டிசம்பர் முதல் வாரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம்.. நிர்வாகிகளிடம் எடப்பாடி பழனிசாமி சொன்னது என்ன?

  • சென்னை: டிசம்பர் முதல் வாரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டத்தை நடத்த அக்கட்சி தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களின் பட்டியலை தயாரிக்க எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி உள்ளதாகவும், இடைத்தேர்தல் எப்போது வந்தாலும் அதனை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்.

    Advertisement

    ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்களின் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அதிமுக பொதுக்குழு தொடர்பாக ஆலோசிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இடைத்தேர்தல் நடக்கவுள்ள 5 தொகுதி மாவட்டச் செயலாளர்களுடனும் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை செய்திருக்கிறார்.

    Advertisement

    விராலிமலை, கரூர், பெருந்துறை, அம்பாசமுத்திரம் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 5 தொகுதிகளில் 4ல் அதிமுக வென்றிருக்கிறது. இதனால் மீண்டும் நடக்கவுள்ள இடைத்தேர்தலில் அதிமுக வென்றால், அது மிகப்பெரிய விஷயமாக மாறும். அதிமுகவுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும். இந்த நிலையில் மாவட்டச் செயலாளர்களுடன் நீண்ட நேரம் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி இருக்கிறார்.

    அப்போது எடப்பாடி பழனிசாமி பேசுகையில், இடைத்தேர்தல் எப்போது வந்தாலும் அதனை எதிர்கொள்ள கட்சியினர் தயாராக இருக்க வேண்டும். மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல் போல் மீண்டும் நடந்துவிடக் கூடாது. இடைத்தேர்தலில் அதிமுக கடுமையான போட்டியை கொடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

    Advertisement

    அதுமட்டுமல்லாமல் டிசம்பர் முதல் வாரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டத்தை நடத்த அக்கட்சி தலைமை திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களின் பட்டியலை தயாரிக்க எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி உள்ளார். இதனால் அதிமுகவில் அடுத்த பஞ்சாயத்து வெடிக்கலாம் என்று பார்க்கப்படுகிறது.

    சட்டசபைத் தேர்தல் தோல்விக்கு பின் எஸ்பி வேலுமணி மற்றும் சிவி சண்முகம் தரப்பு தொடர்ச்சியாக பொதுக்குழு கூட்ட வேண்டும் என்று பேசி வந்தனர். இதனிடையே எஸ்பி வேலுமணி மற்றும் சிவி சண்முகம் உள்ளிட்டோரை தவிர்த்து அவர்களின் ஆதரவாளர்களை எடப்பாடி பழனிசாமி கட்சியில் இருந்து நீக்கினார்.

    Advertisement

    பொதுக்குழுவில் தனக்கு எதிராக எந்தக் குரலும் எழுந்துவிடக் கூடாது என்பதால் எடப்பாடி பழனிசாமி முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது. டிசம்பர் மாதத்தில் பொதுக்குழு நடக்க வேண்டும் என்றால், இன்னும் 2 வாரத்தில் பொதுக்குழு குறித்த அறிவிப்பை தலைமை வெளியிட வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    English Summary

    AIADMK Gears Up for General Council in Early December, Edappadi Palaniswami Urges Cadres to Prepare for Bypolls