கரூர் அதிமுக எம்எல்ஏ எம்ஆர் விஜயபாஸ்கர் ராஜினாமா.. தவெகவில் இணைய முடிவு? எடப்பாடிக்கு ஷாக்

  • சென்னை: கரூர் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏவும், அதிமுக முன்னாள் அமைச்சருமான எம்.ஆர். விஜயபாஸ்கர் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் ஜேசிடி பிரபாகரை நேரில் சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கினார். ஏற்கனவே சி விஜயபாஸ்கர், இசக்கி சுப்பையா உள்பட 5 பேர் ராஜினாமா செய்ததால் அதிமுக எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 47-இல் இருந்து 41 ஆக குறைந்துள்ளது.

    Advertisement

    கருர் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏவும் அதிமுகவின் முக்கிய நிர்வாகியுமாக இருந்து வந்தவர் எம்.ஆர் விஜயபாஸ்கர். அதிமுக எம்.எல்.ஏக்கள் அடுத்தடுத்து தனது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்து வரும் நிலையில், இன்று எம்.ஆர் விஜயபாஸ்கரும் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதன்மூலம் ராஜினாமா செய்த அதிமுக எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

    Advertisement

    எம்ஆர் விஜயபாஸ்கர் ராஜினாமா

    ஏற்கனவே, எஸ் ஜெயக்குமார் (பெருந்துறை தொகுதி), மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), சத்தியபாமா (தாராபுரம்), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்), சி. விஜயபாஸ்கர் (விராலிமலை) ஆகிய 5 அதிமுக எம்.எல்.ஏக்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதில் விஜயபாஸ்கரை தவிர மீதமுள்ள 4 பேரும் தவெகவில் இணைந்தனர்.

    சி. விஜயபாஸ்கரும் விரைவில் தவெகவில் இணையலாம் என்று அரசியல் வட்டாரத்தில் பேச்சு அடிபடக்கூட சூழலில் தற்போது மேலும் ஒரு எம்.எல்.ஏ தனது பதவியை ராஜினாமா செய்து இருப்பது அதிமுக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சபாநாயகர் ஜேசிடி பிரபகாரை சந்தித்து எம்.ஆர் விஜயபாஸ்கர் தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார்.

    Advertisement

    சபாநாயகர் ஏற்பு

    எம் ஆர் விஜயபாஸ்கரின் இந்த ராஜினாமா கடிதத்தினை ஏற்றுக்கொண்டுள்ளதாக சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பில், "சட்டமன்றப் பேரவை விதி 21-இன் படி கரூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் மாண்புமிகு திரு. M.R. விஜயபாஸ்கர் தனது பதவி விலகல் கடிதத்தை தம் கைப்பட எழுதி என்னிடம் அளித்துள்ளார். அவர் அளித்த பதவி விலகல் கடிதம் சட்டமன்றப் பேரவை விதி 22-இன் படி முறையாக உள்ளதால் அதனை நான் ஏற்றுக் கொள்கிறேன்" என்று சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

    Advertisement

    தவெகவில் இணைய உள்ளார்?

    எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கர் தவெகவில் இணையலாம் என்று சொல்லப்படுகிறது. ஜூலை 2 வது வாரத்தில் முதல்வர் விஜய் கரூர் செல்ல இருப்பதாகவும் அப்போது தவெகவில் இணைகிறரா? அல்லது அதற்கு முன்பே தவெகவில் இணையும் விழா நடைபெற உள்ளதா? என்பது குறித்து தெரியவில்லை. தவெகவில் இணைகிறாரா என்ற தகவலும் உறுதியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    எனினும், ஏற்கனவே ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்கள் தவெகவில் இணைந்ததால், எம்.ஆர் விஜயபாஸ்கரும் தவெகவில் இணைவதற்கே வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. அதிமுக எம்.எல்.ஏக்கள் 6 பேர் ராஜினாமா செய்துள்ள நிலையில் திருச்சி கிழக்கு தொகுதியையும் சேர்த்து 7 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது.

    Advertisement

    71 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

    கரூர் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்ற எம்.ஆர் விஜயபாஸ்கர் 71,542 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து தவெக சார்பில் போட்டியிட்ட மதியழகன் 69,721 வாக்குகளும், திமுக சார்பில் போட்டியிட்ட ஆசி. எம் தியாகராஜன் 67,256 வாக்குகளும் பெற்று இருந்தார். நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட கருப்பையா 5,465 வாக்குகள் பெற்றார்.

    English Summary

    AIADMK MLA MR Vijayabaskar resigned from the Tamil Nadu Assembly after submitting his resignation to Speaker J.C.D. Prabhakar at the Secretariat. Elected from Karur, his exit reduces the AIADMK's strength to 41, following five earlier resignations.