சட்டசபையில் 3வது பெரிய கட்சியான அதிமுகவின் பலம் மீண்டும் சரிவை சந்தித்துள்ளது. சட்டசபைத் தேர்தல் முடிவுகளின் போது, அதிமுக கூட்டணி ஒட்டுமொத்தமாக சரிவை சந்தித்த போதிலும், அதிமுக கட்சி மட்டும் தனித்து 47 இடங்களில் வெற்றி பெற்றது.

    Advertisement

    இருப்பினும், எடப்பாடி பழனிசாமியின் தலைமைக்கு எதிராக வெடித்த உள்கட்சி மோதல்கள் மற்றும் தவெகவை நோக்கிய நிர்வாகிகளின் இடமாற்றம் காரணமாக அடுத்தடுத்து எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவிகளைத் ராஜினாமா செய்து வருகின்றனர். அண்மையில் அதிமுகவின் மதுராந்தகம் எம்எல்ஏ மரகதம் குமரவேல், அம்பாசமுத்திரம் எம்எல்ஏ இசக்கி சுப்பையா, பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார், தாராபுரம் எம்எல்ஏ சத்யாபாமா தங்களின் பதவியை ராஜினாமா செய்தனர்.

    இதனால் அதிமுக எம்எல்ஏ-க்களின் பலம் 47ல் இருந்து சரிந்து 43 ஆக மாறியது. தற்போது விராலிமலை தொகுதி எம்.எல்.ஏ-வான சி.விஜயபாஸ்கரும் தனது பதவியைத் துறந்துள்ளதால், தமிழ்நாடு சட்டமன்றத்தில் அதிமுகவின் தற்போதைய அதிகாரப்பூர்வ பலம் 42 ஆகக் குறைந்துள்ளது. விஜயபாஸ்கரின் ராஜினாமா கடிதத்தை உடனடியாக ஏற்றுக்கொள்ளப்படுவதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.

    Advertisement

    2026 சட்டசபைத் தேர்தல் முடிந்து சில வாரங்களே ஆகும் நிலையில், இதுவரை 5 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். தொடர் தோல்விகள் ஒருபுறமிருக்க, சட்டசபையில் கட்சியின் பலம் 47ல் இருந்து 42 ஆக குறைந்திருப்பது எடப்பாடி பழனிசாமிக்கு அரசியல் ரீதியாகப் பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

    விஜயபாஸ்கரின் இந்த ராஜினமாவால் தமிழ்நாட்டில் காலியாக இருக்கும் சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் ஆயத்த பணிகளை தொடங்கி இருக்கும் சூழலில், விராலிமலை தொகுதிக்கும் சேர்த்து இடைத்தேர்தல் பணிகளை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    English Summary

    AIADMK: AIADMK Strength Shrinks to 42 in TN Assembly After C. Vijayabaskar Resigns as Viralimalai MLA