போச்சு..சீட்டுக் கட்டாய் சரியும் எடப்பாடி கோட்டை! மீட்டிங்கில் மிஸ்ஸான மாஜிகள்! வாய் திறக்காத டி.ஜெ!

  • சென்னை: எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், செல்லூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி மற்றும் ராஜன் செல்லப்பா ஆகியோரும் பங்கேற்கவில்லை. அதிமுகவில் 82 மாவட்ட செயலாளர்கள் உள்ள நிலையில் இதுவரை 17 மாவட்ட செயலாளர்கள் மட்டுமே எடப்பாடி பழனிசாமி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மட்டும் இதுவரை பங்கேற்காமல் யாருக்கும் ஆதரவு தெரிவிக்காமல் மௌனம் காத்து வருவது பரபரப்பை மேலும் அதிகரித்துள்ளது.

    Advertisement

    தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக எதிர்பார்த்த வெற்றியை பெற முடியாமல் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்ட நிலையில், கட்சிக்குள் ஏற்பட்டுள்ள அதிகாரப் போட்டி நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவது தொண்டர்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

    Advertisement

    குறிப்பாக எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணிக்கும், சி.வி. சண்முகம் - எஸ்.பி. வேலுமணி தலைமையிலான அணிக்கும் இடையிலான மோதல் தற்போது வெளிப்படையான அரசியல் சண்டையாக மாறியுள்ளது.

    அதிமுக பிளவு

    இந்த சூழலில், எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்பு எடப்பாடி பழனிசாமி, கட்சி அலுவலக வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    சி.வி. சண்முகம் - எஸ்.பி. வேலுமணி

    பின்னர் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கட்சியின் தற்போதைய நிலை, சட்டப்பேரவையில் எடுக்க வேண்டிய அரசியல் முடிவுகள், சி.வி. சண்முகம் - எஸ்.பி. வேலுமணி அணியின் நகர்வுகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இந்த கூட்டத்தில் பல முக்கிய நிர்வாகிகள் பங்கேற்காதது அதிமுக வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி மற்றும் ராஜன் செல்லப்பா ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

    Advertisement

    எடப்பாடி பழனிசாமி

    மேலும், அதிமுகவில் மொத்தம் 82 மாவட்டச் செயலாளர்கள் உள்ள நிலையில், இதுவரை வெறும் 17 மாவட்டச் செயலாளர்கள் மட்டுமே எடப்பாடி பழனிசாமி நடத்தும் ஆலோசனை கூட்டங்களில் பங்கேற்றுள்ளதாக கூறப்படுகிறது. பங்கேற்ற பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் கடந்த 3 நாட்களுக்குள் எடப்பாடி பழனிசாமியால் நியமிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், கட்சிக்குள் எடப்பாடி பழனிசாமிக்கு முழுமையான ஆதரவு இருக்கிறதா என்ற கேள்வி மீண்டும் எழுந்துள்ளது.

    தவெக அரசு

    ஒருபுறம் சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி தரப்பினர் புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவு தெரிவித்திருப்பது, அதிமுக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. சட்டப்பேரவையில் தவெக அரசுக்கு ஆதரவாக சில அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்த சம்பவத்துக்குப் பிறகு, எடப்பாடி பழனிசாமி கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

    Advertisement

    ஜெயக்குமார்

    இதுதொடர்பாக சபாநாயகரிடமும் அவர் மனு அளித்துள்ளார். கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தொடர்ந்து மௌனம் காத்து வருவதும் பேசுபொருளாக மாறியுள்ளது. இதுவரை எடப்பாடி பழனிசாமி அணிக்கும், சி.வி. சண்முகம் அணிக்கும் அவர் வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்கவில்லை.

    தொண்டர்கள் அதிருப்தி

    எந்தக் கூட்டத்திலும் பங்கேற்காமல் அமைதியாக இருப்பது, அவரது அடுத்தகட்ட அரசியல் முடிவு குறித்து பல்வேறு யூகங்களை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் தற்போது உருவாகியுள்ள இந்த குழப்பநிலை, கட்சியின் அடிப்படை தொண்டர்களிடமும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பல மாவட்டங்களில் நிர்வாகிகள் யாரை ஆதரிக்க வேண்டும் என்ற குழப்பத்தில் இருப்பதாகவும், சிலர் காத்திருக்கலாம் என திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    Advertisement

    உட்கட்சி மோதல்

    மேலும், தவெக அரசு அமைந்த பிறகு அதிமுகவில் இருந்து சில முக்கிய தலைவர்கள் அங்கு செல்லக்கூடும் என்ற பேச்சும் தொடர்ந்து நிலவி வருகிறது. இதனால், எடப்பாடி பழனிசாமி தனது பலத்தை உறுதிப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒருகாலத்தில் தமிழக அரசியலில் பிரதான எதிர்க்கட்சியாக இருந்த அதிமுக, தற்போது உட்கட்சி மோதலால் சிக்கித் தவித்து வருவது கட்சித் தொண்டர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

    English Summary

    Several senior AIADMK leaders skipped Edappadi Palaniswami’s meeting, intensifying internal conflict and political uncertainty.