மற்றும் பலரா? மரண பயத்தை காட்டியிருக்கோம்.. இடைத்தேர்தல் தோல்வி குறித்து எடப்பாடி

  • சென்னை: மற்றும் பலர் என விமர்சித்தவர்களுக்கு மரண பயத்தை காட்டியுள்ளது அதிமுக என்று எடப்பாடி பழனிசாமி விஜய்யை விமர்சித்துள்ளார். மேலும் அதிமுக ஒரு ஆலமரம், ஆயிரம் காலத்து பயிர், சோதனைகளை முறியடிக்கும் என கூறியுள்ள எடப்பாடி, தவெகவின் அதிகார பலத்திற்கும், பணநாயகத்திற்கும் கிடைத்தது இந்த தற்காலிக வெற்றி என்று கூறியுள்ளார்.

    Advertisement

    தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் தவெக வெற்றி பெற்றுள்ளது. தாராபுரத்தில் சத்தியபாமா 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலும், மதுராந்தகத்தில் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலும் தவெக வெற்றி பெற்றது. இரு தொகுதியிலும் அதிமுக 3 ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டது. இந்நிலையில் தேர்தல் முடிவு குறித்து எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    Advertisement

    மெஜாரிட்டி அரசாக மாற்ற..

    அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களுக்கு வாக்களித்த வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி! நடந்து முடிந்த சட்டமன்ற இடைத் தேர்தலில், அதிமுக வேட்பாளர்களுக்கு வாக்களித்த, வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் முதற்கண் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

    கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில் ஆட்சி அமைப்பதற்கு, எந்தக் கட்சிக்கும் தேவையான பெரும்பான்மை இடங்கள் கிடைக்கப்பெறவில்லை. இந்நிலையில், ஒருசில கட்சிகளின் ஆதரவோடு த.வெ.க. மைனாரிட்டி ஆட்சியை அமைத்ததுடன், ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் த.வெ.க. அரசை, மெஜாரிட்டி அரசாக மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களிடம் குதிரை பேரத்தை நடத்தியதன் விளைவுதான், தற்போதைய இடைத் தேர்தல் என்பதை மக்கள் அனைவரும் நன்கு அறிவார்கள்.

    Advertisement

    பண பலம், அதிகார பலம்

    2026, பொதுத் தேர்தலின்போது நம்முடன் இருந்த கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த ஒருசிலர் இந்த இடைத் தேர்தலில் நம்முடன் இல்லை. ஆனால், ஆளும் கட்சியோ பல கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தல் களம் கண்டது. இந்த இடைத் தேர்தலில் ஆளும் த.வெ.க. பண பலம், அதிகார பலம், ஆள் பலத்துடன் அனைத்து அமைச்சர்களையும் களம் இறக்கியது. அதோடு, கழகத்திற்கு துரோகம் இழைத்தவர்களும், முதுகில் குத்தியவர்களும் நம்மை எதிர்த்து நின்றார்கள்.

    இந்த இடைத் தேர்தலில் தோல்வி உறுதி என்பதை உணர்ந்த த.வெ.க., வாக்காளர்களுக்கு பல்வேறு ஆசை வார்த்தைகளையும், நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளையும் அளித்து, ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி, அதிகார துஷ்பிரயோகம் செய்ததுடன், அதிமுக தாராபுரம் தொகுதி வேட்பாளர் மீதும், தொண்டர்கள் மீதும் பொய் வழக்கு புணைந்து, மாவட்டக் கழகச் செயலாளரையே சட்டவிரோதமாக அடைத்து வைத்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் பலரை அச்சுறுத்தி த.வெ.க-வில் இணைத்து, குறுக்கு வழியில் வெற்றி காண பல்வேறு யுக்திகளைக் கையாண்டது.

    Advertisement

    மரண பயத்தைக் காட்டியிருக்கிறது

    'அரை மணி நேரம் பேசினாலே கொத்துப் புரோட்டோ' என்று வீர வசனம் பேசிய கூட்டணி அரசின் முதலமைச்சர் விஜய், இந்தத் தேர்தலுக்கு தெருத் தெருவாக அலைந்து விசில் ஊதவேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார். தேர்தல் விதிமுறைகளைக் காற்றில் பறக்கவிட்டு, அரசு இயந்திரத்தை தவறாகப் பயன்படுத்தி இரண்டு தொகுதிகளிலும் பிரச்சாரம் மேற்கொண்டதுடன், காவல் துறையினரால் தேடப்படும் குற்றவாளியுடன் ரேக்ளா மாட்டு வண்டியில் வலம் வந்து, ஜனநாயகப் படுகொலை செய்து ஆளும் கட்சி வெற்றி பெற்றிருக்கிறது. இது, அதிகார பலத்திற்கும், பணநாயகத்திற்கும் கிடைத்த வெற்றி.

