அதிமுகவில் மீண்டும் வெடிக்கும் பூகம்பம்.. வேலுமணி வீட்டில் நடந்த 'மேஜர்’ ஆலோசனை! எடப்பாடிக்கு ஷாக்!

  • சென்னை: இடைத்தேர்தலில் அதிமுக 3ஆம் இடம் பிடித்த நிலையில், கட்சியின் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள எஸ்.பி. வேலுமணி இல்லத்தில் இன்றும் ஆலோசனை நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    Advertisement

    நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அதிமுக 47 தொகுதிகளில் மட்டுமே வென்று, எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட சிலருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அது மோதலாக வெடித்தது.

    Advertisement

    அதன் தொடர்ச்சியாக, எஸ்.பி.வேலுமணி தலைமையில் 25 எம்.எல்.ஏக்கள், நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். பின்னர் அவர்களில் 6 பேர் எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர்.

    தனக்கு எதிராக செயல்பட்டவர்களின் கட்சி பதவிகளை எடப்பாடி பழனிசாமி அதிரடியாக பறித்தார். பின்னர் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமியிடம் இணைந்த நிலையில் அவர்களுக்கு மாவட்ட செயலாளர் பதவியை தவிர்த்து, வேறு பதவிகளை வழங்கினார்.

    எனினும், எஸ்பி வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், சிவி சண்முகம் உள்ளிட்டோர் எடப்பாடி பழனிசாமியுடன் இணக்கம் இன்றி மோதல் போக்கை கடைபிடித்து வருகின்றனர். இதற்கிடையே அதிமுக எம்எல்ஏ-க்கள் மட்டுமின்றி அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் முதல் கீழ்மட்ட நிர்வாகிகள் வரை பலரும் தவெக-விற்கு தாவி வருகின்றனர்.

    Advertisement

    இந்நிலையில், மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளின் இடைத்தேர்தலில், அதிமுக மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டது. பொதுத்தேர்தலில் வெற்றி பெற்ற இந்த இரு தொகுதிகளிலும், 5 மாதங்களில், மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டு, படுதோல்வியடைந்தது, கட்சி நிர்வாகிகளிடம், கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

    ஏற்கனவே, எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி அடைந்து அவருக்கு எதிராக கட்சியில் சில சீனியர்கள் காய் நகர்த்தி வருகின்றனர். இந்த இடைத்தேர்தல் தோல்வியை அவர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டுள்ளனர். எடப்பாடி பழனிசாமி மீதான அதிருப்தி எம்எல்ஏ-க்கள், எடப்பாடி ஆதரவு எம்எல்ஏ-க்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    Advertisement

    நடந்து முடிந்த இடைத்தேர்தலில் 2 தொகுதிகளிலும் அதிமுக தோல்வி அடைந்த நிலையில் சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள எஸ்.பி. வேலுமணி இல்லத்தில் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் தலைமையில் தொடர்ந்து 3வது நாளாக இன்றும் ஆலோசனை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய அணி, மீண்டும் ஆலோசனை நடத்துவதால் கட்சியில் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

    அதிமுகவில் இருந்து தவெக-விற்கு தாவிய சத்தியபாமா, மரகதம் குமரவேல் ஆகிய இருவரும் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற நிலையில், அதிமுக எம்எல்ஏக்கள் சிலர் தாங்களும் தவெக-விற்கு தாவலாமா என்று தங்களது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

    Advertisement

    எஸ்பி வேலுமணி வீட்டில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆலோசனை நடத்தியதுடன் எடப்பாடி பழனிசாமி செயற்குழுவை கூட்டி அவருக்கு சாதகமாக முடிவு எடுக்கும் முன்பு தாங்கள் முந்திக் கொள்ள வேண்டும் என்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், விரைவில் அதிமுகவில் மீண்டும் பெரிய பூகம்பம் வெடிக்கும் என்று கருதப்படுகிறது.

    English Summary

    With the AIADMK finishing third in the by-election, the party's dissident MLAs and senior functionaries are continuing to hold consultations. Reports indicate that a meeting took place today at the residence of SP Velumani. It is anticipated that a major political upheaval will soon erupt within the AIADMK.