சென்னை: திமுக, தமிழக வெற்றிக் கழகத்தை தொடர்ந்து, மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது அதிமுக. மதுராந்தகம் சட்டமன்ற தனி தொகுதியில் கணிதா சம்பத்தும், தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் பானுமதியும் போட்டிடுவார்கள் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
மீண்டும் பரபரப்பாக இருக்கிறது தமிழக அரசியல் களம். 2026 தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு முதல்வராக பொறுப்பேற்று இருக்கிறார் விஜய். இதற்கிடையில் ஆட்சி அமைக்க தனி பெரும்பான்மை இல்லாததால் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்தார்.
இடையில் சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அதிமுக தரப்பில் இருவருக்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் விஜய் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக மதுராந்தகம் மரகதம் குமரவேல், தாராபுரம் சத்யாபாமா ஆகிய எம்எல்ஏக்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து விட்டு தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்தனர். அதற்குப் பிறகு இசக்கி சுப்பையா, எம்ஆர் விஜயபாஸ்கர், சி விஜயபாஸ்கர், பெருந்துறை ஜெயக்குமார் ஆகியோரும் தமிழக வெற்றி கழகத்தில் தங்கள் எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு இணைந்தனர். அவர்கள் மீது கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கம் தேர்தல் வழக்குகளும் நீதிமன்றத்தில் உள்ளது. இந்த நிலையில் தாராபுரம், மதுராந்தகம் தொகுதிக்கு தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் திடீரென அறிவித்தது. அக்டோபர் 6ஆம் தேதி வாக்கு பதிவும், 9ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வேட்பு மனு தாக்கல் தொடங்கி இருக்கும் நிலையில் 2 தொகுதிகளிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இந்த நிலையில் முதல் கட்சியாக திமுக மதுராந்தகம் தொகுதியில் பரந்தாமனும், தாராபுரம் தொகுதியில் சுகன்யாவும் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டது. தமிழக வெற்றிக்கழக தரப்பில் அதிமுகவிலிருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த மரகதம் குமரவேல், சத்தியபாமா மீண்டும் போட்டியிடுப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே அதிமுகவில் வேட்பாளர்களை அறிவிப்பதில் சிக்கல் நீடிப்பதாகவும் முக்கிய தலைகள் போட்டியிடாமல் விலகிக் கொண்டதாகவும் சொல்லப்பட்ட நிலையில் 2 வேட்பாளர்களை அறிவித்து இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. அதன்படி மதுராந்தகம் தொகுதியில் கணிதா சம்பத்தும், தாராபுரம் தொகுதியில் பானுமதியும் போட்டியிடுவார்கள் என அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இதில் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடும் கணிதா சம்பத் கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினராகவும், கட்சியின் மகளிர் அணி இணை செயலாளராகவும் உள்ளார். தாராபுரத்தில் போட்டியிடும் பானுமதி திருச்சி புறநகர் கிழக்கு மாவட்ட மகளிர் அணி இணை செயலாளராகவும், மாவட்ட ஊராட்சி குழு 12வது வார்டு முன்னாள் உறுப்பினராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மூன்று பிரதான கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை களம் இறக்கி இருக்கும் நிலையில் விரைவில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்த தேர்தலிலும் நான்கு மணி போட்டி உருவாகியுள்ளது. மேலும் உள்ளூரில் செல்வாக்கும் மிகுந்த நபர்களும் சுயேச்சைகளும் போட்டியிடும் நிலையில் வெற்றிகனி யாருக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.