விஷப் பரிட்சைக்கு தயாரான எடப்பாடி! 5 தொகுதி இடைத் தேர்தல்.. அதிமுகவின் ’மாஸ்டர்’ பிளான் என்ன?

  • சென்னை: தமிழக அரசியலில் அடுத்த பெரிய அரசியல் சோதனையாக பார்க்கப்படும் ஐந்து சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை முன்னிட்டு, அதிமுக தனது தேர்தல் பணிகளை வேகப்படுத்தியுள்ளது. குறிப்பாக, இந்த தேர்தலை கவுரவப் பிரச்சினையாக கருதும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தற்போதிலிருந்தே வேட்பாளர் தேர்வு பணிகளில் நேரடியாக ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    Advertisement

    நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 47 தொகுதிகளில் வெற்றி பெற்று எதிர்க்கட்சியாக அமர்ந்தது. ஆனால் தேர்தலுக்குப் பிறகு கட்சிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மற்றும் அரசியல் மாற்றங்கள் காரணமாக சில எம்.எல்.ஏக்கள் கட்சியில் இருந்து விலகினர்.

    Advertisement

    அதன்பின்னர் பெருந்துறை, தாராபுரம், மதுராந்தகம் மற்றும் அம்பாசமுத்திரம் தொகுதிகளைச் சேர்ந்த நான்கு எம்.எல்.ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.
    இதனுடன் முதல்வராக பதவியேற்ற பின்னர் திருச்சி கிழக்கு தொகுதி உறுப்பினர் பதவியை விஜய் ராஜினாமா செய்ததால், மொத்தம் ஐந்து தொகுதிகள் காலியாகின.

    இடைத்தேர்தல்

    இந்த தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன. அதில் குறிப்பாக அதிமுகவுக்கு இந்த தேர்தல் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. சட்டப்பேரவைத் தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவு, கட்சிக்குள் உருவான பிரிவினை, தொடர்ந்து தவெகவுக்கு சென்ற முன்னாள் நிர்வாகிகள் உள்ளிட்ட காரணங்களால் அதிமுகவின் எடப்பாடி பழனிசாமியின் தலைமை குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

    Advertisement

    எடப்பாடி பழனிசாமி

    இந்த சூழலில் இடைத்தேர்தலில் கணிசமான வெற்றியை பதிவு செய்து கட்சியின் வலிமையை மீண்டும் நிரூபிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் எடப்பாடி பழனிசாமி உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. இதற்காக முதற்கட்டமாக கொங்கு மண்டலத்தில் உள்ள தாராபுரம் மற்றும் பெருந்துறை தொகுதிகள் மீது அதிமுக சிறப்பு கவனம் செலுத்தி வருகிறதாம். இந்த இரண்டு தொகுதிகளிலும் கட்சிக்கு வலுவான அமைப்பு இருப்பதால், வெற்றிக்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கட்சி தலைமையினர் நம்புகின்றனர்.

    அதிமுக வேட்பாளர்கள்

    அதனால், அந்த பகுதிகளில் நன்கு அறிமுகமானவர்கள், பொருளாதார ரீதியாக வலுவானவர்கள், கட்சிக்குள் ஏற்றுக்கொள்ளப்படும் முகங்கள் என பல்வேறு அளவுகோல்களின் அடிப்படையில் வேட்பாளர்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. முதல் கட்டமாக ஆறு பேரின் பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளதாகவும், அவர்களிடம் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரத்தில் திருச்சி கிழக்கு தொகுதிக்கும் வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளரை கண்டறியும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    Advertisement

    பாமக

    நகர்ப்புற வாக்காளர்கள் அதிகம் உள்ள இந்த தொகுதியில் புதிய முகமா அல்லது அனுபவம் வாய்ந்த தலைவரா என்பதில் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. கூட்டணி அரசியலையும் அதிமுக கவனத்தில் எடுத்துள்ளது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது மதுராந்தகம் தொகுதியை பாமக கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது அதிமுக சார்பில் மரகதம் குமரவேலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதால் அந்த கோரிக்கை ஏற்கப்படவில்லை.

    பாஜக

    ஆனால் தற்போதைய அரசியல் சூழலில் கூட்டணியை வலுப்படுத்தும் நோக்கில் மதுராந்தகம் தொகுதியை பாமகவுக்கும், அம்பாசமுத்திரம் தொகுதியை பாஜகவுக்கும் ஒதுக்கும் வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இதன் மூலம் கூட்டணி கட்சிகளை திருப்திப்படுத்துவதோடு, இடைத்தேர்தலில் ஒருங்கிணைந்த எதிர்க்கட்சி வாக்குகளை பெறலாம் என அதிமுக கணக்கிட்டு வருவதாக கூறப்படுகிறது.

    Advertisement

    தவெக

    வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டவுடன், அவர்களை உடனடியாக களத்தில் இறக்கி வீடு தோறும் பிரசாரம், வாக்காளர் சந்திப்பு, நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் உள்ளிட்ட தேர்தல் பணிகளை தொடங்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழக அரசியலில் தற்போது ஆளுங்கட்சியான தவெகவும், எதிர்க்கட்சியான அதிமுகவும் நேரடியாக பலப்பரீட்சை நடத்தும் முதல் தேர்தலாக இந்த இடைத்தேர்தல் பார்க்கப்படுகிறது. எனவே, இந்த தேர்தலின் முடிவு ஐந்து தொகுதிகளின் வெற்றியை மட்டுமல்லாமல், எடப்பாடியின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கியமான நிகழ்வாக அமைந்துள்ளது.

    English Summary

    Edappadi Palaniswami intensifies candidate selection as AIADMK prepares for five key bypolls in Tamil Nadu.