ஆதவ் அர்ஜுனா அதிமுகவை பற்றி இப்படி பேசினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” கே.பி.முனுசாமி எச்சரிக்கை

  • சென்னை: "வாய்ப்பு கிடைக்கும் இடங்களுக்கு எல்லாம் சென்றவர்தான் ஆதவ் அர்ஜுனா.. தவெகவுடன் அதிமுக இணையும் என இனியும் பேசி வந்தால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    Advertisement

    ஜாம்பவான்கள் எல்லாம் இங்கு வந்துவிட்டோம், அங்கு இருப்பவர்கள் எல்லாம் லெட்டர் பேடுகள் தான் என முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியிருந்தார். அதுகுறித்த கேள்விக்கு பதில் அளித்த அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, "அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஒவ்வொரு அதிமுக தொண்டன்தான் ஜாம்பவான்கள். அந்த தொண்டனால் உருவாக்கப்பட்டவர்கள் தான் இது போன்ற ஓடுகாலிகள். இவர்களெல்லாம் ஜாம்பவான்கள் இல்லை. சந்தர்ப்பவாதிகள், துரோகிகள். ஜாம்பவான்கள் முழுவதுமே அதிமுகவில் இங்கே இருக்கிறார்கள். லெட்டர் பேடை வைத்து ஏமாற்றுகின்ற கூட்டம் தான் அங்கே ஓடியிருக்கிறது" எனத் தெரிவித்துளார்.

    Advertisement

    அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச்சு குறித்த கேள்விக்கு பதிலடி கொடுத்த கே.பி.முனுசாமி, "ஆதவ் அர்ஜுனா பேசுகின்ற பொழுது, தமிழக வெற்றிக் கழகத்துடன் அதிமுக இணையும் என்று சொல்லியிருக்கிறார். அவருக்கு உங்களின் வாயிலாக ஒரு எச்சரிக்கை விடுக்கிறேன். இவரைப் போல கொள்கை இல்லாத, வாய்ப்பு கிடைக்கின்ற இடங்களிலெல்லாம் ஓடுகின்ற ஓடுகாலி அல்ல அதிமுக தொண்டன். இவர், இவருக்கு என்று ஒரு தனித்தன்மை கிடையாது.

    இவர் முதலில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்தவர், அடுத்தது விடுதலைச் சிறுத்தைகளுக்கு வந்தவர், அடுத்தது எங்கள் கட்சியில் வந்தவர், அடுத்தது இன்று தவெக சென்றிருக்கிறார். ஆக, ஓராண்டுகளுக்குள்ளாக அல்லது இரண்டு ஆண்டுகளுக்குள்ளாக இத்தனை இடங்களில் அவர் ஓடுகிறார் என்று சொன்னால், அவருக்கு என்ன கொள்கை இருக்கிறது? அவர் இப்பொழுது கருத்தைச் சொல்லுகிறார்- அதிமுக இணையும் என்று சொல்லுகிறார்.

    Advertisement

    இந்த இயக்கம் 31 ஆண்டு காலம் ஆட்சி செய்த இயக்கம். இந்த இயக்கத்தால் பல நூற்றுக்கணக்கான சட்டமன்ற உறுப்பினர்களை உருவாக்கிய இயக்கம், பல அமைச்சர்களை உருவாக்கிய இயக்கம். இதற்கு மேலாக, இன்று தமிழகம் இந்திய துணைக்கண்டத்தில் முதன்மை மாநிலமாக எல்லாத் துறைகளிலும் விளங்கிக் கொண்டிருக்கிறது என்று சொன்னால், இந்த 31 ஆண்டு காலம் தமிழகத்தில் ஆட்சி செய்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்கள் கொண்டு வந்த திட்டங்களால் தான் இன்று தமிழகம் முதன்மை மாநிலமாக இருக்கிறது.

    எனவே, இதுபோன்ற சந்தர்ப்பவாதிகள் சொல்லுகின்ற கருத்துக்களுக்கு முடிவு கூறுகின்ற வகையில் தான் ஆதவ் அர்ஜுனாவிற்கு நான் ஒரு எச்சரிக்கை விடுக்கிறேன். இதை மீண்டும் சொன்னால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அதிமுக தேர்தல் ஆணையத்திலே பதிவு செய்யப்பட்ட இயக்கம், 54 ஆண்டுகளுக்கு முன்பாகவே பதிவு செய்யப்பட்ட இயக்கம், கிட்டத்தட்ட ஒன்றரை கோடி, இரண்டு கோடி தொண்டர்களை உள்ளடக்கிய இயக்கம்.

    Advertisement

    இவ்வளவு பெரிய இயக்கத்தை, உங்களைப் போன்ற சந்தர்ப்பவாதிகள்... ஆதவ் அர்ஜுனாவைப் போலத் தான் இவர்களும். ஆதவ் அர்ஜுனாவிற்கும் இந்த விஜயபாஸ்கருக்கும் வித்தியாசம் இல்லை. எத்தனை கட்சிக்கு ஓடிட்டாரு? இப்ப ஆட்சியில் இல்லை என்றதுமே விஜயபாஸ்கர் அங்கே ஓடிட்டாரு. நாளைக்கு இந்த விஜய் ஆட்சியில் இல்லைன்னா விஜய்யைக் காலி பண்ணிட்டு வேற எங்கயாவது ஓடுவாங்க. அது மாதிரி கூட்டம்.

    அந்தக் கூட்டத்தில் ஒருவராக இருக்கின்ற ஆதவ் அர்ஜுனாவிற்கு எச்சரிக்கை விடுக்கின்றேன்.. இது போன்ற கருத்தை மீண்டும் சொல்லுவீர்கள் என்று சொன்னால், சட்டத்தின் முன் நீங்கள் பதில் சொல்ல வேண்டிய நிலைமை வந்துவிடும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்." எனப் பேசியுள்ளார் கே.பி.முனுசாமி.

    Advertisement

    மேலும் பேசிய அவர், "அதிமுகவின் 2ஆம் கட்ட தலைவர்கள் பனையூர் கேட்டின் முன்பு நின்று கேட் எப்போது திறக்கும் என்று ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டு, பட்டியில் இருந்து ஆட்டுக்கூட்டம் ஓடுவது போல, ஓடிச் சென்று பார்க்கும் தலைவர் புஸ்ஸி ஆனந்த் தான். ஏனென்றால், அக்கட்சியின் தலைவரைக் கூட அவர்களால் பார்க்க முடியவில்லை." எனத் தெரிவித்துள்ளார்.

    English Summary

    “Aadhav Arjuna is someone who visited every place where an opportunity arose... If there is continued talk about the AIADMK merging with TVK, legal action will be taken,” warned AIADMK Deputy General Secretary KP Munusamy.