“அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமாருக்கு மருத்துவரை வைத்து ஆளுநர் பரிசோதனை நடத்த வேண்டும்” - இன்பதுரை

  • சென்னை: அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் நல்ல மனநிலையில் இருக்கிறாரா என்பதை ஆளுநர் மருத்துவரை வைத்து பரிசோதிக்க வேண்டும் என அதிமுக எம்.பி இன்பதுரை பேசியுள்ளார்.

    Advertisement

    சென்னை விமான நிலையத்தில் அதிமுக எம்.பியும் மூத்த வழக்கறிஞருமான இன்பதுரை இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அவதூறு பரப்புவதாக குற்றம்சாட்டி வழக்கு தொடர்வது குறித்து கேள்வி எழுப்பினர்.

    Advertisement

    அதற்கு பதில் அளித்த இன்பதுரை, "தமிழக அமைச்சர்களைப் பொறுத்தவரை, காலையில் விடிந்தால் அவர்களின் முதல் பணி அதிமுக மீது அவதூறு பேசுவது. ஏதோ ஒரு வகையில் பேட்டி கொடுத்தோ, பொது மேடையில் பேசியோ அல்லது அறிக்கை விட்டோ அதிமுக மீது வன்மத்தைக் கொட்டுகிறார்கள். இதை இப்படியே விட்டுவிட முடியாது. சட்டப்படி சந்திக்க வேண்டும் என்பது எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா எங்களுக்குக் கற்றுத் தந்த பாடம்.

    குறிப்பாக, இரண்டு அமைச்சர்கள் எடப்பாடியார் மீதும், அதிமுக மீதும் தொடர்ந்து அவதூறு பேசி வருகின்றனர். அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மீது கிரிமினல் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஒரு அமைச்சர் மீது கிரிமினல் வழக்கு தொடரும்போது ஆளுநரிடமிருந்து அனுமதி பெற வேண்டும். அதன்படி, ஆளுநருக்கு நாங்கள் கடிதம் எழுதியுள்ளோம். மாநில அமைச்சர்களை நியமிப்பது ஆளுநர்தான். அவர்தான் அமைச்சர்களின் நடவடிக்கைகளைக் கவனிக்க வேண்டும்.

    Advertisement

    காலையில் எழுந்தவுடன் பல் துலக்குகிறாரோ இல்லையோ, அதிமுகவை பற்றி பேசுவதையே அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் வாடிக்கையாக வைத்துக் கொண்டுள்ளார். அவர் நல்ல மனநிலையில் இருக்கிறாரா என்பதைப் பார்க்க வேண்டும். இதை ஒரு கடுமையான குற்றச்சாட்டு என்று பார்க்கக் கூடாது. ஏனென்றால், அவர் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கிறார்.

    நாங்கள், 'இவ்வாறு பேசியது தவறு' என்று நோட்டீஸ் அனுப்பியிருக்கிறோம். ஆனால், அந்த நோட்டீஸ் குறித்தும் அவர் மீண்டும் அவதூறாகப் பேசுகிறார். அப்படியென்றால், அவர் நல்ல மனநிலையில் இருக்கிறாரா என்பதை ஆளுநர் மருத்துவரை வைத்து பரிசோதனை செய்ய வேண்டும். அது ஆளுநரின் கடமையாகும்.

    Advertisement

    ஏன் நான் அப்படிச் சொல்கிறேன் என்றால், செந்தில் பாலாஜி நிர்மல் குமார் தன்னைப் பற்றி அவதூறு பேசியதாக ஒரு வழக்கு தொடர்ந்தார். அப்போது நிர்மல் குமார் அதிமுகவில் இருந்தார். அந்த வழக்கில் அவர் மன்னிப்பு கேட்டார். அதுமட்டுமல்லாமல், கடந்த திமுக ஆட்சியில் மழைக்காலங்களில் மின் கசிவு ஏற்பட்டது என்று ஒரு பதிவு போட்டார், அந்தப் பதிவு பொய்யான பதிவு என்று அன்றைய திமுக அரசு வழக்கு தொடர்ந்தது.

    அந்த வழக்கில் நான்தான் நிர்மல் குமாருக்கு வழக்கறிஞர். அந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது, 'இனிமேல் அவ்வாறு செய்ய மாட்டேன்' என்று அவர் சொன்னார். ஒன்று பேசினால் அதில் நிற்க வேண்டும். ஆனால் நிர்மல் குமார் அப்படி அல்ல. எதையாவது பேசிவிட்டு மீண்டும் மன்னிப்பு கேட்கிற மனோபாவம் உள்ளவர் எப்படி சரியான மனநிலை உடையவராக இருக்க முடியும் என்ற கேள்வியை வைக்கிறேன். ஆளுநர் இதில் உடனடியாகத் தலையிட்டு, அவரை அழைத்து என்னவென்று விசாரிக்க வேண்டும். மருத்துவரை வைத்து பரிசோதனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்." என்றார்.

    Advertisement

    மேலும் பேசிய இன்பதுரை, "கட்சிக்கு என்று சொந்த பலம் இருந்தால் ஆட்கள் இருந்தால் ஏன் அதிமுக நிர்வாகிகளை சேர்க்கணும்? முகமது பின் துக்ளக் என்று நீங்கள் ஒரு படம் பார்த்திருப்பீர்கள். அந்த படத்தில் போதிய எம்.பிக்கள் இல்லாததால் அனைவரையும் துணை பிரதமர் ஆக்குவேன் என்று துக்ளக் சொல்லி இருப்பார். அதே போல தான் தாராபுரம் இடைத்தேர்தலில் அதிமுகவிலிருந்து தவெகவிற்கு சென்றவர்கள் உட்பட ஏறக்குறைய 20 பேருக்கு துணை பொதுச் செயலாளர் பதவி தந்த கூத்தெல்லாம் நடந்தது." எனக் கூறியுள்ளார்.

    English Summary

    AIADMK MP Inbadurai has stated that the Governor should have a doctor examine Minister CTR Nirmal Kumar to determine whether he is in a sound state of mind.