முதல்வர் விஜய் யூடர்ன்.. அதிமுக எம்எல்ஏக்களுக்கு நாளை அமைச்சர் பதவி இல்லை.. பின்னணியில் 2 மேட்டர்

  • சென்னை: தமிழக முதல்வர் விஜய் நாளை தனது அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில் தனக்கு ஆதரவு தெரிவித்துள்ள அதிமுகவின் சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி தலைமையிலான எம்எல்ஏக்களுக்கு நாளை அமைச்சர் பதவி வழங்குவதில் இருந்து முதல்வர் விஜய் பின்வாங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன் பின்னணியில் முக்கிய 2 காரணங்கள் பற்றிய பரபரப்பான தகவல்கள வெளியாகி உள்ளன.

    Advertisement

    நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக மாறியது. இதையடுத்து காங்கிரஸ், 2 கம்யூனிஸ்ட்கள், விசிக, இந்தியன் யூனியன் முஸ்லிம் கட்சியுடன் ஆட்சியை பிடித்தது. நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுகவின் சிவி சண்முகம் - எஸ்பி வேலுமணி தலைமையிலான 25 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவாக ஓட்டளித்தனர்.

    Advertisement

    அதிமுக தற்போது 2 ஆக பிரிந்துள்ளது. மொத்தமுள்ள 47 எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 22 பேர் உள்ளனர். இவர்கள் முதல்வர் விஜய்யின் அரசுக்கு எதிராக வாக்களித்தனர். அதேவேளையில் சிவி சண்முகம் - எஸ்பி வேலுமணி தரப்பு விஜய்க்கு ஆதரவாக வாக்களித்தது. இதனால் சட்டசபையில் தவெகவின் பலம் 144 ஆக அதிகரித்தது.

    அதிமுகவிற்கு 5 அமைச்சர்கள்?

    இதற்கு கைமாறாக சிவி சண்முகம் எஸ்பி வேலுமணி அணிக்கு 5 அமைச்சர் பதவிகளை வழங்க விஜய் திட்டமிட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தான் நாளை விஜய் தனது அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அடுத்த மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வேண்டி உள்ளது. மானிய கோரிக்கைகள் நடைபெறும். இதனால் அதற்கு முன்பாக அமைச்சரவையை விரிவாக்க விஜய் முடிவு செய்துள்ளார்.

    Advertisement

    தயக்கம் காட்டும் விஜய்

    தற்போது முதல்வராக விஜய் உள்ளார். அவருடன் 9 பேர் அமைச்சர்களாக உள்ளனர். தமிழக அமைச்சரவையை பொறுத்தவரை முதல்வருடன் சேர்த்து மொத்தம் 35 பேர் வரை இடம்பெறலாம். இன்னும் 25 இடங்கள் காலியாக உள்ள நிலையில் நாளை அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய விஜய் முடிவெடுத்துள்ளார். இதில் அதிமுகவை சேர்ந்த 5 பேர் வரை அமைச்சர்களாக பதவியேற்கலாம் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால் தற்போது அதிமுகவினருக்கு இடம் அளிக்க விஜய் தயங்குவதாக சொல்லப்படுகிறது. இதன் பின்னணியில் 2 முக்கிய காரணங்கள் உள்ளது.

    முதல் காரணம்

    முதல் விஷயம் என்னவென்றால் தகுதி நீக்கம் தொடர்பான அச்சம். அதாவது சிவி சண்முகம் -எஸ்பி வேமணி உள்ளிட்டவர்கள் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள். எடப்பாடி பழனிச்சாமி தான் அவர்களின் 'பி பார்ம்' (இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட தேவையான விண்ணப்பம்) கையெழுத்திட்டுள்ளார். அதோடு எடப்பாடி பழனிச்சாமி தான் அதிமுகவின் கொறாடாவாக அக்ரி கிருஷ்ணமூர்த்தியை நியமித்தார். அவர் விஜய் நம்பிக்கை கோரும் தீர்மானத்துக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று அனைத்து அதிமுக எம்எல்ஏக்களுக்கும் தகவல் அனுப்பினார்.

    Advertisement

    ஆனால் அதனை சிவி சண்முகம் -எஸ்பி வேலுமணி அணியின் எம்எல்ஏக்கள் கேட்கவில்லை. விஜய்க்கு ஆதரவாக சட்டசபையில் ஓட்டளித்தனர். கொறடா உத்தரவை மீறினால் அந்த எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியும். அந்த வகையில் 25 பேரையும் தகுதி நீக்கம் செய்ய எடப்பாடி பழனிச்சாமி நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது சட்டசபை சபாநாயகராக தவெகவின் ஜேசிடி பிரபாகர் இருக்கிறார்.

    இதனால் அவர் தகுதி நீக்கம் செய்ய தவறும் பட்சத்தில் எடப்பாடி பழனிச்சாமி நீதிமன்றம் செல்லலாம். அப்படி செல்லும்போது எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வர அதிக வாய்ப்புள்ளது. இதனால் 25 பேரும் தகுதி நீக்கம் செய்யப்படலாம். இந்த வேளையில் அமைச்சர் பதவியை முதல்வர் விஜய் வழங்கினால் அது அவருக்கு அவப்பெயரை ஏற்படுத்தலாம். அதுமட்டுமின்றி வழக்கு விசாரணையின்போது நீதிமன்றம் அவரது செயலை கண்டிக்க கூட வாய்ப்புள்ளது. இதனால் விஜய் தயக்கம் காட்டுகிறார்.

    Advertisement

    இரண்டாவது காரணம்

    2வது விஷயம் என்னவென்றால் அதிமுகவினரை அமைச்சரவையில் சேர்ப்பதை தவெகவிற்கு ஆதரவு வழங்கி உள்ள காங்கிரஸ், விசிக, 2 கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. ''அதிமுகவினரை அமைச்சரவையில் சேர்த்தால் ஆதரவை மறுபரிசீலனை செய்வோம்'' என்று மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

    அதேபோல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அதிமுகவினரை அமைச்சரவையில் சேர்க்க மறைமுகமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுபற்றி எங்களின் ஆதரவே தவெகவிற்கு போதும். வேறு சிந்தனை எதுவும் வேண்டாம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. இதனால், அதிமுக எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவி கொடுத்து இவர்களின் ஆதரவை இழக்க வேண்டாம் என்று விஜய் நம்புகிறார். இதனால் நாளைய அமைச்சரவை விரிவாக்கத்தில் அதிமுக எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பு வழங்கும் முடிவில் இருந்து விஜய் பின்வாங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    English Summary

    Vijay Cabinet: AIADMK MLA's will not Include Vijay Cabinet tomorrow: Reports have emerged indicating that Tamil Nadu Chief Minister Vijay is set to expand his cabinet tomorrow. But now reports suggest that CM Vijay has decided to not give Minister post to the MLAs led by AIADMK leaders C.V. Shanmugam and S.P. Velumani.