பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன?

  • சென்னை: சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தை காலி செய்துள்ள எடப்பாடி பழனிசாமி, ராயப்பேட்டையில் உள்ள பங்களா வீட்டில் குடியேறி இருக்கிறார். அமைச்சர், முதல்வர், எதிர்க்கட்சித் தலைவராக இருந்த 15 ஆண்டுகளாக கிரீன்வேஸ் சாலை வீட்டில் வசித்த வந்த எடப்பாடி பழனிசாமி, தற்போது எம்எல்ஏ-வாக மட்டுமே இருப்பதால் புதிய வீட்டிற்கு குடிபெயர்ந்துள்ளார்.

    Advertisement

    அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சென்னையில் கடந்த 15 ஆண்டுகளாகத் தான் வசித்து வந்த கிரீன்வேஸ் சாலை அரசு இல்லத்தைக் காலி செய்துவிட்டு, ராயப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் பங்களா வீட்டிற்குத் தனது குடும்பத்துடன் குடியேறியுள்ளார். சுபமூகூர்த்த நாள் என்பதால், இன்று பால் காய்ச்சி குடியேறி இருக்கிறார்.

    Advertisement

    2026 சட்டசபைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, பிரதான எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தை அதிமுக இழந்த நிலையில், தற்போது அவர் வெறும் சட்டமன்ற உறுப்பினராக மட்டுமே நீடிப்பதால் இந்த இடமாற்றம் அரங்கேறியுள்ளது. சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள இந்த அரசு பங்களா, எடப்பாடி பழனிசாமியின் அரசியல் வாழ்க்கையில் மிக முக்கியமான பல வரலாற்றுத் தருணங்களைச் சந்தித்துள்ளது.

    கடந்த 2011ஆம் ஆண்டு ஜெயலலிதாவின் அமைச்சரவையில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றது முதல் எடப்பாடி பழனிசாமி இந்த இல்லத்தில்தான் வசித்து வந்தார். பின்னர் 2017 முதல் 2021 வரை தமிழக முதலமைச்சராக அவர் இருந்தபோதும், அதற்குப் பிறகு 2021 முதல் 2026 வரை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகச் செயல்பட்டபோதும் இதே இல்லத்தையே தனது அதிகாரப்பூர்வ முகவரியாகப் பயன்படுத்தி வந்தார்.

    Advertisement

    செவ்வந்தி என அழைக்கப்படும் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட அரசு பங்களாவில் எடப்பாடி பழனிசாமி வசிக்க திமுக அனுமதித்தது. ஆனால் 2026 தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தமிழக அரசியல் களம் தலைகீழாக மாறியுள்ளது. தற்போதைய சூழலில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்து இல்லாததால், விதிமுறைகளின்படி அவர் அரசு பங்களாவை காலி செய்ய வேண்டிய சூழல் உருவானது.

    வெறும் எடப்பாடி தொகுதி எம்எல்ஏ-வாக மட்டுமே இருக்கும் நிலையில், அவர் ராயப்பேட்டை பங்களாவுக்கு மாறியுள்ளார். எடப்பாடி பழனிசாமி தற்போது குடியேறியுள்ள புதிய பங்களா வீடு, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு மிக அருகில் அமைந்துள்ளது. அதிமுக கடும் சவால்களைச் சந்தித்து வரும் வேளையில், தொண்டர்களைத் தினமும் சந்திக்க எடப்பாடி திட்டமிட்டுள்ளார்.

    Advertisement

    அரசு இல்லத்தில் இருக்கும் போது இருந்த கட்டுப்பாடுகள் இனி இருக்காது என்பதால், இந்தத் தனியார் பங்களாவைத் தனது அடுத்தகட்ட அரசியல் வியூகங்களை வகுக்கும் முக்கிய மையமாக எடப்பாடி பழனிசாமி பயன்படுத்துவார் என அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். அதேபோல் ராயப்பேட்டை வீட்டிலிருந்தபடி கட்சி அலுவலகத்திற்கு எளிதாகச் சென்று வர முடியும் என்பதால், இனி அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி அதிக நேரம் செலவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    English Summary

    AIADMK General Secretary Edappadi Palaniswami Vacates Greenways Road Residence, Moves into New Bungalow in Royapettah