அதிமுக பொதுக்குழு பஞ்சாயத்து ஓவர்.. உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை வாபஸ் பெற்ற எடப்பாடி, ஓபிஎஸ்

  • சென்னை: 2022-ம் ஆண்டு அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் தொடரப்பட்டிருந்த சட்டப்போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. இரு தரப்பினரும் தாக்கல் செய்திருந்த வழக்குகளை வாபஸ் பெற சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து, பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த அனைத்து வழக்குகளும் முடித்து வைக்கப்பட்டன.

    Advertisement

    அதிமுகவில் கடந்த 2022 ஆம் ஆண்டு தலைமை பதவியை கைப்பற்றுவது தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கும் - ஓ பன்னீர் செல்வத்திற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கியிருந்ததால் பொதுக்குழுவை 2022 ஆம் ஆண்டு ஜூன் 23 ஆம் தேதி மற்றும் ஜூலை 11 ஆம் தேதியில் கூட்டினார்.

    Advertisement

    வழக்குகளை வாபஸ் பெற்ற ஓபிஎஸ்

    இந்த பொதுக்குழுவில் ஓ பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது. தன்னை கட்சியில் இருந்து நீக்கியதை எதிர்த்தும் பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் நீதிமன்றத்தில் ஓ பன்னீர் செல்வம் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த சில ஆண்டுகளாக நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்தன.

    இந்த நிலையில்தான், அரசியல் சூழல் மாறிவிட்ட நிலையில், தங்களது வழக்குகளை திரும்ப பெறக்கோரி உயர் நீதிமன்ற பதிவுத்துறைக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில், ஓ பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் சிவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து இருந்த உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குகளை திரும்ப பெருவதாக தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

    Advertisement

    வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன

    அப்போது, வழக்குகளை திரும்பப்பெறுவது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட கடிதங்களை நீதிமன்றம் பரிசீலனை செய்தது. பின்னர் அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி குமரேஷ் பாபு, ஓ பன்னீர் செல்வம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை திரும்ப பெற அனுமதி வழங்கினார். இதையடுத்து, வழக்குகள் முடித்துவைக்கப்பட்டன. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கும் ஒன்று விசாரணைக்கு வந்தது.

    அதாவது கட்சியின் பெயர், கொடி மற்றும் சின்னத்தை பயன்படுத்தக்கூடாது என்றும் கட்சி நடவடிக்கைகளில் தலையிட கூடாது எனவும் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன. இந்த வழக்குகளை திரும்ப பெற அனுமதிக்க வேண்டும் என்று அனுமதி கோரிய நிலையில், அதனையும் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. இதையடுத்து, ஓ பன்னீர் செல்வத்திற்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கும் முடித்து வைக்கப்பட்டது.

    Advertisement

    வாபஸ் பெற்றது ஏன்?

    அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து தன்னையும் தனது ஆதரவு நிர்வாகிகளான மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர் ஆகியோரை கட்சியில் இருந்து நீக்கியது செல்லாது என்று சட்டப்போராட்டம் நடத்தி வந்த ஓபிஎஸ் அணியினர் கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக ஒருவர் பின் ஒருவராக திமுகவில் ஐக்கியமாகினர்.

    வேறு கட்சியில் முறைப்படி இணைந்துவிட்டதால், அதிமுகவுக்கு உரிமை கோரி வந்த மனுக்களை வாபஸ் பெற்று இருக்கிறார்கள். முன்னதாக டிடிவி தினகரனும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியை தொடங்கிய பிறகு, அதிமுக துணைப்பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதற்கு எதிராக தொடர்ந்த வழக்கை 2021 ஆம் ஆண்டு வாபஸ் பெற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    AIADMK OPS - EPS: The long-running legal dispute over the 2022 AIADMK general council meeting has come to an end, with both O. Panneerselvam and Edappadi K. Palaniswami withdrawing their respective cases. The Madras High Court accepted the requests and closed all pending civil proceedings.