சென்னை: அதிமுக எம்எல்ஏ-க்கள் 6 பேரின் ராஜினாமாவை ஏற்று சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அதிமுக சார்பாக தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு தீர்ப்பு அளிக்க உள்ளது.
சட்டசபைத் தேர்தலில் அதிமுக 47 தொகுதிகளில் மட்டுமே வென்று 3வது இடத்திற்கு தள்ளப்பட்டது. இதனால் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அதிருப்தி அணி உருவாகியது. எடப்பாடி பழனிசாமி உத்தரவையும் மீறி அதிமுக எம்எல்ஏ-க்கள் 25 பேர் தவெக அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆதரவாக வாக்களித்தனர். இதன்பின் அதிமுக எம்எல்ஏ-க்களுக்கு எதிராக தகுதி நீக்க கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி புகார் கொடுத்தார்.
இதனிடையே அதிமுக எம்எல்ஏ-க்கள் மரகதம் குமரவேல், சத்தியபாமா, ஜெயக்குமார், இசக்கி சுப்பையா, விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் தங்களின் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நேராக தவெகவில் ஐக்கியமாகினர். தகுதி நீக்க நடவடிக்கை நிலுவையில் இருக்கும் போது ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றது தவறு என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக சார்பாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களுடம் முடிவடைந்துவிட்ட சூழலில் அக்டோபர் 9ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் நீதிபதி திடீரென விடுப்பில் சென்றுவிட்டதால், இன்று தீர்ப்பு அளிக்கப்பட உள்ளது. இதனால் என்ன தீர்ப்பு வரும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.