அடுத்தடுத்து விலகும் அதிமுக நிர்வாகிகள்... எடப்பாடி பழனிசாமி இன்று சென்னையில் முக்கிய ஆலோசனை

  • சென்னை: சட்டப்பேரவைத் தேர்தல் படுதோல்வி குறித்து இன்றும் நாளையும் கட்சி நிர்வாகிகளுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். இன்று செங்கல்பட்டு, வேலூர் மாவட்ட நிர்வாகிகளுடன் விரிவாக ஆலோசனை நடத்த உள்ளார். அதிமுகவில் இருந்து பலரும் விலகி சாரைசாரையாக தவெகவில் இணைந்து வரும் நிலையில்,இந்த ஆலோசனை கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

    Advertisement

    2026 சட்டசபை தேர்தல் அதிமுகவிற்கு கடும் சவாலை தந்துள்ளது. ஏனெனில் இந்த தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக மிகப்பெரிய வெற்றி பெற்றது. 108 இடங்களில் வென்ற தவெக, திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிக, காங்கிரஸ், ஐயுஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. திமுகவிற்கு பிறகு அதிமுக, அதிமுகவிற்கு பிறகு திமுக என்று மாறிமாறி கடந்த 60 ஆண்டுகளாக நடந்து வந்த ஆட்சி முதல்முறையாக முடிவுக்கு வந்துள்ளது. திராவிட கட்சிகள் இல்லாத ஆட்சி தமிழ்நாட்டில் அமைந்துள்ளது. இந்தஆட்சி மாற்றம் திமுகவைவிட அதிமுகவை மோசமாக பாதித்துள்ளது.

    Advertisement

    முதல்முறையாக அதிமுக எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்துள்ளது. ஒரு கோடி பேருக்கு மேல் அதிமுகவிற்கு வாக்களித்தனர். 47 இடங்களில் வென்றது. இது மோசமான தோல்வி இல்லை என்றாலும், 2019 முதல் தொடர் தோல்வியை அதிமுக சந்தித்து வருகிறது.இதனால் முன்னணி நிர்வாகிகள் எதிர்காலம் பாதிக்குமோ என்று கருதி சோகத்தில் ஆழ்ந்தனர். இந்த சூழலில் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளின் ஆதரவை நாடும் முன்பு, அதிமுகவின் ஆதரவை தான் தவெக கேட்டதாக கூறப்படுகிறது.

    ஆனால் அதிமுக சம்மதிக்கவில்லை என்றும் சொல்கிறார்கள். அதேபோல் தேர்தலுக்கு முன்பு அதிமுக தவெக உடன் கூட்டணி அமைத்திருந்தால், இந்த நிலை வந்திருக்காது என்பது அதிமுகவில் இருந்து விலகி வருபவர்களின் கருத்தாக உள்ளது. இந்நிலையில் அதிமுகவில் எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்து தவெகவில் இணைந்து வருகிறார்கள். அதேபோல் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பல நிர்வாகிகள் சாரைசாரையாக அதிமுகவில் இருந்த விலகி தவெகவில் இணைந்து வருகிறார்கள்.

    Advertisement

    இந்த சூழலில் நேற்று முன்தினம் அதிமுக வளர்ச்சி பணிகளில் மகளிரணியின் பங்கு குறித்த ஆலோசனைக் கூட்டம், பொதுச் செயலாளர் பழனிசாமி தலை மையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது.அந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், "அதிமுக ஜனநாயகத்துடன் இயங்கும் ஒரு இயக்கம். பல்வேறு சாதி, மதங்களைச் சேர்ந்தவர்கள் அனைவரும் ஒன்றி ணைந்து மக்களுக்காக உழைக் கிறோம். அரை நூற்றாண்டு காலம் மக்களுக்காகவே உழைத்துக் கொண்டிருக்கும் அதிமுகவை அழிக்கவும் முடியாது, ஒழிக்கவும் முடியாது.

    மக்கள் அதிமுகவுக்குத்தான் வாக்களித்து எம்எல்ஏ ஆக்கியிருக்கிறார்கள். ஆனால், இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்றவர்கள் ராஜினாமா செய்துவிட்டு தவெகவுடன் இணைந்து வருகிறார்கள்.இந்த ஆட்சியை நடத்த முதல்வர் விஜய்க்கு என்ன அருகதை உள்ளது? தேர்தலில் வெற்றி -தோல்வி சகஜம். கடந்த மக்கள வைத் தேர்தலைவிட சட்டப்பேரவைத் தேர்தலில் நமது வாக்கு சதவீதம் கூடியிருக்கிறது. மக்களுக்கு எதுவுமே செய்யாமல் விஜய் ஆட்சிக்கு வந்துள்ளார். ஆட்சிக்கு வந்தும் மக்க ளுக்கு எதுவுமே செய்யாமல், அதிமுக எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய வைத்து ஆட்சி நடத்தி வருகிறார். அதிமுகவை விட்டு துரோகிகள் வெளியேறுவதால் தொண்டர்கள் மகிழ்ச்சியோடும் எழுச்சியுடன் இருக்கின்றனர். அதிமுகவை வலுப்படுத்த அனைவரும் உழைக்க வேண்டும்" என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

    Advertisement

    இப்படி எடப்பாடி பழனிசாமி பேசிய மறுநாளே, அதாவது நேற்று ஒரு நாளில் மட்டும் முன்னாள் அமைச்சர்கள் டாக்டர் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோருடன் திருச்சியை சேர்ந்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.வளர்மதி, திருப்பூரை சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மான்ராஜ் (ஸ்ரீவில்லிபுத்தூர்), எம்.ராம்குமார் (கும்பகோணம்), ராஜவர்மன் (திருச்சுழி), சதன்பிரபாகர் (பரமக்குடி), திருஞானசம்பந்தம் (பேராவூரணி), மாவட்ட செயலாளர்கள் பி.கே.வைரமுத்து (புதுக் கோட்டை), இளம்பை தமிழ்செல்வன் (பெரம்பலூர்), ஒரத்தநாடு மா.சேகர் (தஞ்சை), சீனிவாசன் (திருச்சி) உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும், 208 ஒன்றிய செயலாளர்களும் த.வெ.க.வில் இணைந்துள்ளனர்

    Advertisement

    இந்த சூலுலில் சட்டப்பேரவைத் தேர்தல் படுதோல்வி குறித்து இன்றும் நாளையும் எடப்பாடி பழனிசாமி இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்த உள்ளார். இன்று செங்கல்பட்டு, வேலூர் மாவட்ட நிர்வாகிகளுடன் விரிவாக இன்று ஆலோசனை நடத்த உள்ளார். இந்த கூட்டத்தில் நிர்வாகிகளின் விலகல் மற்றும் கட்சியில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பார் என்று கூறப்படுகிறது.

    English Summary

    AIADMK General Secretary Edappadi Palaniswami is holding consultations with party functionaries in Chennai today and tomorrow regarding the crushing defeat in the Assembly elections. Today, he is set to hold detailed discussions with functionaries from the Chengalpattu and Vellore districts.