சல்லி சல்லியாய் நொறுங்கும் எடப்பாடி கனவு.. அதிமுக இனி அவ்வளவு தான்? தவெகவுக்கு தாவ தயாரான தலைகள்!

  • சென்னை: தமிழக அரசியலில் அடுத்தடுத்த திருப்பங்கள் அரங்கேறி வரும் நிலையில், அதிமுகவைச் சேர்ந்த பல முக்கிய முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏக்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக முன்னாள் அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், எம்.எஸ்.எம். ஆனந்தன், கடம்பூர் ராஜு, எம்.சி. சம்பத் ஆகியோர் இன்று தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், சிவி சண்முகம், சி விஜயபாஸ்கர், எம்.ஆர் விஜயபாஸ்கர் ஆகியோர் அடுத்தடுத்து விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக்கழகத்தில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    Advertisement

    2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி எதிர்பார்த்த வெற்றியை பெற முடியவில்லை. கூட்டணியில் இருந்த போதிலும் அதிமுக வெறும் 47 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டது. இதையடுத்து கட்சிக்குள் அதிருப்தி குரல்கள் அதிகரிக்கத் தொடங்கின.

    Advertisement

    தொடர்ச்சியாக தேர்தல் தோல்விகளை சந்தித்து வந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி தலைமையின் செயல்பாடு குறித்து பல்வேறு மூத்த நிர்வாகிகள் கேள்வி எழுப்பியதாக கூறப்பட்டது. இதன் பின்னணியில், எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் ஆகியோரை மையமாகக் கொண்டு தனி அணியொன்று உருவானது.

    அதிமுக

    இந்த அணிக்கு பல மாவட்ட நிர்வாகிகளும், முன்னாள் அமைச்சர்களும் ஆதரவு தெரிவித்ததாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது. தவெக ஆட்சியமைப்பதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் ஆதரவு எம்.எல்.ஏக்கள் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தது அதிமுகவில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி கோபமடைந்து, ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொண்டார். சிலரின் பொறுப்புகள் பறிக்கப்பட்டன. இது உட்கட்சி மோதலை மேலும் தீவிரப்படுத்தியது.

    Advertisement

    தமிழக வெற்றிக்கழகம்

    அதேநேரத்தில், தவெகவில் இணையும் அதிமுக நிர்வாகிகளுக்கு அமைச்சரவை வாய்ப்பு கிடைக்கலாம் என்ற பேச்சுகளும் பரவலாக பேசப்பட்டன. ஆனால் அதுபோன்று எதுவும் உடனடியாக நடைபெறவில்லை. இருந்தபோதிலும் அதிமுகவில் இருந்து விலகும் போக்கு தொடர்ந்தது. மதுராந்தகம் தொகுதியைச் சேர்ந்த மரகதம் குமரவேல், பெருந்துறை தொகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார், தாராபுரம் தொகுதியைச் சேர்ந்த சத்தியபாமா உள்ளிட்ட பலர் தவெகவில் இணைந்தது அதிமுகவுக்குள் மேலும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

    எடப்பாடி பழனிசாமி

    இவர்களின் விலகலால் சட்டப்பேரவையில் அதிமுகவின் பலம் 47-இல் இருந்து 44 ஆக குறைந்தது. இதற்கிடையில், தவெக தொடர்ந்து அதிமுக நிர்வாகிகளை தன் பக்கம் இழுத்து வருவதாகவும், இதற்குப் பின்னால் அரசியல் குதிரைப் பேரம் நடப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். ஆனால் அந்த குற்றச்சாட்டுகளை தவெக தரப்பு மறுத்து வந்தது.
    இந்நிலையில், கட்சிக்குள் நிலவி வந்த மோதல்களை முடிவுக்கு கொண்டு வர எடப்பாடி பழனிசாமி சமரச முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    Advertisement

    சி.வி சண்முகம்

    எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் அணியினருடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. அதன் பின்னர் சிலர் மன்னிப்பு கடிதம் வழங்கி மீண்டும் அதிமுகவில் இணைந்ததாக தகவல்கள் வெளியானது. ஆனால் அதிமுகவில் பரபரப்பு இன்னும் அடங்கவில்லை. சமீபத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியபோது, "அதிமுகவில் உள்ள 90 சதவீத நிர்வாகிகளும், தொண்டர்களும் எங்கள் பக்கம் வருவார்கள்" என்று கூறியிருந்தார். இந்த கருத்து அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியது. அதிமுக தரப்பில் இருந்து கடுமையான எதிர்ப்பும் பதிவு செய்யப்பட்டது.

    உடுமலை ராதாகிருஷ்ணன்

    இதனிடையே, அதிமுக தலைமைக்கழக பேச்சாளராக செயல்பட்டு வந்த சசிரேகா, தமிழக வெற்றிக் கழகத்தில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது. இதனை தொடர்ந்து பல முன்னாள் நிர்வாகிகளும் தவெக நோக்கி நகர்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேலும், பாப்பிரெட்டிப்பட்டி முன்னாள் எம்.எல்.ஏ கோவிந்தசாமி உள்ளிட்ட 11 முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட சுமார் 400 பேர் தவெகவில் இணைய உள்ளதாக முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    சி. விஜயபாஸ்கர்

    இதற்கிடையில், முன்னாள் அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், எம்.எஸ்.எம். ஆனந்தன், கடம்பூர் ராஜு, எம்.சி. சம்பத் ஆகியோர் தவெகவில் இணைவது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. அதோடு, சி.வி. சண்முகம், சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்ட முக்கிய முன்னாள் அமைச்சர்களும் அடுத்த கட்டத்தில் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையலாம் என்ற தகவல்கள் அரசியல் களத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

    English Summary

    Reports suggest former AIADMK ministers and key leaders may join Vijay’s TVK, intensifying political turmoil in Tamil Nadu.