செத்த பாம்பை அடித்த எடப்பாடி.. 3 எம்எல்ஏ எஸ்கேப்! கெஜட்டிலேயே வந்தாச்சு! இப்போ பேசி என்ன பிரயோஜனம்?

  • சென்னை: தமிழக அரசியலில் அடுத்தடுத்த திருப்பங்களை ஏற்படுத்தி வரும் அ.தி.மு.க. உட்கட்சி மோதல் தற்போது புதிய கட்டத்தை எட்டியுள்ளது. வேலுமணி - சி.வி.சண்முகம் தரப்பை சேர்ந்த 3 எம்.எல்.ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அந்த தொகுதிகள் காலியானதாக சட்டப்பேரவைச் செயலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் ராஜினாமாவை ஏற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து சபாநாயகரை நேரில் சந்தித்து ஆட்சேபனை தெரிவித்துள்ளது எடப்பாடி தரப்பு.

    Advertisement

    மதுராந்தகம் (தனி) தொகுதி எம்.எல்.ஏ மரகதம் குமரவேல், பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏ ஜெயக்குமார், தாராபுரம் (தனி) தொகுதி எம்.எல்.ஏ சத்யபாமா ஆகியோர் நேற்று தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரை நேரில் சந்தித்து தங்களது ராஜினாமா கடிதங்களை வழங்கினர்.

    Advertisement

    இந்த ராஜினாமாக்கள் ஏற்கப்பட்டதாக சபாநாயகர் தரப்பில் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த 3 தொகுதிகளும் காலியாக உள்ளதாக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே முதல்வர் விஜய் திருச்சி கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்று பின்னர் ராஜினாமா செய்திருந்ததால் அந்த தொகுதி காலியாக இருந்தது.

    எம்.எல்.ஏக்கள் ராஜினாமா

    தற்போது இந்த 3 எம்.எல்.ஏக்களின் ராஜினாமாவும் ஏற்கப்பட்டுள்ளதால், தமிழகத்தில் காலியாக உள்ள சட்டப்பேரவை தொகுதிகளின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க. வெறும் 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று கடும் பின்னடைவை சந்தித்தது. அதன் பின்னர், கட்சிக்குள் எடப்பாடி பழனிசாமி தரப்பு மற்றும் எஸ்.பி.வேலுமணி - சி.வி.சண்முகம் தரப்பு என இரு அணிகள் உருவாகின.

    Advertisement

    தமிழக வெற்றிக் கழகம்

    இதன் உச்சமாக, தமிழக வெற்றிக் கழக அரசு நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொண்ட போது, எடப்பாடி பழனிசாமி அணியை சேர்ந்த 22 எம்.எல்.ஏக்கள் அரசுக்கு எதிராக வாக்களித்தனர். ஆனால், வேலுமணி - சி.வி.சண்முகம் தரப்பை சேர்ந்த 25 எம்.எல்.ஏக்கள் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதுவே அ.தி.மு.க.வில் பெரும் பிளவாக மாறியது. அதனைத் தொடர்ந்து, கட்சிக் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக கூறி, அந்த 25 எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க எடப்பாடி பழனிசாமி தரப்பு தீவிரம் காட்டி வந்தது.

    கட்சி தாவல் தடைச் சட்டம்

    கொறடா உத்தரவை மீறி செயல்பட்டதால், கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ் அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என சபாநாயகரிடம் மனுக்களும் அளிக்கப்பட்டிருந்தன. இந்த சூழலில்தான், வேலுமணி தரப்பை சேர்ந்த 3 எம்.எல்.ஏக்கள் திடீரென ராஜினாமா செய்து, பின்னர் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். இதுவே அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    Advertisement

    எடப்பாடி பழனிசாமி

    ஆனால், இந்த ராஜினாமாக்களை ஏற்கக் கூடாது என்று தற்போது எடப்பாடி பழனிசாமி தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சபாநாயகரை நேரில் சந்தித்த அ.தி.மு.க. நிர்வாகிகள், "கட்சித் தாவல் புகார் நிலுவையில் இருக்கும் நிலையில், ராஜினாமாவை ஏற்க முடியாது. முதலில் தகுதி நீக்க நடவடிக்கையை முடிக்க வேண்டும்" என்று வாதிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இடைத்தேர்தல்

    எனினும், சபாநாயகர் ஏற்கனவே ராஜினாமாவை ஏற்றுக் கொண்டதுடன், தொகுதிகளும் காலியாக அறிவிக்கப்பட்டுள்ளதால், எடப்பாடி தரப்பு தாமதமாக எதிர்ப்பு மனு கொடுத்ததாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இதற்கிடையே, இந்த 3 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு அதிகரித்துள்ளது. அந்த தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மீண்டும் இந்த 3 பேருக்கும் வாய்ப்பு வழங்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    Advertisement

    தவெக

    அப்படி நடந்தால், தற்போது கூட்டணி ஆதரவுடன் இயங்கி வரும் தவெக அரசு, மேலும் சில இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையை நோக்கி நகரும் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. மறுபுறம், வேலுமணி தரப்பில் இருந்த சில எம்.எல்.ஏக்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணிக்கு திரும்பத் தொடங்கியுள்ளதால், அ.தி.மு.க.வில் அதிகாரப் போட்டி இன்னும் தீவிரமாகியுள்ளது. ஒரு பக்கம் தவெக தனது பலத்தை அதிகரிக்க முயற்சி செய்து கொண்டிருக்க, மற்றொரு பக்கம் அதிமுகவை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்ற கேள்வியும் தொடர்ந்து நீடித்து வருகிறது.

    English Summary

    EPS camp objects to resignation acceptance after three AIADMK MLAs joined TVK and seats were declared vacant.