அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம்.. ஐகோர்ட்டில் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் சொன்ன விளக்கம்!

  • சென்னை: அதிமுக எம்.எல்.ஏக்கள் சுய விருப்பத்தின்படிதான் பதவிகளை ராஜினாமா செய்தார்களா என விசாரணை நடத்தி, திருப்தியடைந்த பிறகே அவர்களின் ராஜினாமா கடிதங்களை ஏற்றுக் கொண்டதாக விளக்கம் அளித்து, சபாநாயகர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    Advertisement

    தவெக தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த நிலையில், அதிமுக எம்.எல்.ஏக்கள் 6 பேர் அடுத்தடுத்து தங்கள் எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். முன்னதாக, அதிமுக எம்.எல்.ஏக்கள் 25 பேர், தவெக அரசுக்கு ஆதரவாக நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களித்தனர்.

    Advertisement

    கொறடா உத்தரவை மீறி, தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஆறு பேருக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கை நிலுவையில் இருந்த போது, அவர்களின் ராஜினாமாவை ஏற்று சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் எம்.எல்.ரவி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

    இந்த வழக்குகளின் விசாரணையின் போது, அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சுய விருப்பத்தின்படி ராஜினாமா செய்தார்களா என சபாநாயகர் விசாரணை நடத்தியிருக்க வேண்டும் எனவும், வழக்கு தொடர்பாக நோட்டீஸ் அனுப்பியும், சபாநாயகர் வழக்கை எதிர்கொள்ளவில்லை என்றும், அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

    Advertisement

    இந்நிலையில், இது தொடர்பாக விளக்கமளிக்கும் வகையில், சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், இந்த வழக்கில் சட்டமன்ற செயலாளர் தாக்கல் செய்த பதில் மனுவே போதுமானது என்பதால், தனியாக பதில் மனு தாக்கல் செய்யவில்லை எனவும், நீதிமன்றத்தின் மீது அதிகபட்ச மரியாதை வைத்திருப்பதாகவும், சட்டமன்ற செயலாளர் மூலமாக பதில் மனு தாக்கல் செய்ததில் எந்த உள்நோக்கமும் இல்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

    மேலும், ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்களும் தங்கள் கைப்பட எழுதிய ராஜினாமா கடிதங்களை சமர்ப்பித்ததாகவும், சுய விருப்பத்தின்படிதான் ராஜினாமா செய்கிறார்களா என ஒவ்வொருவரிடமும் விசாரணை நடத்தி, திருப்தியடைந்த பிறகே அவற்றை ஏற்றுக் கொண்டதாகவும், சபாநாயகர் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    Advertisement

    அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை ஏற்றது சட்டப்படி செல்லுபடியானதுதான் எனவும், இதில் எந்த சட்டவிரோதமும் இல்லை என்பதால், மனுவை ஏற்று தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு, ஐகோர்ட் தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, சபாநாயகரின் மனுவுக்கு பதில் அளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என அக்ரி கிருஷ்ணமூர்த்தி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் எஸ்.ஆர்.ராஜகோபால் கோரிக்கை விடுத்தார்.

    இதை ஏற்று, சபாநாயகர் மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்ய அதிமுக சட்டமன்ற கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி தரப்புக்கு அனுமதியளித்த நீதிபதிகள், விசாரணையை செப்டம்பர் 1 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

    English Summary

    A petition has been filed on behalf of the Speaker in the Madras High Court, explaining that the resignation letters of the AIADMK MLAs were accepted only after conducting an inquiry and being satisfied that they had resigned of their own volition.