'செவ்வந்தி இல்லம்' டூ ராயப்பேட்டை.. 15 வருட அரசு இல்லத்தில் இருந்து விடைபெற்ற எடப்பாடி பழனிசாமி

  • சென்னை: 2011 முதல் 2026 வரை சுமார் 15 ஆண்டுகளாக சென்னை பசுமைவழிச் சாலையிலுள்ள அரசு பங்களாவான 'செவ்வந்தி இல்லம்' வீட்டில் தான் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வசித்து வந்தார். 2011-ல் ஜெயலலிதா தலைமையிலான அரசில் அமைச்சராக இருந்த போதும் சரி, 2017ல் முதல்வரான போதும் சரி, செவ்வந்தி இல்லத்தில் தான் எடப்பாடி பழனிசாமி வசித்து வந்தார். 2021 தேர்தலுக்குப் பிறகும் எதிர்க்கட்சித் தலைவராகவும் செவ்வந்தி இல்லத்தில் வசித்து வந்தார். ஆனால் 2026 தேர்தலில் எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்ததால், ராயப்பேட்டையில், அதிமுக தலைமை அலுவலகம் அருகிலேயே உள்ள தனது புதிய இல்லத்தில் கடந்த மாதம் பால் காய்ச்சிய எடப்பாடி பழனிசாமி, இன்று குடியேறி இருக்கிறார்.

    Advertisement

    2011ம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்த போது அதிமுகவில் ஐந்து பெரும் தலைவர்களில் ஒருவராக இருந்தார். அப்போது அமைச்சராக பொறுப்பேற்ற எடப்பாடி கே. பழனிசாமிக்கு சென்னை பசுமைவழிச் சாலையில் நீதிபதிகள், அரசின் பெரும் தலைவர்களுக்காக கட்டப்பட்டுள்ள வீடுகளில் ஒன்று ஒதுக்கப்பட்டது அப்படி ஒதுக்கப்பட்ட வீடு தான் 'செவ்வந்தி இல்லம்'. 2016ம் ஆண்டு ஜெயலலிதா தலைமையிலான அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்தது. அப்போதும் எடப்பாடி பழனிசாமிக்கு செவ்வந்தி இல்லமே ஒதுக்கப்பட்டது. பின்னர் 2017ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டின் முதல்வராக பொறுப்பேற்றார். 2021 வரை தமிழ்நாடு முதலமைச்சராக நான்கு ஆண்டுகள் பொறுப்பில் இருந்தார். அப்போதுமே தனது முகாம் அலுவலகமாக செவ்வந்தி இல்லத்தை தான் எடப்பாடி பழனிசாமி பயன்படுத்தி வந்தார்.

    Advertisement

    2021 சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் திமுக பெரும்​பான்மை பெற்று ஆட்​சி​யமைத்​தது. முக ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றார். அப்போது அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி எதிர்க்​கட்​சித் தலை​வ​ராக இருந்​தார். எதிர்க்​கட்​சித் தலை​வர் என்ற முறை​யில் அப்​போதும் செவ்​வந்தி இல்​லத்​திலேயே குடியிருந்து வந்​தார். ஏனெனில் எதிர்க்கட்சி தலைவர் பதவி என்பது கேபினட் அமைச்சருக்கு இணையான அரசு பதவியாகும். அந்த பதவி காரணமாக அவர் செவ்வந்தி இல்லத்தில் தொடர்ந்து வசித்தார். அவருக்கு குடியிருப்பை ஸ்டாலினும் மாற்ற விரும்பவில்லை.. அதே குடியிருப்பில் வசிக்க அனுமதித்தார்.

    ஆனால், 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு அதிமுக எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தையும் இழந்தார். எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்தால் செவ்வந்தி இல்லத்தில் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏனெனில் எம்எல்ஏக்களுக்கு அங்கு குடியிருப்புகள் ஒதுக்கப்படாது. திமுகவின் உதயநிதி ஸ்டாலின் தான் எதிர்க்கட்சி தலைவராக இருக்கிறார்.

    Advertisement

    தவெக தலைவர் விஜய் முதல்வராக உள்ளார். விஜய் தலைமையிலான அரசு, எதிர்க்கட்சி அல்லது ஆளும் அமைச்சர்களுக்கு செவ்வந்தி இல்லத்தை ஒதுக்க உள்ளது. எனவே அரசு ஒதுக்கீட்டில் வழங்கப்பட்ட செவ்வந்தி இல்லத்தை காலி செய்ய வேண்டிய சூழல் எடப்பாடி பழனிசாமிக்கு ஏற்பட்டது. இதையடுத்து, ராயப்பேட்டையில் அதிமுக தலைமையகத்திற்கு அருகே அமைந்துள்ள புதிய இல்லத்தில் கடந்த மாதம் பால் காய்ச்சிய எடப்பாடி பழனிசாமி, இன்று அங்கு முழுமையாக குடியேறி உள்ளார். இனி கட்சி நடவடிக்​கைகளை அங்​கிருந்து எடப்பாடி பழனிசாமி கவனிக்க உள்ளார்.

    English Summary

    AIADMK Chief Eadappadi palanisamy vacated ‘Sevvandhi Illam’ on Greenways Road after 15 years (2011–2026) as Minister, CM & LoP. Losing opposition status in 2026, he moved into his new home near the party HQ in Royapettah.