விருப்பமில்லாத விஜய்.. காய் நகர்த்தும் அமைச்சர்கள்! இன்று தவெகவில் ஐக்கியமாகிறார் வைகைச்செல்வன்!

  • சென்னை: மரணத்தை விட கொடியது புறக்கணிப்பு என்று கூறி, அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகினார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன். இப்படி இருக்கையில் முன்னாள் எம்எல்ஏக்கள் சிலருடன், வைகைச்செல்வன் இன்று தவெகவில் இணைகிறார்.

    Advertisement

    அதிமுகவிலிருந்து தொடர்ந்து முக்கிய தலைவர்கள் பலர் கட்சியிலிருந்து விலகி தவெகவில் இணைந்து வருகின்றனர். குறிப்பாக முன்னாள் அமைச்சர்கள் எம்.எஸ்.எம்.ஆனந்தன், எஸ்.வளர்மதி, எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் விராலிமலை சி.விஜயபாஸ்கர் ஆகியோர் இணைந்திருந்தனர். இதனை தொடர்ந்து இன்று வைகைச்செல்வன் இணைவதும் கவனம் பெற்றிருக்கிறது.

    Advertisement

    விருப்பமில்லாத விஜய்

    முன்னாள் அதிமுக அமைச்சர்கள் இணைவதை.. குறிப்பாக சி.விஜயபாஸ்கர் இணைவதை முதல்வர் விஜய் பெரிய அளவில் விரும்பவில்லை. ஏனெனில் சி.விஜயபாஸ்கர் மீது ஏகப்பட்ட முறைகேடு குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. இப்படி இருக்கையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட வைகைச்செல்வனை தவெகவில் இணைப்பதிலும் விஜய்க்கு உடன்பாடு இல்லை என்று தகவல் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.

    இருந்தாலும் 118 எம்எல்ஏக்கள் என்கிற டார்கெட் இருப்பதால், அதிமுக தலைவர்களின் சப்போர்ட் தவெகவுக்கு தேவைப்படுகிறது என்று விஜய்க்கு அமைச்சர்கள் சமாதானம் சொல்லி, அதிமுக முன்னாள் அமைச்சர்களின் இணைப்புக்கு ஓகே வாங்கியிருக்கிறார்கள்.

    Advertisement

    காரணம் இதுதான்

    அதாவது தற்போது தவெகவுக்கு 106 எம்எல்ஏக்கள்தான் இருக்கிறார்கள். பெரும்பான்மை பெறுவதற்கு 118 எம்எல்ஏக்கள் தேவை. எனவே மீதமுள்ள 12 எம்எல்ஏக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும். அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்வதன் மூலம் இந்த எண்ணிக்கையை கொண்டுவர முடியும் என தவெக திட்டமிட்டிருக்கிறது. தன்னை கட்சியில் இணைத்துக்கொண்டால் 5 எம்எல்ஏக்கள் வரை ராஜினாமா செய்ய வைக்கிறேன் என்று சொல்லிதான் சி.விஜயபாஸ்கர் இணைந்திருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

    வருத்தத்தில் வைகை செல்வன்

    அந்த வகையில் தற்போது வைகைச்செல்வன் இணைவதற்கு காரணம், கடந்த சட்டமன்ற தேர்தலில் அவருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பதுதான். இது குறித்து அவர் அதிருப்தியும் தெரிவித்திருந்தார். வேறு தொகுதியில் நிற்க சீட் கேட்டதாகவும், ஆனால் சீட் வழங்கப்படாததால் வேதனை அடைந்திருந்ததாகவும் கூறியிருந்தார்.

    Advertisement

    தான் மட்டுமே நன்றாக இருக்க வேண்டும்

    முன்னதாக நேற்று வெளியிட்ட ராஜினாமா கடிதத்தில், "வணக்கம். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகிக் கொள்கிறேன்.

    ஒரு தலைவர் தானே அழிந்தால் கூட தனது கொள்கைகளும், இயக்கமும் வெற்றி பெற வேண்டும் என நினைப்பார்கள். ஆனால், இயக்கமும், கழகத் தொண்டர்களும் அழிந்தால் கூட தான் மட்டுமே நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர் நல்ல தலைவராக இருப்பதில்லை.

    மரணத்தை விடக் கொடியது புறக்கணிப்பு

    திமுகவோடு இணைந்து ஆட்சியமைக்க திட்டமிட்டதன் மூலம், திமுக எதிர்ப்பு நிலையில் இருந்து அதிமுக சமரச போக்கில் போனதால் தனது அடையாளத்தை இழந்து விட்டது. சரியான நேரத்தில் தவறான முடிவெடுப்பதன் காரணமாகவும், தனது வெற்றிப் பாதையில் இருந்து அதிமுக விலகிச் சென்று விட்டது.

    Advertisement

    மேலும், தேர்தல் களத்தில் நான் தனித்து விடப்பட்ட நிலையிலும் கூட, கழகத்திற்காக தேர்தல் பரப்புரையாற்றினேன். ஆனால், மரணத்தை விடக் கொடியது புறக்கணிப்பு என்பதை நான் உணர்ந்து கொண்டேன்" என்று கூறியிருந்தார். எனவேதான் இன்று தவெகவில் வைகைச்செல்வன் இணைகிறார்.

    English Summary

    AIADMK: Former Minister Vaigaichelvan resigned from all his posts within the AIADMK, stating that being ignored is worse than death. Against this backdrop, he is joining the TVK today alongside a few former MLAs.