தாராபுரம்: தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ரூ.70 லட்சம் பணம் கொண்டு செல்லப்பட்ட விவகாரத்தில் அதிமுக மாவட்ட செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகளிடம் போலீசார் சுமார் 5 மணி நேரம் விசாரணை நடத்திய நிலையில், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நேரடியாக காவல் நிலையத்துக்கே வருகை தந்தார். காவல் நிலையத்தில் அதிமுகவினர் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை ஓய்கிறது. ஆளும் தவெக மற்றும் திமுக, அதிமுக கட்சியினர் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நாளை மறுநாள் (அக்டோபர் 6) 2 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இந்த நிலையில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே போலீசார் நடத்திய வாகன சோதனையில் ரூ.70 லட்சம் பணம் கொண்டு செல்லப்பட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இது தொடர்பாக சுப்பிரமணி என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, அதிமுக திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளர் செல்வகுமரன் கூறியதன் பேரில் பணத்தை கொண்டு வந்ததாக அவர் தெரிவித்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இதையடுத்து அதிமுக மாவட்ட செயலாளர் செல்வகுமரனை தாராபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். தாராபுரம் அதிமுக நகர செயலாளர் சி.ஆர்.ராஜேந்திரனும் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டார். இந்த தகவல் பரவியதும் 500-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் தாராபுரம் காவல் நிலையம் முன்பு திரண்டனர். அதிமுக மாவட்ட செயலாளர் செல்வகுமரன் உள்ளிட்டோரை விடுவிக்க வலியுறுத்தி காவல் நிலையத்தை முற்றுகையிட்ட அதிமுகவினர், தாராபுரம் - கரூர் சாலையில் மறியலிலும் ஈடுபட்டனர். இடைத்தேர்தல் சமயத்தில் அதிமுக மாவட்ட செயலாளரை விசாரணைக்கு அழைத்துச் சென்றதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தாராபுரம் காவல் நிலையத்திற்கு வந்து போலீசாரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தார். அதிமுக மா.செ செல்வகுமரனை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும், தோல்வி பயத்தின் காரணமாக ஆளும் தவெக அரசு காவல்துறையைப் பயன்படுத்தி மாவட்டச் செயலாளரைக் கைது செய்ய முயற்சிப்பதாகவும் குற்றம்சாட்டி, கடும் முழுக்கங்களை எழுப்பினர். என்ட்ரி கொடுத்த டிடிவி தினகரன் இதற்கிடையே தாராபுரத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், உடனடியாக தாராபுரம் காவல் நிலையத்திற்கு சென்று, அங்கிருந்த போலீஸ் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனையடுத்து செல்வகுமரன் மற்றும் ராஜேந்திரனை போலீசார் விடுவித்தனர். சுமார் 5 மணி நேர விசாரணைக்குப் பின் அதிமுக மாவட்ட செயலாளர் விடுவிக்கப்பட்டதும், அங்கு திரண்டிருந்த அதிமுகவினர் காவல் நிலையம் முன்பாக பட்டாசுகளை வெடித்து கொண்டாடினர். அதிமுகவினர் ஏவிய சில ராக்கெட்டுகள், காவல் நிலையத்துக்குள்ளும் சீறிப் பாய்ந்தன. காவல் நிலையத்தில் இருந்து வெளியே வந்த செல்வகுமரனை தனது பிரசார வாகனத்தில் ஏற்றிக்கொண்ட டிடிவி தினகரன், அங்கு திரண்டிருந்த அதிமுக தொண்டர்களை பார்த்து நன்றி தெரிவிக்கும்படியும் அவரிடம் கூறினார். அதிமுக நிர்வாகிகளை தனது வாகனத்திலேயே டிடிவி தினகரன் அழைத்துச் சென்றார். இதனால், இரவில் தாராபுரத்தில் பெரும் பதற்றம் நிலவியது.அதிமுக மா.செவிடம் விசாரணை
காவல் நிலையத்தில் திரண்ட அதிமுகவினர்
தனது வாகனத்தில் ஏற்றிய தினகரன்