வைகைச்செல்வனுக்கு பதிலாக இனி இவர்.. அதிமுக இலக்கிய அணி தலைவராக கோ.விசயராகவன் நியமனம்!

  • சென்னை: அதிமுக இலக்கிய அணி செயலாளராக இருந்த வைகைச்செல்வன் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த நிலையில், அதிமுக இலக்கிய அணி தலைவராக தமிழக அரசின் முன்னாள் தமிழ் வளர்ச்சி துறை இயக்குநர் கோ.விசயராகவன் நியமிக்கப்பட்டுள்ளார்.

    Advertisement

    அதிமுக இலக்கிய அணி செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன், கடந்த மாதம் அதிமுகவில் இருந்து விலகி, தவெகவில் இணைந்துள்ளார். தவெகவில் முதன்மை செய்தி தொடர்பாளராக வைகைச்செல்வன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அதிமுகவில் இலக்கிய அணி மாநில செயலாளர் பதவி காலியாக இருந்து வருகிறது.

    Advertisement

    இந்நிலையில், தமிழக அரசின் முன்னாள் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் கோ.விசயராகவனை, இலக்கிய அணி மாநில தலைவராக நியமித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். எம்ஜிஆர் காலத்துக்கு பிறகு, இப்போது தான் இலக்கிய அணிக்கு தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

    சென்னையில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து விசயராகவன் வாழ்த்துப் பெற்றார். இது தொடர்பாக கோ.விசயராகவன் கூறும்போது, "தமிழகத்தில் 30 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சியில் இருந்த மாபெரும் இயக்கமான அதிமுகவின் இலக்கிய அணி மாநில தலைவராக நியமிக்கப்பட்டதை பெருமையாக கருதுகிறேன். இக்கட்சியின் வளர்ச்சியில் எங்கள் அணியின் பங்களிப்பு முக்கியமானதாக இருக்கும் வகையில் கடுமையாக உழைப்போம்" எனத் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியம், குப்பம் கண்டிகை பகுதியை சேர்ந்தவர் கோ. விசயராகவன். தமிழக அரசின் உலகத் தமிழாராய்ச்சி கழக இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ளார்.

    இவர் உலகத் தமிழாராய்ச்சி கழக இயக்குநராக இருந்தபோது, அரிய நூல்களை நவீன தொழில்நுட்பத்தில் மின்னாக்கம் செய்தது, தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநராக இருந்தபோது, அரசு அலுவலகங்களில் ஆங்கிலச் சொற்களுக்கு இணையான சரியான தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்த அரசால் உருவாக்கப்பட்ட ஆட்சிச் சொல்லகராதி மூலமாக பல்வேறு ஆங்கில சொற்களுக்கு இணையான தமிழ் சொற்களை உருவாக்கும் பணியில் முக்கிய பங்காற்றியுள்ளார்.

    English Summary

    Following the departure of Vaigaichelvan—who served as the Secretary of the AIADMK Literary Wing—from the party to join TVK, K. Vijayaraghavan, the former Director of Tamil Development Department, has been appointed as the President of the AIADMK Literary Wing.