சென்னை: சட்டமன்ற இடைத்தேர்தல் அறிவிப்புக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக வழக்கு தொடர்ந்துள்ளது. அதிமுக எம்எல்ஏக்கள் ஜெயக்குமார், மரகதம் குமரவேல், சத்தியபாமா, இசக்கி சுப்பையா ஆகியோர் ராஜினாமா செய்த 4 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்தும் பணிகளை ஆணையம் தொடங்கிய நிலையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கட்சி தாவல் தடை சட்டத்தை நீர்த்துப் போக செய்யும் வகையில் தகுதி நீக்க நடவடிக்கைக்கு ஆளான 4 எம்எல்ஏக்கள் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றது சட்டவிரோதம் என மனுவில் கூறியுள்ளனர். அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி தொடர்ந்த இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் நாளை மறுநாள் விசாரணைக்கு வருகிறது.
கடந்த மே 13 ஆம் தேதி நடைபெற்ற தவெக அரசின் மீதான பெரும்பான்மை வாக்கெடுப்பின் போது, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் 25 அதிமுக எம்.எல்.ஏ.க்கள், தவெக-வுக்கு ஆதரவாக வாக்களித்தனர். அவர்களுக்கு எதிராக கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சபாநாயகரிடம் மனு அளித்திருந்தார். இந்நிலையில், மதுராந்தகம் எம்.எல்.ஏ. மரகதம் குமரவேல், பெருந்துறை எம்.எல்.ஏ. ஜெயக்குமார், தாராபுரம் எம்.எல்.ஏ. சத்தியபாமா, அம்பாசமுத்திரம் எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ஆகியோர் தங்கள் எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்து விட்டு, தவெக-வில் இணைந்தனர். தகுதி நீக்க நடவடிக்கை நிலுவையில் உள்ள போது, அவர்களின் ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் ஏற்றுக் கொண்டதை எதிர்த்து தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் அதன் தலைவர் எம்.எல்.ரவி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். நான்கு எம்.எல்.ஏ.க்கள், தவெகவில் இணைவது குறித்து ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ராஜினாமா செய்ததும், தவெகவில் இணைந்துள்ளதால், இது திடீரென எடுத்த முடிவல்ல. இது அரசியல் சட்ட விதிகள் மீறப்பட்டுள்ளதால், ராஜினாமாவை ஏற்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும். நான்கு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதிக்கக் கோரியும் வழக்கு தாக்கல் செய்துள்ளதால், அந்த வழக்கையும் சேர்த்து விசாரணைக்கு எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், கொறடா உத்தரவை மீறி, தவெக அரசுக்கு வாக்களித்த 25 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளித்த, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 21 பேரின் மன்னிப்பை ஏற்றுக் கொண்டதாக கடிதம் அளித்ததால், அவர்கள் மீதான நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது. ராஜினாமா செய்த நான்கு பேரும் தாமாக முன் வந்து பதவி விலகியுள்ளனர். இருப்பினும், தகுதி நீக்க நடவடிக்கை தொடர்பாக விளக்கம் கேட்டு அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சட்டமன்ற விதிப்படி, அவர்களுக்கு எதிரான நடவடிக்கையில் உத்தரவு பிறப்பிக்கப்படும் எனத் தெரிவித்தார். இதையடுத்து, அதிமுக தரப்பின் கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், வழக்குகளின் விசாரணையை ஜூன் 17 ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி அருள் முருகன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் எஸ்.ஆர். ராஜகோபால் ஒரு முக்கிய கோரிக்கையை வைத்தார்.