சென்னை: மதுராந்தகத்தில் தமிழக வெற்றி கழகம் சார்பில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்யப்படுவதாக இந்திய தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார் அளித்திருக்கிறது.
மதுராந்தகத்தில் முதுகரை உள்ளிட்ட 8 இடங்களில் தமிழக வெற்றி கழகம் சார்பில் பண விநியோகம் செய்யப்படுவதாக அதிமுக எம்பி இன்பதுரை தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருக்கிறார்.
நாளை மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த இரண்டு தொகுதிகளிலும் அதிமுக சார்பில் கடந்த 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களான மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமா ஆகியோர் வெற்றி பெற்று இருந்தனர். இருப்பினும் இவர்கள் வெற்றி பெற்ற அடுத்த சில நாட்களிலேயே.. தங்கள் எம்எல்ஏ பதிவியை ராஜினாமா செய்து விட்டு தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து விட்டனர். இதனால் இரண்டு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. நேற்று பிரச்சாரம் முடிந்த நிலையில் நாளை காலை வாக்கு பதிவு தொடங்குகிறது. இந்நிலையில் மதுராந்தகம் தொகுதியில் வாக்காளர்களுக்கு தமிழக வெற்றி கழகம் சார்பில் பண விநியோகம் செய்யப்படுவதாக அதிமுக புகார் அளித்திருக்கிறது. மதுராந்தகம் தொகுதியின் முதுகரை உள்ளிட்ட 8 இங்களில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலுக்கு ஆதரவாக வாக்காளர்களுக்கு பணம் சட்டவிரோதமாக விநியோகிக்கப்படுவதாக அதிமுக குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் உடனடியாக முழுமையான மற்றும் தீவிரமான கள விசாரணை நடத்த வேண்டும் என்றும் இதற்கு பொறுப்பானவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுத்து, தேர்தல் விதிகளை துல்லியமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் இன்பதுரை தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். விசாரணையில் பண விநியோக குற்றச்சாட்டு உண்மையாக இருக்கும் பட்சத்தில் அது தேர்தல் மாதிரி நடத்தை விதிகள் மற்றும் தேர்தல் சட்டங்களை மிக கடுமையாக மீறும் செயலாகும். எனவே இது தொடர்பானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.