    பொதுவாக, இடைத் தேர்தல் ஆளும் கட்சிக்கு சாதகமாக அமையும். நான் முதலமைச்சராக இருந்தபோதுகூட விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் வெற்றி பெற்றோம். அதுபோல், இந்தத் தேர்தலில் ஆளும் கட்சி வெற்றி பெற்றுள்ளது. தீர்ந்துபோன சக்தி என்றும், மற்றும் பலர் என்றும் நம்மை கேலி செய்தவருக்கு, இந்த இடைத் தேர்தல் மரண பயத்தைக் காட்டியிருக்கிறது.

    Advertisement

    அதிமுகவை அழிக்க முடியாது

    அதிமுகவின் கோட்டையில் நுழைந்துவிட்டதாக த.வெ.க. நினைக்கலாம். ஆனால், இது இடைக்கால வெற்றி மட்டுமே. இந்த தற்காலிக வெற்றியைக் கொண்டு அதிமுகவை அழித்துவிடலாம் என்று யாரும் கனவு காண வேண்டாம். ஏனென்றால், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரும், புரட்சித் தலைவி அம்மாவும் கட்டிக் காப்பாற்றிய 'அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்' ஒரு இரும்புக் கோட்டை ஆகும்.

    'தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; இறுதியில் தர்மமே வெல்லும்' என்பது ஆண்டவரின் தீர்ப்பு. ரீல்ஸ் ஆட்சியில் ரீல்ஸ்களில் மயங்கி மக்கள் ஆளும் கட்சிக்கு வாக்களித்துள்ளார்கள். இந்தத் தேர்தல் வெற்றியால் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைய வாய்ப்பு இல்லை என்பது தெரிந்தும், இரண்டு தொகுதிகளிலும் நமக்கு நல்ல வாக்குகள் கிடைத்திருக்கிறது.

    Advertisement

    பிள்ளை பிடிக்கும் கும்பல் போல

    புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் இந்த இயக்கத்தை உருவாக்கியபோது சந்தித்த சவால்கள் ஏராளம். புரட்சித் தலைவி அம்மா அவர்கள் எதிர்கொண்ட சோதனைகளும் எண்ணிலடங்காதவை. நான் முதலமைச்சரான காலத்தில் சந்தித்த பிரச்சனைகள் எக்கச்சக்கம். இப்போதும், பிள்ளை பிடிக்கும் கும்பல் போல, நம்முடைய கழக சட்டமன்ற உறுப்பினர்களை விலைபேசி பிடித்தே ஆட்சியில் இருக்கிறது தவெக எனும் தற்காலிக வெற்றிக் கழகம்.

    இந்த சோதனையையும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் முறியடிக்கும். அதிமுக வேட்பாளர்கள் வெற்றிபெற வேண்டும் என்று ஆதரவளித்த தோழமை கட்சிகளான, பாரதிய ஜனதா கட்சி மாநிலத் தலைவர் மற்றும் நிர்வாகிகளுக்கும்; அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் மற்றும் நிர்வாகிகளுக்கும்; புதிய நீதிக் கட்சி தலைவர் மற்றும் நிர்வாகிகளுக்கும்; இந்திய ஜனநாயகக் கட்சித் தலைவர் மற்றும் நிர்வாகிகளுக்கும்; பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவர் மற்றும் நிர்வாகிகளுக்கும்; தமிழ் மாநில முஸ்லீம் லீக் தலைவர் மற்றும் நிர்வாகிகளுக்கும்; கழகத்தின் மீது பேரன்பு கொண்டுள்ள பல்வேறு கட்சிகள், இயக்கங்கள், சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும், எனது இதயபூர்வமான நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

    குறிப்பாக, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது மாறாத விசுவாசம்கொண்டு, கழக வேட்பாளர்கள் வெற்றிபெற வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு அல்லும் பகலும் அயராது தேர்தல் பணிகளை ஆற்றிய தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக சார்பு அமைப்புகளின் மாநில நிர்வாகிகள், மாவட்ட அளவிலான கழகம் மற்றும் சார்பு அமைப்புகளின் நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூராட்சி, பகுதிக் கழகம் மற்றும் சார்பு அமைப்புகளின் செயலாளர்கள், நிர்வாகிகள்; கிளை, வார்டு, வட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

    அதிமுக ஒரு ஆலமரம்

    இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள், "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஓர் ஆலமரம்; ஆயிரம் காலத்துப் பயிர்; இன்னும் எத்தனையோ தலைமுறைகளுக்கு தமிழர்களுக்காகப் பாடுபடப்போகும் நல்லியக்கம்" என சூளுரைத்தவாறு, தமிழ் நாட்டு மக்களின் நல்வாழ்வுக்காகவும், தமிழ் நாட்டின் வளர்ச்சிக்காகவும், 'அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்' மக்கள் பணிகளில் மேலும் உத்வேகத்துடன் ஈடுபடும் என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

    English Summary

    Edappadi Palaniswami has criticized Vijay, stating that the AIADMK has struck the fear of death into those who dismissed the party as merely "and the rest." Describing the AIADMK as a banyan tree—an enduring institution built to last for ages—and one capable of overcoming any adversity, Edappadi remarked that the recent outcome was merely a temporary victory for TVK, driven by its official clout and the power of money.