சென்னை: மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத் தேர்தல் முடிவுகள் யாரை பாதித்திருக்கிறதோ? இல்லையோ? அதிமுகவை மிகக் கடுமையாக பாதித்திருக்கிறது. கடந்த தேர்தலில் இரு தொகுதிகளில் வென்ற அதிமுக இந்த முறை மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த பழியும் எடப்பாடி பழனிச்சாமி விழுந்துள்ளது. இதை அடுத்து எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக மீண்டும் ஒன்று கூடி உள்ளனர் அதிமுக அதிருப்தி அணியினர். மேலும் சில பல வேலைகளை எஸ்பி வேலுமணியும், சிவி சண்முகமும் துரிதமாக மேற்கொண்டு வருகின்றனர் என்கின்றனர் நம்மிடம் பேசிய அதிமுகவினர்.
2026 தமிழக சட்டசபை தேர்தல் அதிமுகவுக்கு வாழ்வா? சாவா? தேர்தல் போல தான் இருந்தது. அடுத்தடுத்து இரண்டு முறை ஆட்சியை இழந்ததில்லை என்ற பெருமையை தக்க வைக்க எடப்பாடி பழனிச்சாமி மிகக் கடுமையாக போராடினார்.
ஒவ்வொரு கட்சியும் முக்கியம் என்பதற்காக பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்தார். தவெகவுடன் கூட்டணி அமைப்பதாக வந்த தகவல் அந்த கட்சியினரை உற்சாகத்தில் ஆழ்த்தியது. ஆனால் அப்படி நடக்கவில்லை. அதிமுக ஒரு கூட்டணி அமைத்தும், திமுக ஒரு கூட்டணி அமைத்தும் தேர்தலை சந்தித்த நிலையில், தமிழக வெற்றிக் கழகம் தனித்துப் போட்டியிட்டு 108 தொகுதிகளில் வென்றது. ஆட்சி அமைக்க போதிய பெரும்பான்மை இல்லாததால் தனிப்பெருங்கட்சியான, தவெக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்தது. இதற்கிடையே திமுகவும் அதிமுகவும் சேர்ந்து ஆட்சி அமைக்க போவதாக கிடைத்த தகவலால் சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி உள்ளிட்டோர் போர்க்கொடி தூக்கினார். தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்ற அவர்களது பேச்சை எடப்பாடி கேட்கவில்லை. இதை அடுத்து சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் சுமார் 25 எம்எல்ஏக்கள் தமிழக வெற்றிக்கழக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். உச்சபட்சமாக மதுராந்தகம் மரகதம் குமரவேல், தாராபுரம் சத்யபாமா உள்ளிட்ட சில எம்எல்ஏக்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து விட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். நடந்து முடிந்த இடைத்தேர்தலில் இரு தொகுதிகளிலும் அவர்கள் தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்எல்ஏக்களாக பதவி ஏற்றுள்ளனர். இந்த நிலையில் இடைத்தேர்தலிலும் தோற்றதால் எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்புக்குப் பிறகு சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் அதிருப்தி எம்எல்ஏக்கள் போலவே செயல்பட்டு வருகின்றனர். மேலும் தேர்தல் பணிகளிலும் அவர்கள் ஈடுபடவில்லை. தேர்தல் முடிவுக்காக அவர்கள் காத்திருந்த நிலையில் அவர்கள் நினைத்தது போலவே அதிமுக தோல்வியை சந்தித்திருக்கிறது. இதை அடுத்து எடப்பாடி பழனிச்சாமி பதவி விலக வேண்டும் என்ற முழக்கமும் அதிகரித்து வருகிறது. தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் அதிமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதும் தொண்டர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டுள்ள வேலுமணி - சண்முகம் & கோ எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக பஞ்சாயத்தை கூட்ட ஆரம்பித்துள்ளது. இடைத்தேர்தல் முடிவுகள் அவர்கள் எதிர்பார்த்தது போலவே அமைந்துள்ளதால் தமிழக வெற்றி கழகத்திற்கு ஒரேடியாக ஆதரவு தெரிவிக்கலாமா என சிலர் கூறியுள்ளனர். ஏற்கனவே ஏவிஎம்எல்ஏக்கள் தமிழக வெற்றி கழகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் கட்சி தாவல் தடை சட்டம் அவர்களை தடுக்கிறது. அதே நேரத்தில் 25 எம்எல்ஏக்களாக தமிழக வெற்றி கழகத்திற்கு சென்றால் கட்சி தாவல் தடை சட்டம் பாயாது. எனவே பிற எம்எல்ஏக்களையும் வளைத்து போடலாம் என நினைத்து எடப்பாடி ஆதரவுடன் இருக்கும் சில எம்எல்ஏக்களிடம் பேச்சு நடத்தி வருகிறார்களாம். அது மட்டுமல்லாமல் எடப்பாடி பழனிச்சாமிக்கு முன்னதாகவே அதிமுக பொதுக்குழு செயற்குழுவை கூட்டி அவருக்கு நெருக்கடி கொடுக்கலாம் எனவும் சீனியர்கள் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் உலாவுகின்றன. இந்த தகவல்களை மோப்பம் பிடித்து இருக்கும் எடப்பாடி தரப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில ஆலோசனைகளை மேற்கொண்டு வருவதாகவும் சொல்கின்றனர் நம்மிடம் பேசிய அதிமுகவினர்.தவெக
சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி
இடைத்தேர்தல்
அதிருப்தி எம்எல்ஏக்கள்
எடப்பாடி பழனிச்சாமி
தமிழக வெற்றி கழகம்
எடப்பாடி அதிர்ச்சி