சென்னை: தவெகவில் மரியாதை இல்லை என்று தலைநகரைச் சேர்ந்த முன்னாள் அதிமுக மாவட்டச் செயலாளர்களான ராஜேஷ், பாலகங்கா, கேபி கந்தன் ஆகியோர் புலம்ப தொடங்கி இருக்கின்றனர். உரிய பதவி அளிக்கப்படாததோடு அமைச்சர்களும் தங்களிடம் எந்த ஆலோசனையும் செய்யவில்லை என்று ஆதரவாளர்களிடம் பேச தொடங்கி இருக்கின்றனர்.
தமிழ்நாட்டில் தவெக ஆட்சியை பிடித்த பின் அதிமுகவில் இருந்து சாரை சாரையாக ஏராளமான நிர்வாகிகள் தாவினார்கள். அதிமுகவில் இருந்து 90% தொண்டர்கள் தவெகவில் இணைய வேண்டும் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவும் கேட்டு கொண்டார். அதிமுகவில் இருந்து வருபவர்களுக்கு உரிய மரியாதையும், பதவியும் கண்டிப்பாக அளிக்கப்படும் என்றும் அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் உறுதி கொடுத்தார்.
இதனால் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் பலரும் தவெக பக்கம் நகர்ந்தனர். குறிப்பாக தலைநகர் சென்னையில் தவெக அடைந்த வளர்ச்சியால், அதிமுகவின் முக்கிய மாவட்டச் செயலாளர்களான கேபி கந்தன், ராஜேஷ், பாலகங்கா ஆகியோர் தவெகவில் இணைந்தனர். இவர்களை புஸ்ஸி ஆனந்த் வரவேற்றார். ஆனால் இவர்களுக்கு பெரிதாக பொறுப்புகள் அளிக்கப்படவில்லை. ஏற்கனவே சென்னையில் தவெகவின் அமைச்சர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் பொறுப்பில் உள்ளனர். இதனால் தலைநகரில் மாற்றுக் கட்சிகளில் இருந்து வந்தவர்களுக்கு பதவி கொடுக்க முடியாமல் தவெக தடுமாறி வருகிறது. இந்த நிலையில் மதுராந்தகம் இடைத்தேர்தலில் தவெக பரபரப்பாக பணியாற்றி வருகிறது. சென்னையில் இருந்து அத்தனை அமைச்சர்களும், நிர்வாகிகளும் மதுராந்தகத்தில் பணியாற்றி வருகின்றனர். ஆனால் அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்தவர்களுக்கு எந்தவித அழைப்பும் தவெக தலைமையால் விடுக்கப்படவில்லை. அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், மரிய வில்சன் ஆகியோர் அதிமுகவில் இருந்து வந்தவர்களை கொஞ்சம் கூட சந்திப்பதோ, அவர்களுடன் உரையாடுவதோ கிடையாது. விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்து வந்தவர்களை மட்டுமே புஸ்ஸி ஆனந்தும் நம்புகிறார். இருப்பினும் லோக்கலில் ஆதரவு குறைந்துவிடக் கூடாது என்பதற்காக சொந்த செலவில் பெட்ரோல் போட்டு மதுராந்தகம் வரை தினமும் சென்று வருகிறார்கள். இதனால் அதிமுக முன்னாள் மாவட்டச் செயலாளர்கள், அதிமுகவில் இருந்திருந்தால் மரியாதையுடன் இருந்திருப்போம். ஆளுங்கட்சியில் இருந்தாலும், இங்கே ஒருவரும் மதிப்பதில்லை என்று புலம்ப தொடங்கி இருக்கின்றனர்.