என் வீட்டு கன்னுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! கொஞ்ச கொஞ்சமாய் கருகும் இரட்டை இலை! அசையாத எடப்பாடி!

  • சென்னை: 2026 சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுக கடுமையான அரசியல் நெருக்கடியை சந்தித்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. ஒருகாலத்தில் தமிழக அரசியலின் அசைக்க முடியாத சக்தியாக விளங்கிய அதிமுக, தற்போது நிர்வாகிகள் வெளியேற்றம், உட்கட்சி மோதல்கள், தலைமைக்கு எதிரான மனநிலை மற்றும் எதிர்காலம் பற்றிய குழப்பங்கள் ஆகியவற்றால் சவாலான சூழலை எதிர்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. ஆனாலும், எடப்பாடி பழனிசாமி இன்னும் அலட்சியமான மனநிலையில் தான் இருக்கிறார் என புலம்புகின்றனர் அதிமுகவினர்.

    Advertisement

    தேர்தலுக்கு முன்பு ஆட்சியை கைப்பற்றும் நம்பிக்கையில் இருந்த அதிமுக, தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு எதிர்க்கட்சி அந்தஸ்தையே இழந்தது. இது அடிமட்ட தொண்டர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்திது.

    Advertisement

    அதிலும் குறிப்பாக, முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்எல்ஏக்கள் மற்றும் தற்போதைய கட்சி நிர்வாகிகள் பலர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து வருவது அதிமுக முகாமில் கவலையை அதிகரித்துள்ளது.

    எடப்பாடி பழனிசாமி

    கட்சியின் தற்போதைய நிலைக்கு காரணம் என்ன என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், பல மூத்த நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியின் அரசியல் அணுகுமுறையையே சுட்டிக்காட்டுவதாக கூறப்படுகிறது. குறிப்பாக, கட்சிக்குள் கருத்து வேறுபாடு கொண்ட தலைவர்களை சமாதானப்படுத்துவதற்குப் பதிலாக அவர்களை ஒதுக்கும் அரசியல் நடைமுறை தான் இன்றைய நிலைக்கு காரணம் என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.
    2017ஆம் ஆண்டு சசிகலா சிறைக்கு சென்ற பிறகு எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வந்தார்.

    Advertisement

    சசிகலா

    அதன் பின்னர், சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரை கட்சியில் இருந்து விலக்கினார். அப்போது பல மூத்த நிர்வாகிகள், தென் மாவட்டங்களில் அதனால் வாக்கு வங்கி பாதிக்கப்படும் என எச்சரித்ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்த ஆலோசனைகள் பெரிதாக எடுத்துக்கொள்ளப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் நிலவுகிறது. அதன் தொடர்ச்சியாக, ஓ.பன்னீர்செல்வத்துடனான அதிகாரப் போட்டியும் கட்சிக்குள் பெரிய பிளவை ஏற்படுத்தியது.

    ஓ பன்னீர்செல்வம்

    ஒருங்கிணைப்பாளர் அமைப்பு கலைக்கப்பட்டு, ஒற்றைத் தலைமை உருவாக்கப்பட்ட நிலையில், ஓ.பன்னீர்செல்வமும் கட்சியில் இருந்து விலக்கப்பட்டார். இதுவும் அதிமுகவின் ஆதரவாளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். இதற்கிடையில், தேர்தல் தோல்விக்குப் பிறகு கட்சியை மீண்டும் ஒருங்கிணைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அதிகரித்துள்ளன.

    Advertisement

    டிடிவி தினகரன்

    குறிப்பாக, சசிகலா, டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட பிரிந்த தலைவர்களை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என்று பல மாவட்ட நிர்வாகிகள் வலியுறுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இருப்பினும், இதுகுறித்து இதுவரை தெளிவான முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. மற்றொரு புறம், கட்சிக்குள் எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் உள்ளிட்ட தலைவர்களின் எதிர்காலம் குறித்தும் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

    முக்கிய தலைவர்கள்

    தேர்தலுக்குப் பிறகு ஏற்பட்ட குழப்பங்களில் அவர்கள் வகித்த பங்கு குறித்து விவாதங்கள் நடந்தாலும், அவர்களை மீண்டும் முழுமையாக கட்சிக்குள் கொண்டு வருவது தொடர்பாக எந்த முன்னேற்றமும் இல்லையென கூறப்படுகிறது. இதனால், கட்சியில் மீண்டும் பொறுப்புகள் வழங்கப்படாமல் இருந்தால் சில முக்கிய தலைவர்கள் வேறு அரசியல் முடிவுகளை எடுக்கக்கூடும் என்ற பேச்சும் அரசியல் வட்டாரங்களில் அடிபடுகிறது.

    Advertisement

    மிதுன்

    ஏற்கனவே சில முன்னாள் எம்எல்ஏக்கள் மற்றும் நிர்வாகிகள் கட்சியை விட்டு வெளியேறியுள்ள சூழலில், மேலும் பலர் வெளியேற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுனை கட்சி அரசியலில் முன்னிறுத்தும் முயற்சிகள் நடப்பதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. இளைஞரணி அல்லது தகவல் தொழில்நுட்ப அணியில் முக்கிய பொறுப்பு வழங்கி, படிப்படியாக அவரை முன்னணி தலைவராக உருவாக்கும் திட்டம் குறித்து அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. எனினும், இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி வெளிப்படையாக மறுப்பு தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

    கொள்கைகளுக்கு முரண்

    ஆனால், கட்சிக்குள் ஒரு தரப்பினர் மிதுனை முன்னிறுத்துவது அவசியம் என கருதினாலும், மற்றொரு தரப்பினர் அதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறப்படுகிறது. திமுகவில் உதயநிதி ஸ்டாலின் வகிக்கும் பாத்திரத்தைப் போல அதிமுகவில் மிதுனை உருவாக்க முயற்சி நடந்தால், அது கட்சியின் அடிப்படை கொள்கைகளுக்கு முரணாக இருக்கும் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. மொத்தத்தில், தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுக இன்று முக்கியமான திருப்புமுனையில் நிற்கிறது.

    Advertisement

    இரட்டை இலை

    பிரிந்த தலைவர்களை மீண்டும் இணைப்பதா, புதிய தலைமுறைக்கு வாய்ப்பு அளிப்பதா, அல்லது தற்போதைய தலைமையின் கீழ் மறுகட்டமைப்பை மேற்கொள்வதா என்பது குறித்து எடுக்கப்படும் முடிவுகளே கட்சியின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். ஒருகாலத்தில் தமிழக அரசியலை தீர்மானித்த இரட்டை இலை, தற்போதைய சவால்களை கடந்து மீண்டும் எழுச்சி பெறுமா அல்லது மேலும் பலவீனமடையுமா என்பது வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்களில் தெரிந்து விடும் என்கின்றனர் அதிமுகவினர்.

    English Summary

    Post-election setbacks, defections and leadership disputes deepen AIADMK's internal crisis under Edappadi Palaniswami.