சென்னை: அதிமுக தலைமைக்கு எடப்பாடி பழனிசாமி வந்ததில் இருந்து ஏகப்பட்ட நெருக்கடிகளை கட்சி எதிர்கொண்டு வருகிறது. தற்போது எஸ்.பி.வேலுமணி, எடப்பாடி பழனிசாமி என இரண்டு தரப்பாக கட்சி உடைந்திருக்கிறது. இந்நிலையில் மொத்தமுள்ள 82 மாவட்ட செயலாளர்களில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் வேலுமணி தரப்புக்கு ஆதரவளித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உயிரிழந்த பின்னர் அதிமுகவை கைப்பற்ற பல்வேறு தரப்பினர் முயன்றனர். இருப்பினும் அனைவரையும் ஓரம் கட்டி கட்சியை டேக் ஓவர் செய்தார் எடப்பாடி பழனிசாமி.
கடந்த 2022ம் ஆண்டு நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வதை எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் வெளியேற்றியிருந்தனர். அவரது ஆதரவாளர்களும் அடுத்தடுத்து வெளியேற்றப்பட்டனர். இப்படியாக சலசலப்புகளை சந்தித்த அதிமுக, கடந்த சட்டமன்ற தேர்தலில் கடும் தோல்வியடைந்தது. குறிப்பாக எதிர்க்கட்சி அந்தஸ்தை கட்சி இழந்தது. இதனால், கட்சியின் நிர்வாகிகள் அதிருப்தியடைந்தனர். மறுபுறம் இந்த அதிருப்தி சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அணியாக எதிரொலித்தது. விஜய்க்கு ஆதரவு இல்லை என்று எடப்பாடி பழனிசாமி ஓபனாக சொன்ன பின்னரும், சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், மொத்தமிருந்த 47 எம்எல்ஏக்களில் 25 பேர் விஜய்க்கு ஆதரவு தெரிவித்தனர். கட்சி இரண்டாக உடைந்திருப்பதை இந்த சம்பவம் உறுதி செய்திருந்தது. இதனை தொடர்ந்து சிறப்பு பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்று எடப்பாடிக்கு எதிராக, எஸ்.பி.வேலுமணி தரப்பு கோரிக்கை வைத்திருக்கிறது. எடப்பாடி இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. எனவே எஸ்.பி.வேலுமணி வேறு ரூட்டை கையில் எடுத்திருக்கிறார். அதாவது, அதிமுகவை பொறுத்தவரை கட்சியின் பொதுச்செயலாளர் மட்டுமே அதிகாரப்பூர்வமாகப் பொதுக்குழுவையோ அல்லது சிறப்பு பொதுக்குழுவையோ கூட்டுவதற்கான முழு அதிகாரம் படைத்தவர் ஆவார். ஆனால், பொதுச்செயலாளர் தானாக முன்வந்து கூட்டாத பட்சத்தில், பொதுக்குழு உறுப்பினர்களே ஒன்றிணைந்து சிறப்பு பொதுக்குழுவைக் கூட்டக் கோர சட்டத்தில் இடம் உள்ளது. ஒட்டுமொத்தப் பொதுக்குழு உறுப்பினர்களில் குறைந்தது 3-ல் 1 பங்கு உறுப்பினர்கள் எழுத்துப்பூர்வமாக கையெழுத்திட்டு, ஒரு குறிப்பிட்ட அவசரக் காரணத்திற்காக சிறப்பு பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும் என்று பொதுச்செயலாளரிடம் கோரிக்கை மனு அளிக்க வேண்டும். அப்படிக் கோரிக்கை மனு அளிக்கப்பட்ட தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் பொதுச்செயலாளர் அந்தச் சிறப்பு பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும். இந்த சட்ட வழியை கையில் எடுத்துள்ள எஸ்.பி.வேலுமணி தரப்பு அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் கடிதம் அனுப்பி வருகிறது. இந்த கடித்தத்திற்கு 50க்கும் அதிகமான மாவட்ட செயலாளர்களின் ஆதரவு தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே எடப்பாடி பழனிசாமி கடும் அதிருப்தியில் இருக்கிறார். ஒருவேளை 3-ல் 1 பங்கு உறுப்பினர்கள் கோரியும், 30 நாட்களுக்குள் பொதுச்செயலாளர் கூட்டத்தைக் கூட்டத் தவறினால் அல்லது மறுத்தால், கோரிக்கை விடுத்த அதே உறுப்பினர்களே ஒன்றிணைந்து, ஒரு குறிப்பிட்ட தேதியில் சிறப்பு பொதுக்குழுவைக் கூட்டத் தங்களுக்குள் ஏற்பாடு செய்யலாம். அவ்வாறு கூட்டப்படும் கூட்டத்திற்குப் பொதுக்குழு உறுப்பினர்களில் ஒருவரைத் தற்காலிகத் தலைவராக நியமித்து கூட்டத்தை நடத்த சட்ட விதிகளில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. கடந்த கால உள்கட்சி அரசியல் மோதல்களின் போது இந்த விதிதான் நீதிமன்றம் வரை சென்று விவாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.எடப்பாடியின் வியூகம்
உடைந்த அதிமுக
சிறப்பு பொதுக்குழு
கட்சியின் விதி
பொதுக்குழுவை கூட்டவில்லை எனில் என்ன ஆகும்?