சென்னை: மதுராந்தகம் தாராபுரம் சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நிறைவடைந்திருக்கும் நிலையில், அதிமுகவிற்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக அமைந்திருக்கிறது. கடந்த தேர்தல்களில் 2 தொகுதிகளையும் வென்ற அதிமுக தற்போது மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. எல்லா பிரச்சனைக்கும் காரணம் எடப்பாடி தான் என கை காட்டுகின்றனர் அதிமுகவினர். கட்சியினரை ஒருங்கிணைக்காதது, கூட்டணி அமைப்பதில் தோல்வி, பறிபோன சிறுபான்மை வாக்குகள், பாஜகவை கூட்டணியில் சேர்த்தது என பல்வேறு சிக்கல்களால் அதிமுக அதலபாதாளத்துக்கு செல்வதாக சமூக வலைதளங்களில் குமுறி வருகின்றனர் ரத்தத்தின் ரத்தங்கள்.
2026 தமிழக சட்டசபை தேர்தலை போலவே தமிழகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருந்தது மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல். அதிமுக எம்எல்ஏக்களாக இருந்த மரகதம் குமரவேல், சத்யபாமா தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர்.
இதனை அடுத்து இரு தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. முதல்வர் விஜய், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், திமுக தலைவர் ஸ்டாலின், அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி, நாம் தமிழர் கட்சியின் சீமான், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் என இரண்டு தொகுதிகளும் கடந்த ஒரு மாதமாகவே தேர்தல் பிரச்சாரத்தால் களைகட்டி காணப்பட்டது. பரபரப்பாக 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் அக்டோபர் 9ஆம் தேதியான நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. ஆரம்பத்தில் இருந்தே தமிழக வெற்றிக்கழகம் 2 தொகுதிகளிலும் முன்னிலையில் இருந்தது. இடையில் தாராபுரத்தில் மட்டும் தவெகவுக்கு சற்று சறுக்கல் ஏற்பட்டது. பின்னர் அதனை சமாளித்து இரண்டு தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளது தவெக. திமுக இரண்டு தொகுதிகளிலும் இரண்டாம் இடம் பெற்று ஆறுதல் வெற்றியை பெற்றது. அதே நேரத்தில் டெபாசிட்டை தக்க வைத்துக் கொண்டாலும் இரண்டு தொகுதிகளையும் பறிகொடுத்தது அதிமுக. கடந்த சட்டசபை தேர்தலில் தமிழக முழுவதும் பல தொகுதிகளில் மண்ணைக் கவினாலும் தாராபுரம் மதுராந்தகம் தொகுதி வெற்றி எடப்பாடிக்கு சற்று நிம்மதியை அளித்தது. அதே நேரத்தில் திமுகவுடன் கூட்டணி என்ற பேச்சு காரணமாக சத்தியபாமாவும், மரகதம் குமரவேலும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தாலும், குதிரை பேர குற்றச்சாட்டை திமுகவும் அதிமுகவும் முன் வைத்தன. ஆனால் அதற்கெல்லாம் பதிலடி கொடுப்பது போல இந்த வெற்றி அமைந்திருப்பதாக தமிழக வெற்றிக் கழகத்தினர் கூறி வருகின்றனர். அதே நேரத்தில் அதிமுகவின் தோல்விக்கு காரணம் என சமூக வலைதளங்களில் பல குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகின்றனர் ரத்தத்தின் ரத்தங்கள். எல்லா குற்றச்சாட்டுகளுமே எடப்பாடி பழனிச்சாமியை நோக்கி தான் இருக்கிறது. 2016 சட்டசபை தேர்தலுக்குப் பிறகு ஜெயலலிதா மரணமடைந்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவி ஏற்ற ஆட்சியை காப்பாற்றிக்கொள்ள சசிகலாவையும் டிடிவி தினகரன் கட்சியில் இருந்து வெளியேற்றிய அவர், 2026 தேர்தலுக்குப் பிறகு ஓ பன்னீர் செல்வத்தை வெளியேற்றினார். அதற்கு பிறகு செங்கோட்டையன் பல உள்ளிட்ட பல முன்னணி தலைவர்கள் கட்சியிலிருந்து அடுத்தடுத்து வெளியேறினர் அல்லது வெளியேற்றப்பட்டனர். மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி, சட்டசபை தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி என எடப்பாடி எடுத்த சில முடிவுகள் கட்சியின் பலமாக இருந்த சிறுபான்மை வாக்குகள் பறிபோக வைத்தது. ஓ பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் வெளியேற்றப்பட்டதால் முக்குலத்தோர் வாக்குகள் பறிபோயின. செங்கோட்டையன் வெளியேற்றப்பட்டதும் அந்த கட்சி கொங்கு மண்டலத்தில் தனது செல்வாக்கை இழக்க காரணமாக அமைந்தது. இடைத்தேர்தலில் பாமக உடன் பேச்சு நடத்தாமல் எடப்பாடி தன்னிச்சையாக நடந்து கொண்டதும், மதுராந்தகத்தில் அதிமுகவின் தோல்விக்கு காரணங்களில் ஒன்றாக அமைந்தது. இது மட்டுமல்லாமல் ஜிகே வாசன் கூட்டணியை விட்டு வெளியேறியது, பாஜக கூட்டணியால் சிறுபான்மை வாக்குகள் பரிபோனது என அடுத்தடுத்து பல நெருக்கடிகள் எடப்பாடி பழனிச்சாமியார் அதிமுகவுக்கு உருவானது. ஆனால் தோல்விக்கு பொறுப்பேற்க வேண்டிய எடப்பாடி பழனிச்சாமி அதனை ஏற்றுக்கொள்ளாமல் இன்னும் துரோகிகள் துரோகிகள் இன கட்சியை விட்டு வெளியேறியவர்களையே கைகாட்டுவது என்ன நியாயம் என கேள்வியை எழுப்ப தொடங்கி இருக்கின்றனர் முன்னாள் அதிமுகவினர். அதுமட்டுமல்லாமல் தற்போது அதிருப்தியில் இருக்கும் வேலுமணி, தங்கமணி, சிவி சண்முகம் உள்ளிட்டோரை அரவணைத்து செய்திருந்தால் வாக்கு வங்கியையாவது காப்பாற்றி இருக்கலாம். ஆனால் அதனை செய்யாமல் கேபி முனுசாமியை களத்தில் இறக்கியது தோல்விக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. இனியாவது தனது முடிவுகளை மறுப்பரிசீலனை செய்யாமல் எடப்பாடி பழனிச்சாமி இருந்தால் உள்ளாட்சித் தேர்தலில் ஒரு சீட்டு கூட கிடைக்காது என்றும் குமுறி வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட சசிகலா உள்ளிட்டோரது ஆதரவாளர்கள் தற்போது எடப்பாடி பழனிச்சாமி பதவி விலக வேண்டும் என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர்.