தவெக பக்கம் ஓடும் அதிமுக நிர்வாகிகள்.. 6 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க எடப்பாடி பழனிசாமி முடிவு?

  • சென்னை: அதிமுகவில் இருந்து சாரை சாரையாக கட்சியினர் வெளியேறி வருவதால், 6 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை புறக்கணிக்கும் முடிவை எடப்பாடி பழனிசாமி எடுக்கலாம் என்று தகவல் கிடைத்துள்ளது. அதிமுகவின் இந்த முடிவு, எதிர்க்கட்சிகள் இணைந்து பொது வேட்பாளரை நிறுத்த வழிவகுக்கும் என்று பார்க்கப்படுகிறது.

    Advertisement

    சட்டசபைத் தேர்தல் முடிவடைந்து ஒன்றரை மாதங்களில் அதிமுகவைச் சேர்ந்த 5 எம்எல்ஏ-க்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். அதிமுகவின் மதுராந்தகம் எம்எல்ஏ மரகதம் குமரவேல், அம்பாசமுத்திரம் எம்எல்ஏ இசக்கி சுப்பையா, பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார், தாராபுரம் எம்எல்ஏ சத்யாபாமா மற்றும் விராலிமலை எம்எல்ஏ விஜயபாஸ்கர் ஆகியோர் தங்களின் பதவியை ராஜினாமா செய்திருக்கின்றனர்.

    Advertisement

    இந்த 5 தொகுதிகள் உட்பட முதல்வர் விஜய் போட்டியிட்டு வென்ற பின் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு தொகுதியிலும் இடைத்தேர்தல் நடக்க உள்ளது. ஏற்கனவே விராலிமலை தவிர்த்து 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஆயத்த பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. வரும் நாட்களில் விராலிமலை தொகுதியிலும் தேர்தல் பணிகள் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தவெக ஆட்சிக்கு வந்த ஓராண்டுக்குள் இந்த இடைத்தேர்தல் நடப்பதால், அந்தக் கட்சி கட்டாயம் வெல்ல வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறது. திருச்சி கிழக்கை தவிர்த்து மற்ற தொகுதிகளில் அதிமுகவினருக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என்று தெரிகிறது. இதனால் அந்தந்த மாவட்டங்கள் மற்றும் தொகுதிகளில் இருந்து அதிமுகவினரை சாரை சாரையாக தவெகவில் இணைக்கும் காட்சிகள் அரங்கேறி வருகின்றன.

    Advertisement

    அதிமுகவின் அடிமட்டத்தையே இந்த இணைப்புகள் ஆட்டம் காண செய்திருக்கிறது. இதனை எடப்பாடி பழனிசாமி உன்னிப்பாகவே கவனித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி உள்ளிட்டோர் இன்னும் அதிருப்தியில் தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு மீண்டும் பொறுப்பு வழங்கும் எண்ணத்தில் கூட எடப்பாடி பழனிசாமி இல்லை.

    இப்படி கட்சிக்குள் ஏராளமான பிரச்சனைகளை வைத்து கொண்டு மீண்டும் இடைத்தேர்தலில் ஒரு தோல்வியை சந்திக்க எடப்பாடி பழனிசாமி தயங்குவதாக அவருக்கு நெருக்கமானவர்கள் பேசத் தொடங்கி இருக்கின்றனர். இதனால் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டால், அதனை அதிமுக புறக்கணிக்க வாய்ப்புகள் உருவாகி இருப்பது தெரிய வந்துள்ளது.

    Advertisement

    இதனால் களத்தில் திமுகவுக்கு சாதகம் இருக்கும் என்றாலும், அதிமுகவினர் பெரும்பாலும் தவெகவையே விரும்புவதாக சொல்லப்படுகிறது. அதிமுக இடைத்தேர்தலை புறக்கணித்தால், எதிர்க்கட்சிகள் இணைந்து பொது வேட்பாளரை நிறுத்த வாய்ப்புகள் கூடியுள்ளது. அதிமுக வென்ற தொகுதிகளில் 1ல் திமுக வென்றாலும் கூட, அது தவெகவுக்கு எதிராக அரசியல் செய்ய சாதகமாக கூடும் என்று அறிவாலயம் கணக்கு போடுகிறது. இதனால் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட பின் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    English Summary

    AIADMK: Edappadi Palaniswami to Consider Boycotting 6 Assembly Bypolls which may Pave Way for Common Opposition Candidate